
மிகவும் அழகானது எழிலுார். நடுவில் பழைமையான கோவில் அமைந்திருந்தது. சுற்றிலும் தேரோடும் வீதிகள். பள்ளி விடுமுறை நாளில் சிறுவர், சிறுமியருக்கு ஆன்மிக வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கம். கதை, பாட்டு, பேச்சு, ஓவியம் வரைதலில் பயிற்சி பெற்றனர்.
ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்துவது அந்த ஊர் வழக்கம்.
அன்று கிருஷ்ண ஜெயந்தி.
சிறுவர், சிறுமியர் கிருஷ்ணர், ராதை வேடம் தரித்திருந்தனர். வேடமிட்ட குழந்தைகளின் முகங்கள் பிரகாசமாகவும், பெற்றோர் பூரிப்புடனும் இருந்தனர்.
பேச்சுப் போட்டி ஆரம்பமானது; போட்டிக்கு பதிவு செய்திருந்தோரை அழைத்தார் நிகழ்ச்சி தொகுப்பாளர்.
சிறிய அளவில் பேசினால் போதும் என்ற சலுகை, சிறுவர் சிறுமியருக்கு வழங்கப்பட்டது.
சிலர் ஒலி வாங்கி முன் வந்ததும், கை, கால் நடுக்கத்துடன் வார்த்தை வராமல் தவித்தனர்.
சிலர் இரண்டு வரி பேசியதும் மூன்றாவதை மறந்தனர்.
சிலர் மனப்பாடம் செய்திருந்ததை, 'கட... கட...'வென ஒப்பித்து சென்றனர்.
இறுதியில், சுட்டிப் பையன் வந்தான்.
சுறுசுறுப்புடன் பேச துவங்கினான்.
'வணக்கம்... என் பெயர் சுவாமிநாதன். நான், 2ம் வகுப்பு படிக்கிறேன்; கிருஷ்ணரை பற்றி பேசப் போகிறேன். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நாகர்கோவிலில் பிறந்தார். சிறந்த நகைச்சுவை நடிகர்; ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார்...'
பேசியதை கேட்டதும் அதிர்ச்சியுடன் பார்த்தனர் கூடியிருந்தோர்.
'பகவான் ஸ்ரீகிருஷ்ணரை பற்றி பேசாமல், நடிகர் பற்றி குறிப்பிடுகிறானே என்று நினைக்கிறீரா... அது தான், கிருஷ்ணர் வேடத்தில் இருக்கும் என் குறும்பு...'
சிறுவன் பேச்சை ரசித்து அனைவரும் கை தட்டி மகிழ்ந்தனர். குறும்புகார சிறுவனுக்கு பரிசும் கிடைத்தது.
பட்டூஸ்... அர்த்தமுள்ள பேச்சு வாழ்வை வளப்படுத்தும்!
சு.நாகராஜன்