sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

பனி விழும் திகில் வனம்! (18)

/

பனி விழும் திகில் வனம்! (18)

பனி விழும் திகில் வனம்! (18)

பனி விழும் திகில் வனம்! (18)


PUBLISHED ON : மே 24, 2025

Google News

PUBLISHED ON : மே 24, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்கதை: துணிவு மிக்க சிறுமி மிஷ்கா. இமயமலையில் ஏறிய போது அவளது தந்தை துருவ் இறந்துவிட்டதாக தகவல் வந்தது. அதை ஏற்க மறுத்து, தந்தையை உயிருடன் மீட்க சென்றாள். எதிர்ப்புகளை மீறி உதவி கோரிய மிஷ்கா மீது, வெறுப்புடன் ஐஸ்கட்டி தண்ணீரை ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இனி -



கடுங்குளிர் மிஷ்காவின் உடலைத் தாக்கியது. பற்கள் கிட்டித்தன; கண்கள் ஏகாந்தத்தில் செருகின; கை, கால்கள் நடு நடுங்கின.

எல்லாம் ஒரு மைக்ரோ நொடி தான்!

பத்தடி நீளமும், எட்டடி அகலமும் உடைய கம்பளிப் போர்வையை மிஷ்காவின் மீது போர்த்தி அரவணைத்து கொண்டது கதகதப்பு நிறைந்த ஒரு பெண்ணின் கை. அத்துடன் நில்லாது குளிர் நீர் ஊற்றிய கும்பலை அந்த பெண் வசை பாடினார்.

''உங்களை திபெத்திய சடை எருமைகள் மிதிக்க! ஒரு சிறுமியிடம் இப்படி ஒரு கேடு கெட்ட நடத்தையை மேற்கொள்வது தடித்தனமானது. உங்களைப் போன்ற 40 வயதுள்ள ஆண்களுக்கு இந்த சிறுமி, மகள் மாதிரி... 60 வயது ஆண்களுக்கு பேத்தி மாதிரி...'' என மிஷ்காவின் தலையை துவட்டியபடி உதவிக்கு வந்தார்.

அவருக்கு வட்ட முகம்; அடர்த்தி குறைந்த தலைகேசம்; பக்கவாட்டுகளில் நரை; இடுங்கிய கண்கள்; அமுங்கிய மூக்கு; சோகத்தை மென்று விழுங்கிய வாய். கனத்த உடல். வயது, 51; உயரம் 155 செ.மீ.,

மிஷ்காவுக்கு மாற்று உடை உடுத்தி விட்டார் அந்த பெண்.

பின், கூட்டத்தை பார்த்து அறைகூவல் விடுத்தார்.

''ஒரு சமையற்காரி எச்சரிக்கை விடுக்கிறாளே என்று அலட்சியம் காட்டாதீர். ஒரே மிதியில் குடல், வாய் வழி பிதுங்கி விடும். பத்திலிருந்து ஒன்று வரை எண்ணுவேன். அதற்குள், இந்த சிறுமி மீது குளிர் நீரை ஊற்றியோர் முன் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும்...''

மிஷ்காவை அழுந்த அணைத்துக் கொண்டார் அந்த சமையற்காரப் பெண். அவர் மீது எருமை தயிரின் வாசனை வீசியது.

மிடுக்கு சற்றும் குறையாமல்...

''பத்து... ஒன்பது... எட்டு... ஏழு... ஆறு...''

இறங்கு வரிசையில் எண்களை உச்சரித்தாள் அந்த பெண்.

கூட்டம், ஒருவனை முன்னே தள்ளி விட்டது.

''ஏம்பா தள்ளி விடுறீங்க... ஆமா நான் தான் சிறுமி மீது ஜில்லு தண்ணிய ஊத்தினேன். ஒரு சின்ன விஷயத்தை ஏன் ஊதி பெருசாக்குற லக்பா ெஷர்பா...''

''இதா சின்ன விஷயம்... அந்த சிறுமியின் பாதங்களில் விழுந்து மன்னிப்பு கேளு...''

''ஏ சிறுமியே... சாகர்மாதா பெயரால் கேட்கிறேன்... என்னை மன்னித்து விடு...''

கூட்டத்தில் இருந்து விலகி, மிஷ்காவை இழுத்தபடி கணகணப்பு அடுப்புக்கு போனார் சமையல்கார பெண் லக்பா ெஷர்பா.

''என் அம்மா போல் அரவணைத்து பாதுகாத்ததற்கு நன்றி...''

''இருக்கட்டும்... உன் பெயர் மிஷ்கா தானே...''

''ஆமாம்...''

''எவரெஸ்ட் மலையேறும் சாகசவீரர் துருவ்வின் மகள் தானே நீ...''

''ஆமாம்...''

''டிவி பெட்டியை திறந்தால் ஒன்று உன் புகழ் பாடுகின்றனர்... அல்லது வசை பாடுகின்றனர்...''

