PUBLISHED ON : ஜன 25, 2025

இரவாடை அணிந்து படுத்திருந்தாள், மிஷ்கா. அவளுக்கு வயது, 10; உயரம், 125 செ.மீ.,வட்ட முகம், பாப் செய்யப்பட்ட தலைகேசம், கரிய கண்கள், கத்தி மூக்கு, பவள வாய், கீழ் உதட்டின் வலது ஓரம் மச்சம்.
இனிமை தொனிக்க பாடுவாள் மிஷ்கா. கேட்போரை வசீகரிக்கும்.
நேற்று தான் முன் மேல் வரிசை பற்கள் இரண்டு விழுந்தன.
அவற்றை எடுத்து மணம் மிக்க சோப் தடவி கழுவினாள். நகை வைக்கும் சிறு வெல்வெட் பெட்டியில் அவற்றை பத்திரப்படுத்தினாள்.
பல் இல்லாத மேல் ஈறு பகுதியை கண்ணாடியில் பார்த்தாள்.
இரு போன்சாய் இருட்டுகள்.
மனதில் -
பல் இல்லாமல் அசிங்கமாக இருக்கிறோமா...
முயல் போல் காட்சியளிக்கிறோமா...
மீண்டும் பல் முளைக்குமா...
பழைய பல் அளவு, புதிதாக முளைப்பது இருக்குமா; பெரிதாய் துருத்துமா...
பள்ளி தோழியர் கிண்டல் செய்தால் எப்படி எதிர்கொள்வது...
இப்படி பல கேள்விகளில் மூழ்கி தத்தளித்தாள் மிஷ்கா.
அறையில் வெளிச்சம் ரேஷன் செய்யப்பட்டிருந்தது.
மைக்ரோ நொடி இடைவெளியில், அறைக்குள் லட்சம் வோல்ட் வெள்ளை மின்சாரம் சொடுக்கியது.
'டட்டளாஷ்...'
ஒரு உருவம் காற்றில் பூத்தது.
அதற்கு, தங்க நிற தலை கேசமும், குதிரை வால் கொண்டையும் பிதுங்கின.
நாவல் பழ நிறத்தில் தரையில் தவளும் அங்கி அணிந்திருந்தாள்.
நான்கு பச்சை நிற இறக்கைகள் முளைத்திருந்தன.
அழகிய குண்டு கண்கள், குட்டி மூக்கு, வெல்வெட் செர்ரி உதடுகள், கால்களில் பிங்க் நிற காலணிகள்.
வலது கையில் மந்திரக்கோல், தலையில் 'க்ளைடாஸ்கோப்' நிறங்களில் மின்னும் கிரீடம்.
இடுப்பு பவுச்சில் குழந்தைகளிடம் இருந்து சேகரித்த பால் பற்கள் இருந்தன.
'ஹலோ மிஷ்கா... குட்டி பெண்ணே... எப்படி இருக்கிறாய்...'
''யார் நீ... என் அறைக்குள் எப்படி வந்தாய்...''
'பார்த்தால் தெரியவில்லை... நான் தான் பல் தேவதை. கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு இணையாக புகழ் பெற்றவள்...'
''எங்கிருந்து வருகிறாய்...''
'குழந்தைகளின் பற்களால் கட்டப்பட்ட வெண்முத்து கோட்டையில் வசிக்கும் நான், அங்கிருந்து வருகிறேன்...'
''உன் பெயர் என்ன...''
'பொதுவான பெயர் பல் தேவதை...'
''உனக்கு என்ன வயதாகிறது...''
'எனக்கு வயது, 111 ஆகிறது...'
''என்னை எதற்கு பார்க்க வந்தாய்...''
'உலகில் பால் பற்கள் விழும் சிறுவர், சிறுமியரை சந்திப்பது என் வழக்கம். நேற்று தானே உனக்கு பல் விழுந்தது. அதை சுத்தம் செய்து நீ பாதுகாத்த விதம் அருமை. அத்துடன், உன் பெயரும் மிகவும் பிடித்திருக்கிறது...'
''நீ தான் பல் தேவதை என்பதை எப்படி நம்புவது...''
நானோ நொடியில் வெள்ளை நிற பறவை, மிருகங்களாய் மாறி வினோதம் காட்டியது பல் தேவதை.
'மிஷ்கா... அறைக்குள் என்ன வாசனையடிக்கிறது என்று பார்...'
அறைக்குள் டெட்டால் வாசனையும், லிடோகைன் வலி மறக்கடிப்பான் வாசனையும் சுழன்றடித்தன.
லேசர் ஸ்கேலிங் மிஷின் டிஜிட்டல் எக்ஸ்ரேயுனிட் டென்டல் சேர் கூடிய அறை தோன்றி மறைந்தது.
இடுப்பு பவுச்சை திறந்து காட்டியது பல் தேவதை.
