
சிரமத்துடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் வசந்த்.
கையை இயல்பாக அசைத்து உணவை எடுக்க முடியவில்லை.
''கையில் என்ன காயம்...''
அப்பா கடம்பவனம் விசாரித்தார்.
''பேனா கிழிச்சிருச்சு...''
''வலது கையில் பிடிச்சு எழுதற பேனா எப்படி அதே கையை கிழிக்கும். பொய் சொல்ல பழகிட்டியா...''
''வகுப்பில் பக்கத்துலே உட்கார்ந்திருக்க சதீஷ் செய்த வேலை இது. இதுவரை, பேனா, பென்சில் திருடிட்டு இருந்தவன், இப்போ காயம் ஏற்படுற மாதிரி தாக்கவும் ஆரம்பிச்சிட்டான்...''
தட்டில் தோசையை போட்டபடி புகார் சொன்னார் அம்மா தாரிணி.
''நாளை பள்ளிக்கு போய் வாத்தியார் கிட்டேயும், தலைமையாசிரியரிடமும் கேட்கிறேன். இத இப்படியே விடக்கூடாது...''
அப்பா கூறியதும் பதறினான் வசந்த்.
''ப்ளீஸ்... நீங்க வரவேண்டாம். புகார் செய்தா என் மேலே பள்ளி நிர்வாகத்துக்கு கோபம் வரும். நானே பார்த்துக்கிறேம்பா...''
''அவன் சொல்றதும் சரி தான். இப்ப நீங்க போக வேண்டாம்...''
பரிந்துரைத்தார் அம்மா.
''சரி இந்த முறை போகலை. இனி ஒருமுறை இப்படி ஆனா, சும்மா விடமாட்டேன்...''
தீர்க்கமாக சொன்னார் அப்பா.
சாப்பிட்டு முடித்து சீருடை அணிய சென்று விட்டான் வசந்த்.
அப்போது -
''வசந்த் இல்லீங்களா...''
வாசலில் குரல் கேட்டதும் படித்த நாளிதழை மடித்தபடியே திரும்பினார் கடம்பவனம்.
சிறுவன் ஒருவன் நின்று கொண்டிருந்தான்.
''உள்ளே வா... வசந்த்தோட நண்பனா...''
''வகுப்புல அவனோட பக்கத்து சீட் நான் தான்... என் பேர் சதீஷ்...''
''எப்ப பார்த்தாலும் சண்டை போட்டுட்டு அவனோட பேனா, பென்சிலை எல்லாம் எடுத்துக்கறது நீ தானா... இப்ப எதுக்கு வந்த...''
கோபம் தலைக்கேற உஷ்ணமாக கேட்டார் கடம்பவனம்.
''அதுக்கு மன்னிப்பு கேட்க தான் வந்தேன். எவ்வளவு கஷ்டம் கொடுத்தாலும் வசந்த் என் மேலே கோபப்பட்டதே இல்லை. நேத்து மிதிவண்டியில இருந்து விழுந்துட்டேன். நல்ல அடிபட்டு, காயம் ஆயிடுச்சு. வசந்த் தான் மருத்துவமனைக்கு கூட்டி போனான். மருத்துவருக்கு அவன் தான் பணம் கொடுத்தான். இனி அவன் என் நண்பன். அவனுக்கு எந்த கஷ்டத்தையும் தர மாட்டேன்...''
சதீஷ் சென்ற பின்னும் ஆச்சரியம் விலகாமல் பார்த்துக் கொண்டிருந்தார் கடம்பவனம்.
சீருடை அணிந்த பின், புத்தகப்பையுடன் வந்தான் வசந்த்.
''உன் நண்பன் சதீஷ் வந்திருந்தான்... இப்பத்தான் போனான். எப்படி அவனுக்கு உதவி செய்ய உனக்கு தோணுச்சு... அவன் மீது உனக்கு கோபம் வரலையா...''
''அப்பா... அமெரிக்க அதிபரா இருந்த ஆபிரகாம் லிங்கனோட வாழ்க்கை வரலாறு புத்தத்தை படிக்க கொடுத்தீங்களே... அதுல வெறுப்பை வெறுப்பால் வெல்ல முடியாது; அன்பால் தான் வெல்ல முடியும்ன்னு சொல்லியிருக்கிறார். அது மனதில் ஆழமா பதிஞ்சிடுச்சு. அவர் சொன்னதை கடைபிடித்தேன். நல்ல பலன் கிடைச்சுருக்கு...''
''புத்தகம் படிக்கறது எவ்வளவு நல்ல பழக்கம்ன்னு இப்ப தெரியுதா... உன்னோட நல்ல குணம் உயரத்துக்கு கொண்டு போகும்...''
பெருமையுடன் கூறினார் கடம்பவனம்.
குழந்தைகளே... மன்னிப்போம் மறப்போம் என்பதே நல்ல பண்பு.
- எம்.கதிர்வேல்