PUBLISHED ON : ஜூன் 20, 2026

பள்ளியில் அன்றைய விளையாட்டு வகுப்பு துவங்கியது.
மாணவ, மாணவியர் துள்ளிக்குதித்து மைதானத்துக்கு ஓடினர்.
''பாலு நீ விளையாடப் போகவில்லையா...''
வகுப்பு ஆசிரியை சீதா கேட்டார்.
''இல்லை, டீச்சர்... எனக்கு படிக்க வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கு...''
பதில் சொன்னான், பாலு.
அப்போது அங்கு வந்த சக மாணவன் கோபி, ''டீச்சர், பாலு எப்பவும் இப்படித்தான்... விளையாடவே வர மாட்டேங்கறான்...'' என புகார் கூறினான்.
''டேய் கோபி... எனக்கு படிப்பு மட்டும் தான் முக்கியம்; விளையாட்டு அவசியம் இல்லை...''
வேடுக்கென்று கூறினான், பாலு.
''கோபி, நீ போய் விளையாடு...''
அனுப்பி வைத்த பின், பாலுவிடம் திரும்பிய ஆசிரியை, ''உன்னோட கண்ணோட்டம் தப்பு... அதை புரிந்து மாற்றுவதற்கு முயற்சி செய்...'' என்றார்.
''டீச்சர், விளையாட்டை விட, படிப்பு தானே முக்கியம்...''
பாலு, தயக்கத்துடன் கூறினான்.
''படிப்பை போல, விளையாட்டும் முக்கியம் தான்...''
''அதெப்படி டீச்சர்...''
''அறிவு வளர்ச்சிக்கு அவசியம் படிப்பு. நல்லாப் படிச்சா தான், வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பது, உண்மை. அதேசமயம், உடல் ஆரோக்யமாக இருந்தால் தான், மனமும் ஆரோக்கியமாக இருக்கும்...
''உடல் ஆரோக்கியத்துக்கு விளையாட்டு ரொம்ப அவசியம். எத்தனையோ மாணவ, மாணவியர் பலவித விளையாட்டுகளில் சாதனைகள் படைத்து புகழ் பெறுவதை, நீ அறிந்திருப்பாயே...''
விளக்கமாக எடுத்துரைத்தார், ஆசிரியை.
கூர்ந்து கேட்டு தலையசைத்தான், பாலு.
''படிக்காமல், எப்பவும் விளையாடுவது தான் தப்பு. பள்ளியில் விளையாட்டுக்குன்னு தனி வகுப்பு இருப்பதே உடல் ஆரோக்கியம் பேணுவதற்கு தான். உரிய நேரத்தில் விளையாடினால், உன் உடலும், மனமும் புத்துணர்ச்சி அடைவதை அனுபவப் பூர்வமாக உணரலாம்... உனக்கென ஆர்வமுள்ள விளையாட்டை தேர்ந்தெடுத்து, சிறப்பு கவனம் செலுத்தும் போது ஜொலிக்கலாம்...''
நிதானமாக தொடர்ந்து அறிவுரைத்தார், ஆசிரியை.
உண்மையை உணர்ந்தான், பாலு.
ஆசிரியைக்கு நன்றி தெரிவித்தான்.
''படிப்போடு விளையாட்டும் அவசியம் என புரிஞ்சிக்கிட்டேன், டீச்சர். இனி விளையாட்டு நேரத்தை தவற விட மாட்டேன்... கண்டிப்பா விளையாடுவேன். அதிலும் என் முழுத்திறமையைக் காட்டுவேன்...''
கூறியபடி பாலு, பள்ளி மைதானத்துக்கு துள்ளி ஓடினான்.
பட்டூஸ்... படிப்பால் மூளை பலம் பெறும்; விளையாட்டால் உடல் நலம் பெறும்.
- ஏ. மூர்த்தி
