
பிள்ளையார்குளத்தில் வசித்த ராஜனும், ரவியும் இணைபிரியாத நண்பர்கள். பள்ளியில், 6ம் வகுப்பு படித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை வந்தால் அவர்களுக்கு கொண்டாட்டம்.
அன்று விடுமுறை என்பதால் ஊருக்கு ஒதுக்குப்புறமாக நின்ற புளியமரத்தின் அடியில் விளையாட சென்றனர்.
அதன் அருகில் அகன்ற வட்டக்கிணறும், சிறிது துாரத்தில் வயல்வெளியும் காணப்பட்டது.
வயலில் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
இருவரும் புதுமையாக விளையாட திட்டமிட்டனர்.
''ஒளிந்து விளையாட போறோமா...''
சந்தேகம் கேட்டான் ரவி.
''இல்லை; அது அலுத்துப் போன விளையாட்டு...''
''வேறு என்ன செய்யலாம்...''-
''வயலில் வேலை செய்வோரை கிணற்றில் குதிக்கச் செய்யட்டுமா...''
''அது எப்படி முடியும்...''
''நான் கூறுவதை சற்று பொறுமையாக கேள்...''
ரவியின் காதில் ரகசியம் கூறினான் ராஜன்.
''அப்படியெல்லாம் ஏமாற்ற கூடாது... பெரும் தவறாகிவிடும்...''
மறுத்த ரவியை மிரட்டி, இணங்கும்படி செய்தான் ராஜன்.
பின், பெரிய கல் ஒன்றை புரட்டி, அதை கிணற்றுக்குள் தள்ளினான்.
பெரும் சத்தத்துடன் விழுந்து மூழ்கியது.
உடனே அதிவேகமாக ஓடி ஒளிந்து கொண்டான் ரவி.
''ஐயோ... என் நண்பன் கிணற்றில் தவறி விழுந்துட்டான்; யாராவது காப்பாற்றுங்களேன்...''
பதறியது போல் நடித்து கூவினான் ராஜன்.
'கிணறு பக்கம் பெரும் சத்தம் கேட்டது; என்னவென்று பார்ப்போம்...'
பதற்றத்துடன் அங்கு ஓடி வந்தனர் தொழிலாளர்கள்.
விசாரித்து கிணற்றில் குதித்து பொறுப்புடன் மூழ்கித் தேடினர்.
ஒளிந்திருந்த ரவி அப்போது கிணற்றருகே வந்தான்.
''நண்பன் கிணற்றுக்குள் விழவில்லை; அப்படி பொய் கூறினோம். நல்லா ஏமாந்தீங்களா...''
கைகொட்டி நகைத்தபடி இருவரும் ஓடிவிட்டனர்.
அடுத்த ஞாயிற்றுக்கிழமை -
புளிய மரத்தடியில் ஆட்டுக்குட்டியுடன் ரவியும், ராஜனும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
வயலில் தொழிலாளர்கள் வேலை செய்தனர்.
திடீரென பாய்ந்து ஓடிய ஆட்டுக்குட்டி, எதிர்பாராத விதமாக கிணற்றில் விழுந்தது.
அதை காப்பாற்ற இயலாமல் ரவியும், ராஜனும் தவித்தனர்.
இருவருக்கும் நீச்சல் தெரியாது.
'ஐயோ... ஆட்டுக்குட்டி கிணற்றுக்குள் விழுந்து விட்டதே...'
வயலில் வேலை செய்தோரை அழைத்தனர் சிறுவர்கள்.
உதவ முன்வந்தோரை தடுத்து, ''தம்பிகளா... ஆட்டுக்குட்டி விழுந்து இருக்காது; அந்த சிறுவர்கள் பொய் கூறுவர். கடந்த வாரம் இது போல தான் ஏமாற்றினர்...'' என்றார் ஒரு முதியவர்.
உதவ முயன்றோர் மனம் மாறி பணியை தொடர்ந்தனர்.
தவித்து கிணற்றில் மூழ்கியது ஆட்டுக்குட்டி.
கதறி அழுது வருத்தம் தெரிவித்தான் ராஜன்.
''கடந்த வாரம் பொய் கூறி ஏமாற்றினாய்; அதன் விளைவை பார்த்தாயா... இன்று உண்மையை கூறிய போது யாரும் நம்பவில்லை...'' என்றான் ரவி.
தவறான செயலை எண்ணி மனம் வருந்தி திருந்தினர் சிறுவர்கள்.
சுட்டீஸ்... எந்த சூழ்நிலையிலும் யாரையும் ஏமாற்றாமல் வாழ்வதே சிறப்பு!
- பூ.சுப்ரமணியன்