PUBLISHED ON : டிச 28, 2024

காட்டில் பலசாலி யானை ஒன்று வாழ்ந்து வந்தது.
சில நாட்களாக அது கவலையில் தவித்தது.
அன்றாடம் உணவு உண்ணப்பிடிக்கவில்லை.
இதனால், உடல் இளைத்து மெலிந்து வந்தது.
ஒரு கட்டத்தில் நடக்க முடியாமல் பலம் இழந்தது.
அடர்ந்த மரத்தின் நிழலில் அன்று படுத்திருந்தது யானை.
அவ்வழியே சென்ற நரி அதன் சோர்வை கவனித்தது.
மனம் பதறி அருகே சென்று அமர்ந்தது.
'அண்ணே என்னாச்சு... உடம்பு இப்படி மெலிந்து இருக்கே...'
அக்கறையுடன் விசாரித்தது.
மெதுவாக தலையை துாக்கிய யானை, 'சில நாட்களாகவே எனக்கு பயம் அதிகமா இருக்கு...' என்றது.
'என்னைப் பாரு... நான், உன் போல் பலசாலியா... ஏதோ தந்திரத்தால் வாழ்க்கை ஓடுது. இருப்பினும் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கேன். ஆனால், பலசாலியான நீ ஏன் பலவீனமா இருக்கிறாய்...'
'பலம் இருந்து என்ன பலன்... சாதாரண எறும்பு, குளவிக்கு எல்லாம் பயந்து நடுங்க வேண்டியிருக்கிறதே...' என சலிப்பாக கூறியது யானை.
விழுந்து விழுந்து சிரித்தது நரி.
பின், 'அண்ணே... இதுதான் உன் பிரச்னையா... நாங்க சிங்கத்தையும், உன்னையும் பார்த்து, பயந்து வாழ வேண்டியிருக்கு. அட... எங்கள விடு... இந்த காட்டுல வாழுற ஒவ்வொரு விலங்கும், ஏதோ ஒரு உயிரினத்தை பார்த்து பயத்தோடு தான் வாழ வேண்டியிருக்கு. இதுதான் வாழ்வின் நியதி... இத புரிஞ்சிக்கிட்டா நடுக்கம் தலை துாக்காது...'
தைரியம் சொல்லியது நரி.
நம்பிக்கையுடன் தெம்பு பெற்று எழுந்தது யானை.
குழந்தைகளே... வாழ்க்கையில் பிரச்னைகள் வரும். அதை எதிர்கொண்டு வெற்றி கொள்ள பழகணும்!
- பூபதி பெரியசாமி