PUBLISHED ON : மார் 01, 2025

முன்கதை: மலையேற்ற வீரர் துருவ் மகள் மிஷ்கா, நம்பிக்கையும், கற்பனை வளமும் மிக்க சிறுமி. தன் தந்தைக்கு நீண்ட ஆயுள் கேட்டு தேவதையிடம் வரம் வாங்கினாள். தன் அம்மாவின் உருவில் ஒரு சிற்பம் உருவாக்க தந்தையிடம் கேட்டாள். அதற்காக இருவரும் ஸ்பதியை தேடி கும்பகோணம் சென்றனர். அதன்படி, சிலையை வாங்கி திரும்பினர். இனி -
அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடி --
இரு கோரைப்பாய்களை விரித்து, தலையணைகளை தலைமாட்டில் வைத்தான் துருவ்.
அம்மா சிலையுடன் ஒரு பாயில் வந்து படுத்தாள் மிஷ்கா.
தந்தையும், மகளும் இரவாடை அணிந்திருந்தனர்.
''இன்று கடைசி இரவு இல்லையா மிஷ்கா...''
அப்பாவின் வாயை மூடினாள் மிஷ்கா.
''அபசகுனமா பேசாதீங்கப்பா... எவரெஸ்ட் சிகரம் போகப் போவதற்கு முந்தைய ராத்திரி என சொல்லுங்கள்...''
''மகளே... கடந்த, 30 முறை எவரெஸ்ட் ஏறும் போது இல்லாத பயம் இப்போது வந்திருக்கிறது. மரணக்கிணற்றை பைக்கில் சுற்றும் சர்க்கஸ் இளைஞன் சறுக்கி விழுவானா... புர்ஜ் கலீபாவின், 160ம் மாடி ஜன்னலை சுத்தம் செய்யும் பணியாள் கயிறு அறுந்து அதளபாதாளத்தில் வீழ்வானா... தொடர்ந்து புலி சவாரி செய்யும் வீரனை புலி கவிழ்த்து கடித்து குதறுமோ...''
''ஜன்னி வந்த மாதிரி தத்துபித்துன்னு உளர்றீங்க... இந்த முறையும் எவரெஸ்ட் உச்சியை தொட்டு திரும்புவீர்...''
''உன் பேச்சு பலிக்கட்டும்...''
''வானத்தை பாருங்கள் அப்பா. ஆப்பச்சட்டியில் பொரித்த பாப்கான்கள் போல நட்சத்திரங்கள்...''
''ஆஹா...''
''நட்சத்திர வானத்தை பற்றி எதாவது சொல்லுங்களேன் அப்பா...''
''நம் தலைக்கு மேலே, பல ஆயிரம் கோடி நட்சத்திரங்கள் உள்ளன. தவிர, பல கோடி விண்மீன் மண்டலங்களும் உள்ளன...''
''அப்பா... பூமியில் வாழ்ந்து இறந்த உயிரினங்கள் வானத்தில் போய் ஒட்டிக் கொண்டு நட்சத்திரங்கள் ஆகின்றன. எரி நட்சத்திரங்கள் பூமியில் மறு ஜென்மம் எடுக்கும் உயிரினங்கள்...''
''அப்படியா...''
''உங்களுக்கு வலது மேலே பாருங்கள். கொட்டைப் பாக்கு அளவில், ஒரு நட்சத்திரம் கண் சிமிட்டுவதை. அது ஏதோ சொல்ல விழைகிறது...''
''நமக்கு ஏன் ஒரு நட்சத்திரம் ஏதோ சொல்லணும்...''
''சரியான டியூப்லைட் அப்பா நீங்கள். அந்த நட்சத்திரம் தான், என் அம்மா. அப்பாவும், பொண்ணும் நல்லாயிருக்கீங்களான்னு குசலம் விசாரிக்கிறாங்க. அத்துடன், எவரெஸ்ட் சிகரம் ஏறும் சாதனையை வெற்றிகரமாக முடித்து வர வாழ்த்துராங்க...''
''அப்படியா...''
அந்த நட்சத்திரத்தை நுண்ணிப்பாக பார்த்தான் துருவ்.
'நான் இல்லாம் தனிமையில் தவிக்கிறாயா... நம்ம மகளை வளர்க்க ரொம்ப கஷ்டப்படுறியோ... கவலைப்படாதே. இரவும், பகலும் உங்க ரெண்டு பேர் தலை மேல நின்னு நோட்டமிட்டுக் கிட்டே தான் இருப்பேன். நீங்களிருவரும் என் கண்கள்...'
பேசாமல் பேசியது நட்சத்திரம்.
தாவி பிடிக்க முயன்றான் துருவ்.
நட்சத்திரம் கைகளுக்கு எட்டுமா என்ன... நழுவி ஓடியது.
''அம்மாவை நட்சத்திரமாக பாவிக்க மனதுக்கு நன்றாகத்தான் இருக்கிறது. உன் கற்பனை நிஜமாக இருக்கட்டும்...''
''நான் சொல்வது கற்பனை அல்ல. உண்மையான உண்மை! தினமும் அம்மாவுடன் பேசுவேன். அம்மாவும், என்னுடன் பேசுவார்...''
''நீ அதிர்ஷ்டசாலி... உன்னுடன் பேசும் அம்மா என்னிடம் பேசுவதில்லை...''
