PUBLISHED ON : நவ 14, 2026
முன்கதை: அறிவியல் கண்காட்சிக்காக, புதிய உயிரியை உருவாக்க மாணவ - மாணவியர் குழு சோதனை திட்டத்தை வகுத்தது. திட்டப்படி ஆய்வக , ' இன்குபேட்டரில் ' வார இறுதியில் வைத்து சென்ற முட்டை , திங்களன்று மாயமாய் மறைந்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆய்வக உதவியாளரிடம் விசாரித்து முட்டை ஓடு , குப்பை தொட்டியில் வீசப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அதை சேகரித்து ஆய்வகத்தை தீவிரமாக கண்காணித்தார் மதிவதனி. இனி -
பள்ளியில் வகுப்புகள் முடிவதை அறிவிக்கும் மணி ஒலித்தது. செய்முறை வகுப்பு சலசலப்புடன் கலைந்தது.
'மைக்ராஸ்கோப், ஸ்லைடு'களை ஒப்படைத்து விட்டு, குழுக்களாக வெளியேற ஆரம்பித்தனர், மாணவர்கள்.
ஆய்வகப் பொருட்களை ஒவ்வொன்றாக, அதனதன் இடத்தில் வைத்து, கிளம்பத் தயாரானார், முருகேசன்.
''டீச்சர், உங்களுக்கு இன்னும் ஏதாவது வேலை இருக்குதா...''
''ஆமாம் முருகேசன் அண்ணே... கொஞ்சம் வேலை இருக்கு. முடிச்சிட்டுத் தான் போவேன். நீங்க கிளம்புங்க...''
''உங்க கிட்ட சாவி இருக்குதுல்ல டீச்சர்...''
''இருக்கு அண்ணே...''
தலையசைத்து வெளியேறினார் முருகேசன்.
மதிவதனியின் மனதில், மீண்டும் அந்த முட்டை தோன்றியது. குப்பைத் தொட்டிக்குள் இருந்து எடுத்த முட்டை ஓட்டின் உட்புறத்தில் படிந்திருந்த, அந்த பிசுபிசுப்பான ஈரம், சாதாரண வெள்ளைக்கரு போலத் தெரியவில்லை. ஏதோ வித்தியாசம் இருந்தது.
'இன்குபேட்டர்' அருகே வந்தார் மதிவதனி. உற்றுப் பார்த்தபடி, 'இதன் உள்ளே என்ன நடந்திருக்கும்?' என்ற கேள்வி, அவர் மனதில் எழுந்தது.
அந்த நேரம், கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.
'மேம்...'
''யெஸ்… வாங்க...''
கதிர், அஞ்சலி, வினோதா, குமார் மற்றும் பரத் என, ஐவரும் உள்ளே வந்தனர். அவர்கள் முகத்தில் இன்னும் காலை சம்பவத்தின் பதற்றம் தெரிந்தது.
''மேம்... நம்ம 'புராஜெக்ட் ஓ' பற்றி கொஞ்சம் பேசணும்...'' என்று ஆரம்பித்தாள், அஞ்சலி.
''சொல்லு அஞ்சலி...''
''கடைசில ஒரே ஒரு சாத்தியக்கூறு தான் தோணுச்சு. இது தப்பாவும் இருக்கலாம், மேம்...''
''பரவாயில்லை சொல்லு...''
''எங்களுக்கு முருகேசன் அண்ணா மேல கொஞ்சம் சந்தேகம் வருது...''
மதிவதனியின் புருவம் லேசாகச் சுருங்கியது.
''திரும்பவுமா...''
''காலையில ஆய்வகத்துக்கு முதல்ல வந்தது, அவர் தானே மேம்... இன்குபேட்டர் இயங்கிட்டு இருக்கிறதை கவனிச்சு, அதைத் திறந்து உள்ளே இருந்த அந்த முட்டையைக் கையில் எடுத்துப் பார்த்திருக்கலாம். அது தவறி கீழே விழுந்திருக்கும்...'' என்றாள், தயக்கமாக அஞ்சலி.
