
கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி அரசு உயர்நிலைப் பள்ளியில், 1965ல், 9ம் வகுப்பு படித்தேன்.
உடற்கல்வி ஆசிரியராக இருந்த நடராஜன், பலவகை விளையாட்டுகளில் பயிற்சி அளிப்பார். மாணவர் நலனில் மிகுந்த அக்கறை உடையவர். அன்று, பக்கத்து பள்ளியில் நடந்த கபடி போட்டியில் கலந்து கொண்டோம். எங்கள் பள்ளி குழுவால் வெற்றிக் கோப்பை பெற இயலவில்லை.
பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் திட்டப்போகிறார் என எதிர்பார்த்து பயந்திருந்தோம். அதை பொய்யாக்கும் வகையில் மிகவும் மென்மையுடன், 'தோற்றால் பரவாயில்லை. ஆனால் முயற்சியை கைவிடக்கூடாது. நம்பி செயல்பட்டால், 'கப்' கிடைக்கும். ஆங்கிலத்தில், 'கப்' என்ற சொல்லில் முதல் எழுத்து, 'சி' என்பது 'கான்சென்ட்ரேஷன்' என்ற கவனம் குவித்தலைக் குறிக்கும். அடுத்த, 'யு' என்ற எழுத்து, 'அண்டர்ஸ்டாண்டிங்' என புரிந்து கொள்வதை குறிக்கும். இறுதியில் வரும், 'பி' என்பது, 'ப்ராக்டீஸ்' அதாவது பயிற்சியைக் குறிக்கும். இவற்றை மனதில் கொண்டு முயற்சியுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம்...' என்றார் உடற்கல்வி ஆசிரியர்.
அந்த அறிவுரை அப்போது எனக்கு தாக்கம் தரவில்லை. உயர் கல்வியை முடித்து வேலையில் சேர்ந்த பின், ஏற்பட்ட சிக்கல்களின் போது அதன் சிறப்பை புரிந்து கொண்டேன். அதன் வழி சிந்தித்து தக்க அணுகுமுறைகளால் வெற்றிகள் பெற்றேன்.
இப்போது என் வயது, 73; அரசு பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். வாழ்வில் பெரும் முயற்சிகள் செய்யும்போதெல்லாம் உடற்கல்வி ஆசிரியர் நடராஜன் கூறிய அறிவுரையை தவறாமல் பின்பற்றி வருகிறேன். அதன் வழியாக உயர்வுகளை அறுவடை செய்கிறேன்.
- ரா.வசந்தராஜன், கிருஷ்ணகிரி.
தொடர்புக்கு: 63805 37510

