
பள்ளி, பொது இடங்கள் என, எங்கும் துடுக்காக நடந்து கொள்வான் கோவிந்தன்.
கண்ணில் படும் எளிய உயிரினங்களை பிடித்து, கைவசம் இருக்கும் கண்ணாடி குடுவையில் போட்டு மூடி விடுவான்.
உயிருக்கு போராடும் பூச்சிகளின் நிலை பற்றி கவலைப்பட மாட்டான். அந்த செயலை பெருமையாக, மற்ற மாணவர்களிடம் காட்டுவான்.
தவறு என எடுத்துக் கூறினாலும், காதில் வாங்க மாட்டான்.
அன்று -
பள்ளியில், மாணவர்கள் ஒளிந்து விளையாடினர். கோவிந்தனும் அதில் பங்கேற்றான்.
வேகமாக ஓடி, சற்று தள்ளி நின்றிருந்த காருக்குள் ஏறி பதுங்கினான்.
பின், மாணவர்கள் தேடித் திரிவதை கண்ணாடி வழியாக பார்த்து ரசித்தான்.
கண்டு பிடிக்க முடியாததால், 'வகுப்புக்கு சென்றிருப்பான்' என எண்ணியபடி தேடுவதை விடுத்தனர் மற்ற மாணவர்கள்.
கண்டுபிடிக்காத மகிழ்ச்சியில், கார் கதவை திறக்க முயன்றான் கோவிந்தன். அது, பூட்டியிருந்ததை அறிந்தான்.
கதவைத் தட்டி, நண்பர்களை உதவிக்கு அழைத்தான்.
எவ்வளவு கூக்குரல் கொடுத்தும் வெளியே கேட்கவில்லை.
சுவாசிக்க காற்றின்றி, மூச்சு திணறி, நாக்கு வறண்டு, அவஸ்தையுடன் மயங்கினான் கோவிந்தன்.
சிறிது நேரத்திற்கு பின் -
காரின் உரிமையாளர் வந்தார். கதவைத் திறந்த போது, மயங்கி கிடந்தவனை கண்டார். வெளியே துாக்கி வந்து, முகத்தில் தண்ணீர் தெளித்து, கை, கால்களில் சூடு வர அழுத்தி தேய்த்து முதலுதவி செய்தார்.
மெதுவாக கண்களைத் திறந்து, மூச்சு விட்டான்.
நடந்த விபரத்தை எடுத்து கூறி, காப்பாற்றியதற்காக நன்றி தெரிவித்தான் கோவிந்தன்.
'பிடித்து குடுவைக்குள் அடைத்திருந்த பூச்சிகளும், இப்படி தானே அவஸ்த்தையுடன் இறந்திருக்கும். இனி, எவ்வுயிரினத்துக்கும் தீங்கு செய்ய கூடாது' என எண்ணினான்.
பட்டூஸ்... உயிரினங்களை வதைக்க கூடாது!
- வி.கற்பகவல்லி