''உங்க பெயர் லக்பா ெஷர்பா தானே...''

''ஆம்... நான் ஒரு சாதாரண சமையல்காரி... ஒரு குடிகார கணவனை சகித்து, இரு பெண் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிய நேபாளி...''

லக்பா ெஷர்பாவின் முகத்தை ஊடுருவி பார்த்தாள் மிஷ்கா.

''உங்கள் முகம் பிரபலம்... இணையதளத்தில் உங்களை பற்றி நிறைய படித்திருக்கிறேன்...''

''நீ சொல்வது நானல்ல...''

''உலகத்தில் எங்கு தேடினாலும் ஒரே ஒரு லக்பா ெஷர்பா தான் இருக்க முடியும். அது நீங்கள் தான். ஏராளமாக தீர்க்கதரிசிகள் ஆடு மேய்ப்பவர்களாக இருப்பர். இங்கே ஒரு சாதனை பெண்மணி சமையற்காரியாக இருக்கிறார்...''

''நான் சாதனைகள் புரிந்தது ஒரு கனாக்கலாம். அது முடிவடைந்து, 15 ஆண்டுகள் ஆகி விட்டன. எல்லாவற்றையும் அடியோடு மறந்து விட்டு சமையலறையில் தாதியாக பணிபுரிகிறேன்...''

''கற்ற நீச்சலும், சைக்கிளிங்கும் ஆயுளுக்கும் மறக்குமா... ஒரு மலையேறி சாகும் வரை மலையேறி தான்...''

''என்னை பெரிதுபடுத்தி பேசுகிறாய்...''

''இமயமலை உச்சி மீது, 11 முறை வெற்றிக்கொடி நாட்டிய மலைராணி நீங்கள்...''

மிஷ்காவை துாக்கிக் கொஞ்சினாள் லக்பா.

''இப்படி ஒரு புகழுரையை கேட்டு, பல ஆண்டுகள் ஆகின்றன... நானா மலைராணி... என்னால் இப்போது ஒரு அடி கூட இமயமலை மீது வைக்க முடியாது. நான் கிழவியாகி விட்டேன்...''

''பெரியம்மா...''

''அப்படி என்றால்...''

''என் அம்மாவின் அக்கா என எண்ணி அழைக்கிறேன். ஆண்களுக்கு உடல் பலம் ஒன்று என்றால், பெண்களுக்கு உடல் பலம் குறைவாக இருக்கலாம். ஆனால், மன பலம் ஐந்து மடங்கு அதிகம்... யானைக்கு தன் பலம் தெரியாது. லக்பா ெஷர்பா நீங்கள் ஒரு ஆப்பிரிக்க காட்டு யானை...''

மானசீக யானையாக மாறினார் லக்பா. தும்பிக்கை முளைத்தது. இரு முன்னங்கால்களையும் காற்றில் துாக்கி ஆவேசமாக பிளிறியது லக்பா யானை.

''ஆமா... நான் ஒரு காட்டு யானை தான்... பனிமான் வேஷத்தில் அலைகிறேன்...''

''நான் எதற்கு இமயமலை அடிவாரம் வந்திருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும் தானே...''

''உன் தந்தை துருவ்வை உயிருடன் மீட்க வந்திருக்கிறாய்...''

''ராமருக்கு, ஆஞ்சநேயர் உதவியது போல, என் தந்தையை மீட்பதில் எனக்கு உதவுவீரா...''

மென்று விழுங்கினார் லக்பா.

''ஆறு வயது சிறுமியான ெஷரின் பிரைஸ், மொராக்கோ, அட்லஸ் மலையில், 4,167 மீட்டர் உயர சிகரம் ஏறி சாதனை படைத்திருக்கிறார்.

''நீ எவரெஸ்ட் ஏறுவது பெரிய விஷயமே இல்லை. என்னை விட, சிறப்பாக மலையேறும் நபர் ஒருவரை உனக்கு சிபாரிசு செய்யவா...''

''சிறுமியாகிய எனக்கு இந்த பெரியம்மா தான் உதவி. நீங்கள், என்னுடன் மலையேறுவதாக உறுதி தந்தால், என் தந்தை இப்போதே உயிருடன் கிடைத்து விட்டதாக நம்புவேன்...''

கையில் பத்து விரல்களையும் நீட்டினார் லக்பா.

''இவற்றில் ஒன்றை தொடு மிஷ்கா...''

ஏழாவது விரலை தொட்டாள்.

''நல்ல வேளை, ஏழு அதிர்ஷ்ட எண். மிஷ்கா என் செல்லமே... நீயும், நானும் சேர்த்து துருவ்வை உயிருடன் மீட்கப் போகிறோம்...''

இரு கைகள் இணைந்து வான் நோக்கி உயர்ந்தன.



- தொடரும்...

- மீயாழ் சிற்பிகா







      Dinamalar
      Follow us