PUBLISHED ON : ஏப் 19, 2025

முன்கதை: மலையேற்ற வீரர் துருவ் மகள் மிஷ்கா, நம்பிக்கையும், கற்பனை வளமும், சாகசம் செய்யும் துணிவும் மிக்க சிறுமி. இமயமலை சிகரம் ஏறப்போகும் தந்தையை பிரிய மனம் இன்றி கண்ணீர் வடித்தாள். ஆபத்து என்ற எச்சரிக்கையை மீறி மலை ஏறிய துருவ் மற்றும் அவனது குழுவில் இருந்தோர், இறந்துவிட்டதாக மிஷ்காவுக்கு தகவல் வந்தது. இனி -
சின்னஞ்சிறு கோழிக்குஞ்சை கொதிக்கும் நீருக்குள் அமிழ்த்தினால் எப்படி இருக்கும்...
நீலநிற நண்டின் கால்களையும், கொடுக்குகளையும் ஒடித்து மல்லாக்கப் போட்டால் எப்படி இருக்கும்...
ஒரு பூனைக்குட்டியை, 120ம் மாடியில் இருந்து தலைகுப்புற, அதளபாதாளத்துக்கு தள்ளி விட்டால் எப்படி இருக்கும்...
இரவில், சாலையை கடக்க முயலும் முயலின் மீது, 100 கி.மீ., வேக கண்டெய்னர் லாரி பாய்ந்தால் எப்படி இருக்கும்...
சிறு படகில், உலகின் அனைத்து கடல்களையும் சுற்றி வரும் பெண் மீது சரக்கு கப்பல் மோதினால் எப்படி இருக்கும்.
பனிப்புயலில் அப்பா துருவ் இறந்ததாக செய்தி கேட்டு, மேற்கூறிய வேதனைகளை அனுபவித்தாள் மிஷ்கா.
''அம்மா...''
சிலையை கட்டி கதறினாள் மிஷ்கா.
சிலையின் கண்களில் சிவப்பு நிற கண்ணீர் துளிர்த்து நின்றது.
முகத்தில் அறைந்து கொண்டாள்; தலைகேசத்தை தானே பிய்த்து விட்டு கொண்டாள்.
''நீ என்னம்மா சொல்ற...''
'அவசரப்படாதே... முழு விபரம் கேள்...'
மானசீகமாய் கூறியது அம்மா சிலை.
''யாரிடம்...'' என்றாள் அழுதபடியே மிஷ்கா.
'விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சகத்திடம் கேள். இந்திய மலையேறும் அறக்கட்டளையிடம் கேள்...'
''நான் ஒரு சிறுமி. கேட்டால் சொல்வார்களா...''
'பாதிக்கப்பட்டவள் நீ. உரக்க கேள்...' என்றது அம்மா சிலை.
பித்து பிடித்தவள் போல் அமர்ந்திருந்தாள் மிஷ்கா.
கண்களிலிருந்து தாரை தாரையாய் கண்ணீர் பெருகி ஓடியது.
பதைபதைப்பாய் ஓடி வந்தார் வார்டன்.
''மிஷ்கா... சீக்கிரம் வா...''
தரதர என இழுத்தபடி ஓடினார்.
'டிவி'யில் செய்தி அறிக்கை ஓடிக் கொண்டிருந்தது.
'சென்னையை சேர்ந்த துருவ், உலக சாதனை நிகழ்த்த வேண்டி சில நாட்களுக்கு முன், ஐந்து சகாக்களுடன் எவரெஸ்ட் ஏறினார். இந்திய நேரப்படி, நேற்றிரவு 8:00 மணிக்கு அவரது சகாக்களுடன் பனிப்புயலில் சிக்கினார்.
'பனிப்புயலின் கோரதாண்டவம் ஓய்ந்த பின், டர்பைன் ெஹலிகாப்டர் தேடியது. உடல்கள் கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடும் பணி நடந்து வருகிறது...
'இது தொடர்பாக, ஐ.எம்.எப்., அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது, 'வானிலை எச்சரிக்கையை மீறி மலையேறியது தவறு. துருவ்வும், அவரது சகாக்களும் உயிருடன் இருக்க வாய்ப்பே இல்லை. இறந்தவர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்' என்கின்றனர். காணாமல் போனோரை தேடும் பணியை துரிதபடுத்த உத்தரவு பிறப்பித்துள்ளார் பிரதமர்...'
இவ்வாறு செய்தி வாசிக்கப்பட்டது.
எவரெஸ்ட் ஏறியோர் கோப்பு ஒளிப்படங்கள் காட்டப்பட்டன.
துருவ், 30 முறை எவரெஸ்ட் ஏறிய கிளிப்பிங்குகள் காட்டப்பட்டன.
தொடர்ந்து, 'டிவி' செய்தி அலைவரிசைகளில் துருவ் பனி புயலில் சிக்கி காணாமல் போனதை வெவ்வேறு கோணங்களில் அலசும் நிகழ்ச்சி நடந்தது.
