/
இணைப்பு மலர்
/
சிறுவர் மலர்
/
உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்!
/
உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்!
PUBLISHED ON : ஆக 31, 2024

செப்டம்பர் 5 ஆசிரியர் தினம்!
கல்வி சிறக்க பெரும் பணி செய்து வருவோர் ஆசிரியர்கள். அவர்களை சிறப்பிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்படுகிறது ஆசிரியர் தினம். உலக வரலாற்றில் திருப்பங்கள் ஏற்படுத்திய சாதனை ஆசிரியர்கள் குறித்து பார்ப்போம்...
அரிஸ்டாட்டில்:
பண்டைய கிரேக்க நாட்டில் ஏதென்ஸ் நகரில் வாழ்ந்தவர். அறிஞர் பிளாட்டோவின் மாணவர். விலங்கியலில் ஆராய்ச்சிகள் நடத்தியவர். அவரிடம் பலவித பயிற்சிகள் பெற்றதால் பல கலைகளில் சிறப்புடன் விளங்கினார் மன்னர் அலெக்சாண்டர். ஆணவம் பிடித்தவராக இருந்த அவரை போதனைகளால் நல்வழிக்கு திருப்பும் பொறுப்பையும் ஏற்றிருந்தார் அரிஸ்டாட்டில்.
எம்மா ஹார்ட்:
அமெரிக்கா, கனெக்டிகட் பகுதியில் குடும்பத்தில், 17 பேரில், 16ம் குழந்தையாக பிறந்திருந்தார். குறிப்பிட்ட சில பாடங்களை ஆண்கள் மட்டுமே அப்போது படித்து வந்தனர். இதை மாற்றும் விதமாக, ஜியாமெட்ரி, தத்துவம், உயர்நிலை கணிதத்தை சிறப்பு பாடங்களாக படித்து தேர்ச்சி பெற்றார். பெண் கல்வியை உறுதி செய்ய தீவிரமாக செயல்பட்டார். அதற்காகவே, 'ட்ராய் பீமேல் செமினரி' என்ற அமைப்பை உருவாக்கினார். அது, பெண்களுக்கு மேல்நிலையாக்க கல்வியை அளித்தது.
சாவித்திரிபாய் பூலே:
இந்தியாவில், பெண் கல்விக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில், முதன்மையாக பணியாற்றியவர். மகாராஷ்டிரா மாநிலம், பூனாவில் மாணவியருக்கான முதல் பள்ளியை, 1848ல் துவங்கினார். சிறந்த ஆசிரியையாகவும் விளங்கினார். பெண்கள் முன்னேற்றத்துக்கு கல்வி மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து சாதித்தார்.
ஆன் சல்லிவன்:
வரலாற்றில், நீங்கா இடம் பெற்ற அமெரிக்க ஆசிரியை. பெரிதும் நோய்வாய்ப்பட்டு, 5ம் வயதில் பார்வை இழந்தார். அப்போதும் படிப்பைத் தொடர்ந்தார். அறுவை சிகிச்சையால் ஓரளவு பார்வை பெற்று கல்வியில் தேர்ந்தார். பார்வை மற்றும் கேட்கும் திறன் இழந்திருந்த, ஹெலன் கெல்லருக்கு, பாடம் சொல்லி கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. கற்பிக்கும் பணியில் காட்டிய பொறுமை ஆன் சல்லீவனை, புகழின் உச்சிக்கு ஏற்றியது. பிரபல நடிகர் சார்லி சாப்ளின், எழுத்தாளர் மார்க் ட்வைன் போன்றோர் இவரை வியந்து பாராட்டியுள்ளனர்.
பிரெடரிக் ப்ரோபெல்:
ஐரோப்பிய நாடான ஜெர்மனியை சேர்ந்தவர். எந்த வித பொருளாதார பின்னணியுள்ள குழந்தைகளையும் சமமாகவும், மரியாதையாகவும் நடத்த வற்புறுத்தினார். குழந்தைகளுக்கு, விளையாட்டு வழியாகவே, முழுமையான கல்வி கிடைக்கும் என நம்பினார். உலகிலே கிண்டர் கார்டன் பள்ளியை, முதன் முதலில் துவங்கினார். கிண்டர் கார்டன் என்பதற்கு, குழந்தைகளின் நந்தவனம் என்று பொருள். குழந்தைகளை மலர் போல பாதுகாக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் உழைத்தார்.
மரியா மாண்டிசோரி:
ஐரோப்பிய நாடான இத்தாலியைச் சேர்ந்த மருத்துவர். இவர் உருவாக்கிய கல்வி முறை முன்னுதாரணமாக விளங்குகிறது.'விரிவுரை நடத்தும் இடமாக இருக்கக் கூடாது பள்ளி; குழந்தைகள் கற்கும் ஆற்றலை துாண்டும் வகையில் இருக்க வேண்டும். கற்பனையைத் துாண்டும் வகையில் கற்பிக்கும் கருவிகள் இருக்க வேண்டும்' என்பதை லட்சியமாக கொண்டு செயல்பட்டு சாதித்து உலக புகழ் பெற்றார்.
ரவீந்திரநாத் தாகூர்:
கல்வி, கலாசாரம் மற்றும் இலக்கியத்தை இந்தியாவில் முன்னெடுத்தவர். இலக்கிய படைப்புக்காக இந்தியாவில் இருந்து முதன் முதலில் நோபல் பரிசு பெற்றவர். சாந்தி நிகேதன் என்ற பெயரில் பள்ளியைத் துவங்கியவர். கற்பிக்கும் முறையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியவர். இது, விஸ்வ பாரதி பல்கலைக்கழகமாக வளர்ச்சி அடைந்துள்ளது.
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்:
இந்தியாவின் இரண்டாம் ஜனாதிபதியாக செயல்பட்டவர். இவரது பிறந்தநாள் தான், இந்தியாவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. தத்துவத்துறையில் ஆழ்ந்த ஈடுபாடு உடையவர். கல்வி பற்றி, 'மனித மனதில் ஒளி பாய்ச்சி, அவனுக்குள் இருக்கும் குரங்கு தன்மையை நீக்கி, அன்பை வளர்த்து, உயிரோட்டமுள்ள கற்பனைத் திறனை உருவாக்குவதாகும்' என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் உயர்ந்த, 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டுள்ளது.
--- ஜி.எஸ்.எஸ்.,