PUBLISHED ON : பிப் 15, 2025

முன்கதை: மலையேற்ற வீரர் துருவ் மகள் மிஷ்கா; கற்பனை வளமும் நம்பிக்கையும் நிறைந்த சிறுமி. தந்தைக்கு நீண்ட ஆயுள் கேட்டு தேவதையிடம் வரம் வாங்கினாள். தன் மலையேற்ற ஆர்வத்தை தந்தையிடம் தெரிவித்த போது, பறந்து வந்து மின்விசிறியில் சிக்கிய மைனா கூழாகி விழுந்தது. இனி -
கூழாக கிடந்த மைனாவை வெறித்தான் துருவ்.
''என்னப்பா இது...''
நடுக்கத்துடன் கேட்டாள் மிஷ்கா.
''வழி தவறி வந்து, மின்விசிறியில் அடிப்பட்டு விழுந்து இறந்து விட்டது இந்த மைனா. ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான உயிரினங்கள் உலகில் பிறக்கின்றன; இறக்கின்றன. இறப்பும், பிறப்பும் இயற்கையின் தினசரி கண்கட்டு வித்தை...''
மைனாவின் உடலை அப்புறப்படுத்தினான் துருவ்.
''எனக்கென்னமோ இது அபசகுனமா படுது...''
''கெட்ட சகுனம், நல்ல சகுனம் மனிதரின் மூடநம்பிக்கை. இதை எல்லாம் மனதில் ஏற்றிக் கொள்ளாதே... வா உன்னை உப்பு மூட்டை துாக்கி, ஐந்து கி.மீ., நடக்கிறேன்...''
மகளை உப்பு மூட்டை துாக்கினான் துருவ்.
''ரொம்ப கனக்கிறேனா அப்பா...''
''ரோஜாக் குவியல் நீ... என் முதுகு பகுதியல் வெல்வெட் மெது மெதுப்பு...''
அப்பாவை குதிரையாக பாவித்து, ''ைஹய்... ைஹய்... ச்ரே...'' சொடுக்கினாள்.
''நீங்க குதிரை தானே அப்பா...''
''இல்லையம்மா... நான் ஒரு கோவேறு கழுதை...''
இதை பார்த்து வழியில் போவோர், வருவோர் சிரித்தனர்.
'இந்த வண்டி எங்கே போகுது; நாங்களும் ஏறிக்கலாமா...'
'இந்த ரதத்தில் இளவரசி மட்டும் தான் சவாரிக்கலாமா...'
'ஆஹா... இது மாதிரி, எங்கப்பா முதுகுலயும் உப்பு மூட்டை ஏறணும்...'
'ஜமாய்...'
'எல்லாம் கல்யாண வயசு வரைக்கும் தான். கல்யாணம் ஆகிட்டா பொண்ணுக அப்பாக்களுக்கு டாட்டா காண்பிச்சு போய்ட்டே இருப்பர்...'
இப்படி பல வித குரல்கள் எதிர்வந்தன.
''எங்கப்பாவுக்கு நுாறு வயசானாலும், எனக்கு நுாறு வயசானாலும் சரி, நான் எப்பவுமே குழந்தை தான்... படிப்போ, பணமோ, பதவியோ எதுவுமே என்னை மாத்தாது...''
'சொன்ன மாதிரியே பெத்தவனை மகிமைப்படுத்து...'
உப்பு மூட்டை துாக்கி ஊர்வலம் போய் வீடு திரும்பினான் துருவ்.
''மதியம் என்ன சமைக்கட்டும் மிஷ்கா...''
''உங்க இஷ்டம் போல...''
''சரி... பிரியாணி தயாரிக்கிறேன்...''
''சரிங்க...''
சமைத்துக் கொண்டிருந்த போது, வாசலில் அழைப்பு மணி, சங்கீதமாய் கேட்டது.
மிஷ்கா, 'மேஜிக் ஐ' வழியாக பார்த்தாள்.
ஒரு, 50 வயது மனிதர் சுமோ பயில்வான் அளவில் நின்றிருந்தார். அவரது கையில் பொக்கே இருந்தது. அருகில் அவரது உதவியாளர் கையில் ஒரு பித்தளை செம்பு.
