
வீட்டு வேலைக்கு மட்டுமே உகந்தவள் பெண் என, 19ம் நுாற்றாண்டு வரை முடக்கியிருந்தது உலகம். இந்த நிலை, 1850ம் ஆண்டில் மெல்ல மாற்றம் கண்டது. தொழிற்சாலை, அலுவலக பணிகளில் கால் பதிக்க துவங்கினர் பெண்கள்.
ஆணுக்கு நிகராக உழைத்த போதும் பாலின ரீதியாக பாகுபாடு நிலவியது. உரிமையின்மை, ஊதிய குறைபாடு என அநீதி இழைக்கப்பட்டது.
இவற்றுக்கு எதிராக உலக அளவில் கொதித்தெழுந்தனர் பெண்கள். ஐரோப்பிய நாடான டென்மார்க் தலைநகர் கோபன் ஹேகனில், 1910ல் உரிமை கோரி ஒரு மாநாடு நடத்தினர் பெண்கள். அதில் தான், மகளிர் தினம் கொண்டாடும் தீர்மானம் முதன்முறையாக நிறைவேற்றப்பட்டது.
அந்த மாநாட்டுக்கு தலைமை வகித்து, தீர்மானத்தை முன்மொழிந்தவர், கிளாரா ஜெட்கின். ஐரோப்பிய நாடான ஜெர்மனியை சேர்ந்தவர். அந்த நிகழ்வில், மகளிர் தினம் கொண்டாடும் தேதி இறுதி செய்யப்படவில்லை. அதனால், ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு தேதிகளில் மகளிர்தினம் கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் ரஷ்யாவில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. அங்கு மன்னர் ஆட்சியை ஒழிக்க, நவ., 7, 1917ல் லெனின் தலைமையில் புரட்சி நடந்தது. அதற்கு முன்னோடியாக அதே ஆண்டு மார்ச் 8ல் பெண் தொழிலாளர்கள் மாற்றத்துக்கு அடிப்படை விதையைத் துவங்கினர். இந்த நிகழ்வை நினைவு கூறத் தக்க வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. ரஷ்யா, மாஸ்கோ நகரில் 1921ல் பெண்கள் அமைப்பு இதை முடிவு செய்தது.
தொடர்ந்து உலகம் முழுதும் மார்ச் 8 அன்று சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. சர்வாதிகார அரசுக்கு எதிராக பெண்கள் நடத்திய புரட்சியை அந்த நாள் நினைவு படுத்தும் வகையில் உள்ளது.
உலக அளவில் பெண்களுக்கு உரிமைகளை உறுதி செய்வதும், அனைத்து நிலையிலும் பாலின சமத்துவத்தை உறுதி செய்வதும் தான், சர்வதேச மகளிர் தின கொண்டாட்டத்தின் மையக்கருத்து. அதை கடைபிடிக்க உறுதி ஏற்போம்.
- வ.முருகன்