
அடர் பச்சை வண்ண இழைகள், நடுவில், கருநீலக் கண்கள் என, மயில் தோகை மிகவும் அழகாக இருந்தது.
நேகா, ஏழு வயது சிறுமி; இரண்டாம் வகுப்பு படிக்கிறாள். அந்த தோகையால் கன்னத்தை வருடிப் பார்த்தாள். அதன் ஸ்பரிசம் மிருதுவாய் இருந்தது.
பள்ளியில் அதை பரிசாக கொடுத்த தோழி வினோ, 'இரவு படுக்கப் போகும் முன், இதை பாடப் புத்தகத்தில் வைத்து விடு; காலையில், குட்டி போட்டிருக்கும்...' என கூறியது நினைவுக்கு வந்தது.
மறவாமல் தோகையை பாடப் புத்தகத்துக்குள் வைத்தாள் நேகா.
மறுநாள் -
காலையில் எழுந்து பார்த்த போது தோகை, குட்டி எதுவும் போட்டிருக்கவில்லை.
சமையல் அறைக்கு சென்று, ''அம்மா... மயில் தோகை ஏன் குட்டி போடவில்லை...'' என்று கேட்டாள் நேகா.
''தெரியலையே...''
உதட்டைப் பிதுக்கினார் அம்மா.
பள்ளிக்கு வந்ததும், தோழி நேகாவிடம் புத்தகத்தை விரித்து காட்டினாள் வினோ.
அதில் ஒரு பக்கம் தோகையும், மற்றொரு பக்கம் சிறிய குட்டி இழை போன்றும் இருந்தது.
ஆச்சரியப் பட்டாள் நேகா.
அன்றிரவு மறவாமல் வேறு ஒரு புத்தகத்தில் தோகையை வைத்தாள் நேகா. காலையில் எந்த மாற்றமும் தெரியவில்லை.
காலை மிகுந்த ஏமாற்றத்துடன், ''தோழி வினோவுக்கு குட்டி போடும் தோகை, எனக்கு மட்டும் ஏன் போடவில்லை...'' என அம்மாவிடம் கேட்டாள்.
''எதுக்கும் வீட்டுப்பாடங்களைப் படித்த பின், தோகையை புத்தகத்துக்குள் வைத்து பாரேன்; குட்டி போடுதா பார்ப்போம்...''
வீட்டுப்பாடங்களை முடிக்க சோம்பல் படுவாள் நேகா. காலையில் பள்ளிக்கு புறப்படும் போது அவசரமாக அம்மாவிடம் உதவி கேட்பாள். இல்லாவிட்டால் யாரையாவது பார்த்து எழுதுவாள்.
தோகை குட்டி போடுவதைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகரித்ததால், அம்மா கூறியதற்கு பணிந்தாள். வீட்டுப்பாடங்களை முடித்து, மயில் தோகையை புத்தகத்துள் வைத்து படுத்தாள்.
மறுநாள் -
புத்தகத்தில் இருந்த மயில் தோகை அருகே ஒரு சிறு இழை மினுமினுத்தது.
ஆச்சரியத்துடன் அம்மாவிடம் காட்டி, ''தோகை குட்டி போட்டுள்ளது. பள்ளி சென்றதும், முதலில் வினோவிடம் காட்டுவேன்...'' என்றாள் நேகா.
''வீட்டுப்பாடத்தை சோம்பல் இன்றி முடித்துள்ளாய் அல்லவா... அதனால் தான், மயில் தோகை குட்டி போட்டுள்ளது...''-
சிறுமியை படிக்க வைக்க, இதை வாய்ப்பாக பயன்படுத்தினார் அம்மா.
''ஆமாம்... வீட்டுப்பாடத்தை முறைப்படி முடித்தால் எனக்கு நிறைய தோகை கிடைக்கும்...''
மகிழ்ச்சியில் துள்ளினாள் நேகா.
-''ஒரு பரிசு வேண்டும் என்றால், அதைப் பெறுவதற்கு தக்க முயற்சி செய்ய வேண்டும்...''
அம்மா கூறியதை ஆமோதித்தாள் நேகா. பின் நிறைய மயில் தோகைகள் அவளுக்கு பரிசாக கிடைத்தன.
பட்டூஸ்... முயற்சித்தால் எதையும் பெற முடியும்!
- மா.பிரபாகரன்