நுாற்றுக்கணக்கான சிறுவர், சிறுமியர் பால் பற்கள் சோளிகள் போல, உளி வடிவ முத்துகள் போல அதற்குள் நிறைந்திருந்தது.
''இந்த பற்களை என்ன செய்வாய் பல் தேவதை...''
'என் அரண்மனையை அழகுப்படுத்துவேன்...'
''பொதுவாக பால் பற்கள் எப்போது விழும்...''
'ஆறு வயதில் விழ ஆரம்பிக்கும், 12 வயதில் பூர்த்தியாகும். உனக்கு, 10 வயதில் பால் பற்கள் விழுந்துள்ளன...'
''என்ன காரியம் வேண்டி என்னிடம் வந்தாய்...''
பல் தேவதை கண்கள் பேராசையால் மின்னின.
'உன் இரு பற்கள் எனக்கு வேண்டும்...'
''எதையும் இலவசமாக தர மாட்டேன். நீ பதிலுக்கு என்ன தருவாய்...''
'அழகிய விலை உயர்ந்த பரிசுகள் தருவேன்...'
''தேவையில்லை... உன்னால் குழந்தைகளுக்கு வரம் தர முடியுமா...''
'என்ன வரம் தேவை... சொல்...'
''எனக்கு இரண்டு வயதான போது, மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு என் அம்மா இறந்து விட்டார். எட்டு ஆண்டுகளாக, தந்தையின் அரவணைப்பில் உயிர் வாழ்ந்து வருகிறேன். தந்தை மலையேறும் வீரர். பெயர் துருவ். என்னை அவ்வப்போது பள்ளி விடுதியில் தங்க வைத்து இமயமலை ஏற சென்று விடுவார்...
''இடைப்பட்ட காலத்தில் அவரது உயிருக்கு எத்தனையோ முறை ஆபத்துகள் ஏற்பட்டுள்ளன. மரணக் காயங்களிலிருந்து மீண்டு வந்திருக்கிறார். எனக்கு அப்பான்னா, கொள்ளைப் பிரியம். சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் எல்லாம் அவர் தான். எந்த கண்டம் வந்தாலும், அதிலிருந்து தப்பித்து, என் தந்தை, 100 வயது வரை வாழ வரம் தருவாயா பல் தேவதையே...''
'இரண்டு பற்களுக்கு நீ கேட்கும் விலை அதிகம்...'
தலையணைக்கு அடியிலிருந்து பற்களை எடுத்து தேவதையிடம் நீட்டினாள் மிஷ்கா.
பார்த்து வாங்கி பதுக்கியது பல் தேவதை.
'உன் தந்தைக்கு ஆயுள் கூடினால், உனக்கு ஆயுள் குறையும். பரவாயில்லையா...'
''பரவாயில்லை...''
'வரம் தந்தேன் சிறுமியே...'
பல் தேவதை லட்சம் ஒளிப்புள்ளிகளாகி, உய்க்கி, புய்க்கி மறைந்தது.
''நன்றி... நன்றி... நன்றி...''
மிழற்றியபடி கனவிலிருந்து விடுபட்டாள் மிஷ்கா.
மகளின் மிழற்றல் கேட்டு, பக்கத்தில் படுத்திருந்த துருவ் எழுந்தான்.
''என்னம்மா பட்டுக்குட்டி. கனவு கண்டியா...''
''ஆமாம்ப்பா...''
''என்ன கனவு...''
கனவை கூறினாள் மிஷ்கா.
நீண்ட பெருமூச்சு விட்டான் துருவ்.
''உன் ஆசையும், விருப்பமும் கனவாய் வந்திருக்கிறது. இதுவரை கமி ரிதா செர்பா, 30 முறை எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்திருக்கிறார். அவர் கே2, சோ ஒயு, ஹாட்சே மற்றும் மனஸ்லு சிகரங்களில் ஏறி வெற்றி கொண்டிருக்கிறார்...
''அவரது சாதனையை முறியடிக்க இன்னும் சில நாட்களில் எவரெஸ்ட் புறப்படுகிறேன். உயிருடன் திரும்புவேனா இல்லையா என்பது கடவுளுக்கு தான் தெரியும். நான் இல்லாமல் சுயமாய் வாழ தயாராக இரு பூக்குட்டி...''
தந்தையின் வாயை பொத்தி கட்டிக் கொண்டாள் மிஷ்கா.
துருவின் கண்களில் மரண பீதி தலைவிரித்தாடியது.
எவரெஸ்ட் சிகரம், 30 ஆயிரம் அடி உயரமுள்ளது.
அப்போது திபெத்திய மொழியான ஷெர்பாவில், 'மீண்டும் சிகரம் ஏறத்துணியாதே துருவ்... இறந்து போவாய்...' என கிரீச்சிடும் சத்தம் கேட்டது.
- தொடரும்...
- மீயாழ் சிற்பிகா