
ஏப்.,25 உலக பென்குயின் தினம்
அமைதியாக காட்சி தரும் உயிரினம் பென்குயின். பறவையினத்தை சேர்ந்தது; ஆனால் பறக்க இயலாதது. குள்ள உருவில் இறக்கையை விரித்தபடி சிறிய அடியெடுத்து, தலையை அசைத்தபடி நடக்கும். இசைக்கருவியான டிரம்பட் போல் ஒலி எழுப்பும். இந்த பறவைக்கு, 'பனிப்பாடி' என தமிழ் பெயர் சூட்டியுள்ளது விக்சனரி அமைப்பு.
அதிகம் குளிருள்ள பூமியின் துருவ பிரதேசத்தில் கூட்டம் கூட்டமாக வசிக்கிறது; உலகம் முழுதும், 19 இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆப்ரிக்காவின் தெற்கில் மித வெப்ப மண்டல பகுதியிலும் வசிக்கிறது. இந்த பறவை நீந்துவது, வானில் பறப்பது போன்றே காட்சியளிக்கும்.
வாழ்நாளின், 75 சதவீதம் நேரத்தை நீருக்கடியில் உணவு தேடுவதில் செலவிடும். அலகின் முன்பகுதி வளைந்து காணப்படுவதால் மீன்களை தவற விடாமல் பிடித்து உணவாக்கிவிடும்.
உடல் அமைப்பால் மணிக்கு, 25 கி.மீ., வேகத்தில் நீந்தும் திறன் உடையது. நீருக்கடியில் சுவாசிக்க முடியாது; ஆனால், அதிக நேரம் மூச்சை அடக்கும் திறன் பெற்றுள்ளது. கடல் உயிரினமான திமிங்கலம் போல் தோலின் அடிபகுதியில் கொழுப்பு சூழ்ந்திருக்கும். ஆயிரக்கணக்கில் பென்குயின்கள் இணைந்து வெப்ப நிலையை சமன் செய்து கொள்ளும்.
பென்குயின் நன்னீரை குடிக்காது; கடல் நீரை மட்டுமே குடிக்கும். உடலில் உள்ள ஒருவகை சுரப்பியால், குடிக்கும் நீரில் உப்பை பிரித்து வெளியேற்றி விடும்.
முட்டையிட பாதுகாப்பான இடத்தை பெண் பறவை தேர்வு செய்யும். பின், ஆண் துணையை தேடி சேர்ந்து வாழும். இந்த சொந்தம், பல ஆண்டுகள் நீடிக்கும். பொதுவாக, இரண்டு முட்டைகள் இட்டபின், பெண் பறவை இரை தேட சென்றுவிடும்; ஆண்தான், அந்த முட்டையை அடை காக்கும்.
முட்டை பொரிந்து, குஞ்சுகள் வளர்ந்ததும், கடலில் உணவு தேடும்.
குட்டிக்கரணம் அடிக்கும் இயல்பு உடையது பென்குயின். அலைகள் மீது மிதக்கவும் செய்யும். இதற்கு, முதன்மை எதிரி சீல் என்ற கடல் நாய்.
மனிதன் எளிதில் அண்ட முடியாத துருவப் பகுதிகளில் பென்குயின் வசித்த போதும், எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல் 25ம் தேதி, உலக பென்குயின் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதையொட்டி இந்த உயிரினத்தை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்வுகள் உலகம் முழுதும் நடத்தப்படுகிறது.
- வி.சி.கிருஷ்ணரத்னம்