''பாப்பா... எவரெஸ்ட் வீரர் துருவ் இருக்கிறாரா...''
''இருக்கிறார். நீங்க...''
''நான் ஒரு தொழிலதிபர்... கோவையிலிருந்து வருகிறேன்...''
விசிட்டிங் கார்டை நீட்டினார்.
வாங்கி படித்தவள், ''உள்ளே வாங்க அங்கிள்...'' என்றாள்.
டோக் தொப்பியும், ஏப்ரனும் அணிந்திருந்த துருவ், சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்தான்.
''வெல்கம் உக்காருங்க... 10 நிமிஷத்துல வந்திடுறேன்...''
பொக்கேயை வாங்கியன் பின், இரண்டு கப் ஆரஞ்சு சாறுகளை நீட்டினாள் மிஷ்கா.
''உன் பேரு என்னம்மா...''
''மிஷ்கா...''
''அழகான பெயர். உங்கப்பாவுக்கு ஒரே மகளா...''
''ஆமாம்... நான் அவருக்கு மகள்; அவர் எனக்கு மகன்...''
''என்ன படிக்கிறாய்...''
''நான், 5ம் வகுப்பு படிக்கிறேன்...''
டோக்கையும், ஏப்ரனையும் கழற்றி விசிறியபடி வந்து அமர்ந்தான் துருவ்.
''உங்க பெயர் சமையலறையில் இருக்கும் போதே காதில் விழுந்தது. கோவையில் என்ன செய்றீங்க...''
''வெட்கிரைண்டர் தொழிற்சாலை வெச்சுருக்கேன். தவிர, 10 விதமான தொழில்கள் செய்றேன். ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் டர்ன் ஓவர்...''
''என்ன விஷயமா என்னை பார்க்க வந்தீங்க...''
''நீங்க, 31ம் முறையாக எவரெஸ்ட் ஏற போறீங்கன்னு கேள்விப்பட்டேன்... வாழ்த்துகள்...''
''நன்றி...''
''எனக்கு நீங்க ஒரு உதவி செய்யணும்...''
''என்ன...''
''எங்கப்பா, 82 வயதான மலையேற்ற காதலர். அவர் இரண்டு வாரங்களுக்கு முன் இறந்து விட்டார். அவரை தகனம் செய்து, அஸ்தியை இங்கு கொண்டு வந்திருக்கேன்...''
''சரி...''
''நீங்க எவரெஸ்ட் உச்சியை தொட்டதும், எங்கப்பவோட, 'ப்ளோ அப்'பை அங்க வெச்சு, அஸ்தியை துாவி விடணும். இரண்டையும் செஞ்சதுக்கு ஆதாரமா ஒளிப்படமும், சலனப்படமும் பதிவு பண்ணி எனக்கு தரணும்...''
''வேலைப்பளுவில் நான் மறந்துட்டா...''
''நீங்க இதை செஞ்சா... உங்களுக்கு, 30 லட்ச ரூபாய் தரேன்...''
''பணத்துக்காக, நான் எதையும் செய்வதில்லை...''
''ஒரு மலையேற்ற காதலரின் கடைசி விருப்பத்தை நிறைவேற்றி தாங்க. பணம் பத்தலேன்னா, எவ்வளவு வேணும்ன்னாலும் தரேன்...''
ஏறக்குறைய அழும் நிலையில் இருந்த பெரியவரை ஆறுதல் படுத்தினான் துருவ்.
''பணம் வேண்டாம்...''
''பணம் உங்களுக்கு வேணாம்; உங்க மகள் படிப்புக்கு உதவட்டுமே...''
தயக்கமாக பெற்றான் துருவ்.
''நீங்க என் கிட்டயிருந்து அப்பாவோட அஸ்தியை வாங்கிக்கிற மாதிரி ஒரு செல்பி எடுப்போம்...''
செல்பி எடுக்கப் போகும் நொடியில் -
வந்தவரின் உதவியாளர் காக்காய் வலிப்பு வந்து, தரையில் விழுந்தார். வாயில் நுரை பொங்கியது. கண்கள் ஏகாந்தத்தில் நட்டுக் கொண்டன.
விக்கித்தாள் மிஷ்கா.
- தொடரும்...
- மீயாழ் சிற்பிகா