
தேனி மாவட்டம், உப்புக்கோட்டை பச்சையப்பா உயர்நிலைப் பள்ளியில், 1962ல், 6ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...
ஆங்கில பாட ஆசிரியர் பாலகிருஷ்ணன் மிக சுவாரசியமாக பாடங்களைக் கற்பிப்பார். மொழியை புரிந்து கொள்ள ஏதுவாக விளக்குவார். அன்று, 'கிளவர்மேன்' என்ற ஆங்கில சொல்லை அறிமுகம் செய்தார். அதை விளக்கும் முன், 'சொல்லின் பொருள் தெரியுமா...' என கேட்டார். தெரியாததால் முழித்துக் கொண்டிருந்தோம்.
என் அருகே அமர்ந்திருந்த நரசிங்கன் புயலனெ எழுந்து, 'கிழவர் என்றால் வயது முதிர்ந்தவர் என்று பொருள்...' என்று மடை திறந்த வெள்ளம் போல் கூறினான். அதை கேட்டதும், என்ன நடக்குமோ என விழித்தபடி இருந்தோம். சிறிதும் கோபமின்றி கலகலப்பாக, 'திறமை மிக்கவர் என்பது தான் பொருள்...' என, எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார். அந்த வார்த்தை ஆழமாக மனதில் பதிந்தது.
என் வயது, 72; பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். அந்த ஆசிரியர் கற்பித்த வழிமுறையில் என் வகுப்பறையில் பணி நாட்களில் பயிற்சி அளித்தேன். கனிவுடன் மொழி நுட்பங்களை கற்பித்தவரை போற்றி மகிழ்கிறேன்.
- எம்.கருப்பையா, தேனி.