''அதனால பயந்து, நம்ம கிட்ட வேற மாதிரி சொல்லி இருக்கலாம்...'' குறுக்கிட்டாள், வினோதா.
''இது ஒரு சந்தேகம் தான் மேம்...'' என்றான், கதிர்.
சில நொடிகள் அமைதியாகப் பார்த்தார், மதிவதனி; பின், மெதுவாகத் தலை அசைத்தார்.
''உங்க சந்தேகம் தப்பு. அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை. என்கிட்ட உறுதியான ஆதாரம் இருக்கு...''
பின் மேசையில் வைத்திருந்த பிளாஸ்டிக் கவரை காட்டினார், மதிவதனி. அதன் உள்ளே முட்டை ஓடுகள் இருந்தன.
அதைப் பார்த்தவுடன் கதிரின் புருவம் சுருங்கியது.
''மேம்... இது, அந்த முட்டை ஓடு தானே...''
''ஆமாம் கதிர்...''
மதிவதனி கவரை மேசையின் மீது வைத்து, முட்டை ஓடுகளைக் கவனமாகக் காட்டினார்.
ஐவரும் மேசையைச் சுற்றி நின்றனர்.
''எல்லாரும் இதை கவனமாப் பாருங்க... முருகேசன் கையில் இருந்து முட்டை விழுந்திருந்தா, அது தரையில் பட்ட இடம் நொறுங்கிப் போயிருக்கும். அது உடைஞ்ச விதமே வேற மாதிரி இருக்கும்...'' என, ஓட்டின் விளிம்பை, சுட்டிக் காட்டினார்.
''ஆனா இந்த ஓடு, அப்படி நொறுங்கின மாதிரி இல்ல. உள்ளிருந்து அழுத்தம் கொடுத்து, வெடிச்ச மாதிரி உடைஞ்சிருக்கு, பார்த்தீர்களா...'' என்றார்.
மதிவதனி சொன்னது சரியாகத்தான் இருந்தது. அங்கே மீண்டும் அமைதி நிலவியது. எல்லாருக்கும் இதயத் துடிப்பு எகிறியது.
''மேம்... அப்படின்னா உண்மையாவே முட்டைக்குள்ள இருந்து...'' என, பரத் வாக்கியத்தை முடிக்காமல் விட்டாலும், எல்லாருக்கும் விஷயம் புரிந்தது.
அஞ்சலி முகத்தில் பயமும், பரவசமும் கலந்திருந்தது.
''ஏதோ உருவாகி இருக்கு...'' என்று மெதுவாகச் சொன்னாள்.
''ஒருவேளை, வெளிய வந்ததும் செத்துப் போயிருக்குமோ...'' என்றான், குமார்.
''செத்துப் போனா அது இன்குபேட்டர் தட்டுல இருந்திருக்கணுமே...'' சந்தேகம் கேட்டான், கதிர்.
''அது வெளியில் வந்து, பள்ளியிலேயே சுத்திகிட்டு இருக்குதா அல்லது ஆய்வகத்திலேயே அது இருக்குதா...'' பீதியைக் கிளப்பினான், குமார்.
''போதும்...'' என்றார், மதிவதனி.
''ஆரம்பத்தில் 'புராஜெக்ட் ஓ' மூலமா, உயிர் எதுவும் உருவாகி இருக்காதுன்னு தான் நினைச்சோம். ஆனா, முட்டை, உடைஞ்சிருக்கிற விதத்தை வச்சு யோசிக்கும் போது, ஏதோ உயிர் செயல்பாடு நடந்திருக்கலாம்ன்னு தோணுது...''
மதிவதனி குரலில் இருந்த மெல்லிய அழுத்தம், மாணவர் குழுவை ஆர்வப்படுத்தியது.
- தொடரும்...
- ஜாரா நரேஷ்