''நாளையிலிருந்து அம்மாவை பேச சொல்கிறேன். அம்மாவின் அன்பு என்றும் பொய்ப்பதில்லை...''
மகளின் முகத்தை ஏந்தி பிடித்தான் துருவ். தன் முகத்துக்கு நேரே கொண்டு நிறுத்தினான்.
''என்னப்பா பாக்குறீங்க...''
''நீ என் மகள் என்பதால், நான் உன் மீது பாசத்தை கொட்டுவதில்லை. நீ, என் அம்மாவைப் போலவும், அம்மா வழி பாட்டி போலவும் இருக்கிறாய். உனக்கு மூக்கு கண்ணாடி மாட்டினால், அப்படியே நீ என் அம்மா தான். உனக்கு மேல் முன்னம்பற்கள் நடுவில் ஒரு சிறு இடைவெளி இருக்கும். அதே இடைவெளி என் பாட்டிக்கும் உண்டு. நீ வாய் விட்டு சிரித்தால், அப்படியே அச்சு அசலாய் என் பாட்டி போலவே இருக்கிறாய். பாட்டி, அம்மா, பேத்தி, த்ரி இன் ஒன் பாப்பா நீ...''
''அம்மாவின் சாயல் எனக்கு அறவே இல்லையா...''
''நீ பேசுவது, நடப்பது, பார்ப்பது எல்லாம் அப்படியே உன் அம்மா தான்...''
''உங்கள் சாயல் என்னிடம் இல்லையா...''
''உலகின் அனைத்து அழகான பறவைகளின் சாயல் உன்னிடம் இருக்கிறது. உனக்கு இரு இறக்கைகள் இருந்தால், நீ ஒரு தேவதை தான்...''
''எல்லா அப்பாக்களுக்கும் உள்ள மன வியாதி உங்களுக்கும் இருக்கிறது. சுமார் மூஞ்சி பாப்பாவை, சூப்பர் மூஞ்சியாக வர்ணித்து உசுப்பேத்தி வைக்கிறது இந்த தகப்பன்மார் வேலையா போச்சு...''
விழுந்து விழுந்து சிரித்தான் துருவ்.
''எவரெஸ்ட் சிகரம் என் முதல் காதல். உங்க அம்மா இரண்டாம் காதல். தங்கத்தாமரை மகள் நீ என் மூன்றாம் காதல். நான் சுவாசிப்பது ஆக்சிஜனை மட்டுமல்ல; உன் அருகாமையையும்...''
''நான் அதிர்ஷ்டசாலி அப்பா...''
''நான் ஆயிரம் மடங்கு...''
''அப்பா... நான் உங்க கிட்ட ஒண்ணே ஒண்ணு கேக்கணும்...''
''கேளும்மா...''
''ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் தரும் வேலையில் இருந்தீங்க. எவரெஸ்ட் ஏறுவதற்காக அதை விட்டீங்க. மஞ்சள்காமாலை வந்த அம்மா கூட இருந்து, கவனிச்சிருந்தீங்கன்னா, செத்திருக்க மாட்டாங்க... எனக்கு, 10 வயசாகுது. என்னோட நீங்க இருந்த நாட்கள் மிக மிக குறைவு...
''உங்க கேரியர் மற்றும் உங்க குடும்பத்தை விட, எவரெஸ்ட் மலையேறுதல், உங்களுக்கு மிக முக்கியமா போனது ஏனப்பா... இப்ப மீண்டும் என்னை பிரிஞ்சு மலையேற போறீங்க. இது சரியாப்பா... எப்ப எவரெஸ்ட்டை கட்டி அழுறதை விட்டுட்டு என் கூட சேந்து வாழப் போறீங்க...''
''இந்த ஒருமுறை எவரெஸ்ட் ஏறிட்டு வந்தேன்னா, ஆயுளுக்கும் உன் கூட தான் இருப்பேன். கார் ரேஸ் போ, குத்துசண்டை போடு, ஆழ்கடல் நீச்சலடி, முப்பது ஆயிரம் அடி உயரத்திலிருந்து பாராசூட்டுடன் குதி. வனாந்திரம் சுற்று...
''நகர் முழுதும் பாம்மை பிடித்து, பிடித்த பாம்பை காட்டில் விடு. இப்படி பல மூட்டை பூச்சிகள் மனுஷனை கடிக்குது. எவரெஸ்ட் மலையேறு என்கிற மூட்டைப்பூச்சி என்னை கடிக்கிறது...''
வேதனையாக சிரித்தான் துருவ்.
''சரி சரி சந்தோஷமாக இருங்கள். நாளைக்கு எத்தனை மணிக்கு பிளைட் உங்களுக்கு...''
''விஸ்டாரா ஏர்லைன்ஸ் காலை 11:25 மணிக்கு... காலை 6:00 மணிக்கு இங்கிருந்து கிளம்பி விடுவேன்...''
''ஏர்போர்ட்டுக்கு நான் வருகிறேன் அப்பா...''
''இல்லையம்மா காலை 7:00 மணிக்கு பள்ளி வேன் வந்து உன்னை அழைத்து சென்று விடும்...''
''ஐ லவ் யூ டாடி...''
கதறி அழுது தந்தையை கட்டிக் கொண்டாள் மிஷ்கா.
விதியோ தமிழ் சினிமா நடிகர் போல் சிரித்தது.
- தொடரும்...
- மீயாழ் சிற்பிகா