
விருதுநகர் மாவட்டம், குல்துார்ச்சந்தை, எஸ்.வி.வி.மேல்நிலைப்பள்ளியில், 1979ல், 10ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்!
தலைமையாசிரியர் ராமச்சந்திரன் கண்டிப்பால் புகழ் பெற்றவர். எங்களுக்கு கணக்கு பாடம் நடத்தினார். சரியாக படிக்காவிட்டால் அடித்து திருத்துவார். மனதில் பதியும்படி கணித சூத்திரங்களை, திரும்ப திரும்ப எழுத வைப்பார்.
ஒருமுறை வீட்டு பாடம் எழுத தவறி விட்டேன். என்ன தண்டனை தருவாரோ என அச்சத்தில் அமர்ந்திருந்தேன். வகுப்பிற்கு வந்தவர், 'வீட்டுப் பாடம் எழுதாதோர் எழுந்து நிற்கவும்...' என்றார். அச்சத்துடன் எழுந்த ஐந்து பேரில் என்னிடம் சாக்பீசை தந்து, 'வீட்டுப்பாடக் கணக்குகளை, கரும்பலகையில் எழுதி விடை கண்டுபிடி... இது பயிற்சியாக இருக்கட்டும்...' என்று கூறினார்.
மன உறுதியோடு முயன்ற என்னை பாராட்டும் வகையில், 'கடமை என்பது கண் போன்றது. அதை செய்ய தவறுவோரை தண்டித்து திருத்துவது காயத்தை ஏற்படுத்தும். உடல் காயத்துக்கு மருந்து உண்டு. வாழ்வு சாதனைகளே மன காயத்திற்கு மருந்து... நன்றாக படித்து உயர்ந்த நிலைக்கு வர முயற்சி செய்...' என அறிவுரைத்தார்.
என் வயது, 60; கூட்டுறவு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். பணிக்காலத்தில், குழப்பம் ஏற்பட்ட போதெல்லாம் அந்த தலைமையாசிரியரிடம் பெற்ற தன்னம்பிக்கையால் அயராது முயன்று வென்றுள்ளேன். அவரிடம் பெற்ற அறிவுரைகள் வெற்றி பாதையில் நடத்தும் சூத்திரமாக அமைந்திருக்கிறது.
- எஸ்.ராஜமோகன், விருதுநகர்.
தொடர்புக்கு: 82202 12189