
பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கிறான் அருண். அன்று ஞாயிறு விடுமுறை என்பதால், 'டிவி'யில் காலை செய்திகளை பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போது, வீட்டுக்குள் நுழைந்தார் அப்பா.
''அருண்... ரெண்டு துணிப்பை எடுத்து வா... உழவர் சந்தையில் போய் காய்கறி, பழங்கள் வாங்கி வருவோம்...''
'டிவி' பெட்டியை ஆப் செய்து, பைகளை தேடி எடுத்து வந்தான்.
காரின் முன்புறம் இடப்பக்க இருக்கையில் ஏறினான் அருண்.
உழவர் சந்தை நோக்கி கார் சென்றது.
வழியில், சாலை நான்கு புறம் பிரியும் இடத்தில் சிக்னல் இருந்தது.
அதில் மஞ்சள் நிறம் மாறி, சிவப்பு விழுந்து விட்டது.
வண்டியை நிறுத்தாமல் செலுத்திக் கொண்டிருந்தார் அப்பா.
பரபரத்த அருண், ''சிக்னலை மதிக்க வேணாமா அப்பா. நீங்க மனம் போன போக்கில் ஓட்டுறீங்க...'' என்றான்.
''காலை நேரத்தில் ரோட்டில் ஒருவருமே இல்லையே; இப்போ நின்று நேரத்தை வீணாக்கணுமா...''
''அப்படியில்லை... எல்லா சிக்னல்களிலும் கேமரா இருக்கிறது. விதி மீறி செல்லும் வாகனங்களை படம் பிடித்து, காவல்துறைக்கு அனுப்பி விடும். அவர்கள் அபராதம் விதித்து தகவல் அனுப்புவர்...'' என்றான் அருண்.
அவன் பேச்சை மதிக்காமல் காரை இயக்கி கொண்டிருந்தார் அப்பா.
உழவர் சந்தை வந்தது.
இருவரும் இறங்கி சென்று, தேவையான காய்கறி பழங்களை வாங்கி வந்தனர்.
ஒரு மாதத்திற்கு பின், அப்பாவின் அலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. போக்குவரத்து காவல்துறை படத்துடன் அதை அனுப்பியிருந்தது. அதில், சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்த போது, மதிக்காமல் கார் கடந்து சென்ற காட்சி பதிவாகி இருந்தது. அபராத விபரமும் குறிக்கப்பட்டிருந்தது.
இதை பார்த்த அப்பா, ''போக்குவரத்து விதிகளை இனி மதிப்பேன். தவறு செய்ய மாட்டேன்...'' என தீர்மானமாக சொன்னார்.
குட்டீஸ்... சாலை விதிகளை கண்டிப்பாக மதிக்க வேண்டும்!
- டி.ஜெயசிங்