ஒரு, 'டிவி' அலைவரிசையில் விவாத மேடை ஓடியது.
அதில்...
'நடந்த சம்பவத்தில் ஒரு சதி கோட்பாடு தெரிகிறது. துருவ், 31ம் முறை எவரெஸ்ட் ஏறிவிடக் கூடாது என்பதற்காக அண்டை நாடுகள் எதாவது கறுப்பு தந்திரம் செய்திருக்குமோ என அஞ்சுகிறேன்...'
'ஆதாரம் இல்லாமல் விஷம் கக்காதீர்...'
இவ்வாறு விவாதம் தொடர்ந்தது.
காலை, 8:00 மணி -
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு துறை அதிகாரி தொலைபேசியில் பேசினார்.
''மிஷ்காவுக்கு, காலை வணக்கம். எனக்கு நன்கு தமிழ் தெரியும். அதனால் தமிழில் பேசுகிறேன்...''
''அங்கிள்...''
தேம்பி அழுதாள் மிஷ்கா.
''அம்மா... உன் தந்தையை ெஹலிகாப்டர் தொடர்ந்து தேடி வருகிறது. சில உடமைகள் கிடைத்திருக்கின்றன. ஆனால் உடல்கள் எதுவும் கிடைக்கவில்லை...''
''காணாமல் போனவரை, இறந்தவர் என ஏன் கூறுகிறீர்...''
மன அழுத்தத்துடன் கேட்டாள் மிஷ்கா.
''கொடூரமான சீதோஷ்ண நிலை. பனிப்புயலில் சிக்கியோர் உடல் பெரும்பாலும் சிதறியிருக்கும். அப்படி நடந்திருக்க கூடாது என இறைவனை வேண்டுகிறேன்...''
''ஒரு ெஹலிகாப்டர் வைத்து தேடினால் என் அப்பா கிடைத்து விடுவாரா...''
''நுாற்றுக்கணக்கான ெஷர்பாக்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். செயற்கைகோள் படங்களையும் ஆராய்ந்து வருகிறோம்...''
''பனிப்புயலில் சிக்கியவரில் எவரையாவது நீண்ட தாமதத்துக்கு பின் உயிருடன் மீட்டு இருக்கிறீர்களா...''
''நல்ல கேள்வி. லிங்கன் ஹால் என்பவரை நீண்ட தாமதத்துக்கு பின் மீட்டிருக்கிறோம் மிஷ்கா...''
''துருவ் காணாமல் போய் விட்டார் என்று மட்டுமே அறிவியுங்கள். இறந்து விட்டதாக தயவுசெய்து அறிவிக்க வேண்டாம்...''
''நீ ஒரு சின்னக்குழந்தை... எனக்கு ஆணையிடுகிறாயா...''
''என் தந்தையின் மீதான உரிமையில் பேசுகிறேன்... அவரவர் தந்தை அவரவருக்கு உசத்தி... நாளை நீங்கள் எங்காவது காணாமல் போனால், உங்கள் மகள் என்னை போல தான் நம்பிக்கையூட்டும் விதமாய் பேசுவாள்...''
''உன் ஆவேசம் புரிகிறது...''
''நம்பிக்கையுடன் என் தந்தையை தேடுங்கள் அங்கிள்...''
''தொடர்ந்து அரசு செயல்படும். எப்போது வேண்டுமானாலும் நீ என்னை தொடர்பு கொள்ளலாம். எந்த புதிய செய்தி கிடைத்தாலும், நிச்சயமாக உன்னுடன் பகிர்ந்து கொள்வேன். லெட் அஸ் வெயிட் பார் குட் ஹாப்பனிங்...''
அதிகாரி கூறியதும் தொலைபேசியை வைத்தாள் மிஷ்கா.
''கடவுளே... இறக்கையுடன் படைத்திருக்க கூடாதா... இந்நேரம் இமயமலைக்கு அப்பாவை தேட போயிருப்பேனே...''
நொந்து கொண்டாள் மிஷ்கா.
எட்டு மணி நேரத்துக்கு பின் -
மீண்டும், 'டிவி'யில் செய்தி அலைவரிசை உயிர்த்தது.
'எவரெஸ்ட்டை, 31வது முறையாக ஏறி உலக சாதனை செய்ய முயன்ற துருவ் குழுவினரை, இந்திய அரசும், நேபாள் அரசும், திபெத் ெஷர்பாக்களும் தேடி வருகின்றனர். அதில் ஒரு மிகப்பெரிய முன்னேற்றம். துருவ்வின் குழுவில் இருந்த மருத்துவர் மரணமடைந்தார். அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. முகம், கழுத்து பகுதி முழுக்க கடி காயங்கள் இருக்கின்றன...'
மருத்துவரின் உடல் முகம், 'டிவி'யில் மறைத்து காட்டப்பட்டது.
- தொடரும்...
- மீயாழ் சிற்பிகா