தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தண்டனையும், பாடமும்!

தண்டனையும், பாடமும்!

தண்டனையும், பாடமும்!


PUBLISHED ON : அக் 25, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 25, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வேலுார் மாவட்டம், கே.வி.குப்பம், கொசவன்புதுார் அரசு உயர்நிலைப் பள்ளியில், 1965ல், 9ம் வகுப்பில் படித்த போது நடந்த சம்பவம்...

வகுப்பாசிரியராக இருந்த ஜோதிசைனம் ஆங்கில பாடமும் கற்பிப்பார். மிகவும் சுயக்கட்டுப்பாடுடன் நடந்து கொள்வார். அன்று வகுப்பில் என்னிடம் கேள்வி கேட்ட போது அலட்சியமாக, 'புரியவில்லை...' என்று கூறினேன். ஆர்வத்துடன் அதே பாடத்தை விளக்கி மீண்டும் கேட்டார். பதில் தெரியாததால், 'கேட்கவில்லை...' என முனகினேன். பொறுமை இழந்த ஆசிரியர் என் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். வகுப்பறையே திகைத்தது.

அதை அவமரியாதையாக கருதி வேதனையுடன் நடுங்கியபடி அமர்ந்திருந்தேன். வகுப்பு முடிந்த பின் தனியாக அழைத்து, 'என் நோக்கம் உன்னை தண்டிப்பது அல்ல; படிப்பதை துாண்டுவதற்கு தான்... ஆரம்ப கல்வியை தெலுங்கு மொழியில் படித்தவன் நீ... ஆங்கில பாடத்தில் தடுமாறுவது இயல்பு தான். அதற்காக பயந்து விடாதே... திறனை வளர்க்க பயிற்சி செய்...' என்று அறிவுரைத்தார்.

அந்த சொற்கள் உள்ளத்தை தொட்டன. அந்த தருணம் என் வாழ்க்கை பாதையை மாற்றியது. வாழ்வில் உயர்ந்த நிலையை அடையவேண்டும் என்ற உத்வேகம் பிறந்தது. விடாமுயற்சியுடன் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று முன்னேறினேன்.

எனக்கு 74 வயதாகிறது. வேலுார் மாவட்ட மைய வங்கியில் முதுநிலை மேலாளராக பணி உயர்ந்து ஓய்வு பெற்றேன். வகுப்பறையில் ஆசிரியர் ஜோதிசைனம் தந்த தண்டனை, என்னை மேல் நோக்கி நகர்த்தியது. வாழ்வின் திசையை மாற்றியது. வகுப்பில் அன்று அவரது கோபத்துக்கு இடையே மறைந்திருந்தது பாசம். அதை உணர்ந்திருக்காவிட்டால் வாழ்வில் இந்த நிலையை எட்டியிருக்க மாட்டேன்.



- ஜெ.முனிராஜுலு, குடியாத்தம்.

தொடர்புக்கு: 89511 77709

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us