PUBLISHED ON : ஏப் 19, 2025

கள்ளக்குறிச்சி, அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில், 1966ல், 11ம் வகுப்பு படித்தேன். தமிழாசிரியராக இருந்த செ.வரதராஜன் பாடம் நடத்துவதில் வல்லவர். என் ஓவியம் வரையும் திறனை அறிந்து வியந்து பாராட்டுவார். அதனால் அவருடன் நெருக்கம் ஏற்பட்டது.
பொதுதேர்வுக்கு பின், என் வேண்டுகோளை ஏற்று, சென்னைக்கு அழைத்து சென்றார். அவரது பழைய மாணவர் ஓவியர் அனந்தகிருஷ்ணன் என்பவரிடம் அறிமுகம் செய்து, 'இவன் நன்றாக வரைய உதவி செய்...' என கேட்டுக் கொண்டார். அதன்படி பயிற்சி பெற்றேன்.
அவரது அறிவுரைப்படி சென்னை ஓவியக்கல்லுாரியில் விளம்பரக் கலை பிரிவில் சேர்ந்து பயின்றேன். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, அதே கல்லுாரியில் விரிவுரையாளராக சேர்ந்தேன். பின்னாளில் முதல்வராக உயர்ந்தேன்.
எனக்கு, 76 வயதாகிறது; ஓவியத்துறையில் பரிசுகளும், பாராட்டுகளும் பெற்றுள்ளேன். என் படைப்புகள் வெளிநாட்டு கலைக்கூடங்களையும் அலங்கரிக்கின்றன. இளம் ஓவியர்களுக்கு வழிகாட்டும் வகையில், 'ஆயில் பெயின்டிங் வரைய கற்றுக்கொள்ளுங்கள்' என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எளிய தமிழில் எழுதியுள்ளேன். இதுபோல் உயர்வுகள் பெறுவதற்கு அடிப்படை அமைத்த தமிழாசிரியரை, இதயத்தில் உயிரோவியமாக தீட்டி வணங்கி வருகிறேன்.
- கே.சாமிக்கண்ணு, சென்னை.
தொடர்புக்கு: 94448 62103
