PUBLISHED ON : மார் 15, 2025

முன்கதை: மலையேற்ற வீரர் துருவ் மகள் மிஷ்கா, நம்பிக்கையும், கற்பனை வளமும், சாகசம் செய்யும் துணிவும் மிக்க சிறுமி. இமயமலை சிகரம் ஏறப்போகும் தந்தையை பிரிய மனம் இன்றி கண்ணீர் வடித்தாள். அதிகாலையே புறப்பட்ட தந்தையை பின் தொடர்ந்து விமானநிலைத்தில் வழியனுப்பி திரும்பினாள் மிஷ்கா. இனி -
பள்ளி விடுதிக்கு தளர்ந்த நடையாய் வந்தாள் மிஷ்கா.
விடுதி மாணவியரும், வார்டனும் சூழ்ந்தனர்.
'உலகின் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்த உன் அப்பா இமயமலை போகிறாரே. அழுது அரற்றினாயா... வாழ்த்தி வழியனுப்பி வைத்தயா...'
பல்வேறு கேள்விகளால் துளைத்தனர்.
''வாழ்த்தி தான் அனுப்பி இருக்கிறேன். பிரிவு துயரில் ஒரு மகள் அழ மாட்டாளா என்ன...''
மிகவும் சாதுாரியமாக பதில் கூறினாள் மிஷ்கா.
மாலையில், மிஷ்காவின் திறன் பேசி, 'மகளே... நான் அப்பா அழைக்கிறேன்...' என்ற பதிவுக்குரலில் அழைத்தது.
இதயம் படபடக்க ஓடி சென்று திறன்பேசியை காதில் இணைத்தாள்.
''அப்பா... விமானப்பயணம் எப்படி இருந்தது...''
''விமானப்பயணம் சிறப்பு! லுக்லாவில் பத்திரமாக இறங்கினேன். அது கிழக்கு நேபாள பகுதியில் உள்ளது. இங்கிருந்து, எவரெஸ்ட் அடி வார முகாமுக்கு இடையே பக்டிங், நம்சே பஜார், டெங்போச்சே, டிங்போச்சே, துக்லா, லோ புசே மற்றும் செப் கிராமங்கள் உள்ளன. நாள் ஒன்றுக்கு எட்டு கி.மீ., பத்து கி.மீ., ட்ரக்கிங் செய்து எவரெஸ்ட் அடிவார முகாமுக்கு எட்டு நாளில் போவோம்...''
''ட்ரக்கிங் என்றால் என்ன...''
''மலைப்பகுதியில் நடப்பது... இமயமலை பகுதியில் ட்ரக்கிங் செய்வது மிகவும் சவாலான செயல்பாடு...''
''ஓ ஹோ...''
''அடிவார முகாமிலிருந்து முகாம் ஒன்றுக்கு, முகாம் ஒன்றிலிருந்து இரண்டுக்கு, முகாம் இரண்டிலிருந்து மூன்றுக்கு... மூன்றிலிருந்து முகாம் நான்குக்கும்... முகாம் நான்கிலிருந்து எவரெஸ்ட் உச்சிக்கு... பின் இறங்கி அடிவார முகாமுக்கு திரும்ப வருவோம். இது, 60 நாள் பயணமாக இருக்கும்...''
''வேற எதாவது ஈசியாக, எவரெஸ்ட் ஏறும் வழி இல்லையா...''
''எவரெஸ்ட் சிகரத்தில் ஏற மொத்தம், 18 பாதைகள் உள்ளன. நேபாளத்தில் தென்மேற்கு பாதை, திபெத்தின் வடக்கு பாதை, திபெத்தின் கிழக்கு பாதை என பல உள்ளன. நேஷனல் ஜியாகிரபிக் இணையதளம் முப்பரிமாணமாக, 18 பாதைகளின் வரைப்படத்தையும் வெளியிட்டுள்ளது...''
''இமயமலையில் மொத்தம் எத்தனை சிகரங்கள் உள்ளன...''
''பதினான்கு...''
''எவரெஸ்ட் சிகரத்தை கண்டறிந்தவர் யார்...''
''எவரெஸ்ட் கண்டறிந்தவர் என சொல்வதை விட, எவரெஸ்ட்டை முதன் முதலாக அளந்தவர் ராதாநாத் சிக்தர். அவர் அளந்தது, 1852ல்... ஆனால், பிரிட்டிஷ் நில அளவையர் கலோனல் ஜார்ஜ் எவரெஸ்ட் என்பவர், 1856ல் பெயரை எவரெஸ்ட்டுக்கு அதிகாரப்பூர்வமாக சூடினர். எவரெஸ்ட் சிகரத்தில் முதன் முதலில் மே 29, 1953ல் எட்மன்ட் ஹிலாரியும், டென்சிங் நார்கேயும் ஏறி சாதனை புரிந்தனர்...''
''ஓவ்...''
''மீதியை அப்புறம் கேள் மிஷ்கா. நீ சாப்பிட்டாயா, பள்ளி போனாயா... நான், 31வது முறை எவரெஸ்ட் ஏறப்போவதை பற்றி உன் பள்ளி மாணவியர் என்ன கூறினர்...''
''சாப்பிட்டேன். பள்ளிக்கு சென்றேன். பள்ளியிலும், விடுதியிலும் மாணவ, மாணவியர் உங்கள் வீர தீரத்தை மெச்சி பாராட்டுகின்றனர்...''
''இந்த புகழில் பாதி உனக்கு உரியது...''
''எப்படி...''
''உன் நிபந்தனையற்ற பாசம் தான் என்னை இயக்குகிறது. நான் ஒரு பொம்மலாட்ட பொம்மை தான்...''
''போங்கப்பா... எப்ப பாத்தாலும் என்னை பாராட்டுறீங்க... நான் தான் உங்கள் பாசத்தில் இயங்கும் பொம்மை...''
சிரித்தான் துருவ்.
''எவரெஸ்ட் ஏறும் போது என்னுடன் பேசுவீர்களா...''
''ஒய் நாட்... 50 கி.மீ., சுற்றளவில் பேசிக்கொள்ள என்னிடம் மலை ரேடியோ இருக்கிறது. அதன் பேட்டரி நான்கு நாட்கள் தாங்கும். இதில், 128 சேனல்கள் உள்ளன. இரண்டு வாட் சக்தி. வாட்டர் புரூப், ஸ்னோ புரூப் உடையது. மைனஸ் 120 டிகிரி குளிர் வரை தாக்கு பிடிக்கும். தவிர என்னிடம் செயற்கைகோள் தொலைபேசியும் உள்ளது. கூடியவரை உன்னிடம் பேசியபடியே இருப்பேன்...''
''சூப்பர்...''
''உன்னிடம் தொடர்ந்து எட்டு மணி நேர இடைவெளியில் பேசாமல் இருந்தால் ஏதோ உயிராபத்து என உணர்ந்து கொள்...''
''உங்களுக்கு எந்த உயிராபத்தும் வராது...''
''தேவதை வரம் அருளினால் சரி...''
''லுக்லாவில் கோவில் எதாவது இருக்கிறதா...''
''டெங்போசே திபெத்திய புத்த மடாலயம் இருக்கிறது. இந்த மடாலயத்தில் 'ரிம்டு' திருவிழா மிகப்பிரபலம். துறவியர் முகமூடி நடனம் ஆடுவர். தீயவற்றை வெற்றி கொண்ட, நல்லவற்றை கொண்டாடும் நடனம் தான் அது...''
''எனக்கு புத்த மடாலயங்கள் மிகவும் பிடிக்கும்...''
''எல்லாம் சரி... அம்மா எப்படி இருக்கா...''
மடியிலிருந்த சிலையை எடுத்து முத்தமிட்டபடி, முகத்தை பார்த்து, ''அம்மா டல்லாயிருக்கா...'' என்றாள்.
''அம்மாவை கவலையாக இருக்க விட்டு விடாதே. என் பாதுகாப்பு அவள் முகத்தில் பிரதிபலிக்கும்...''
''எனக்கு தெரியும் அப்பா...''
''நீயாக எனக்கு போன் செய்யாதே. எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் உன்னுடன் பேசுவேன்...''
''சரிப்பா...''
இதுபோல் சந்தோஷம் நிலைக்க வேண்டும் என வேண்டினாள் மிஷ்கா.
அப்போது அம்மா சிலையில் புருவம் திடீரென உயர்ந்தது!
- தொடரும்...
- மீயாழ் சிற்பிகா