
செப்., 15, ஓணம் பண்டிகை!
கேரளாவில் இது அறுவடைக் காலம். உணவளிக்கும் இறைவனுக்கு நன்றி சொல்லும் வகையில், ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும், ஆவணி மாதம், திருவோண நட்சத்திரத்தில் இது கொண்டாடப்படுகிறது. மலையாள ஆண்டின் முதல் மாதம் சிங்கம். அந்த மாதத்தில் தான் ஓணம் திருநாள் இடம் பெறுகிறது. இந்த பண்டிகையையொட்டி பல வண்ண பூக்களை நேர்த்தியாக அடுக்கி கோலம் போடுவர் பெண்கள். இது, பூக்கோலம் என அழைக்கப்படும். இதில், அத்தப்பூ என்ற மலரை தான் முதலில் வைப்பர். பின், மற்ற மலர்களை முறைப்படுத்தி கண்ணைக் கவரும் விதமாக அலங்கரிப்பர்.
குடும்பத்தில் அனைவரும் புத்தாடை அணிவர். அது பெரும்பாலும், வெண்மை நிறத்தில் இருக்கும். இதற்கு, ஓணக்கோடி என்று பெயர். பின், கோவிலில் திரிக்கார அப்பன் எனப்படும், வாமன வடிவ விஷ்ணு கடவுளை வழிபடுவர். பூக்களால் அலங்கரித்த ஊஞ்சலாடி மகிழ்வர். கைகளைத் தட்டியபடி மகிழ்வோடு நடனம் ஆடுவர். இதற்கு கைகொட்டுக்களி என்று பெயர்.
குடும்பங்களில் பெரும் விருந்து நிகழ்ச்சி நடக்கும். இதில், உறவினர் மற்றும் நண்பர்கள் பங்கேற்பர். இந்த நிகழ்வு, 'ஓண சாத்யா' எனப்படுகிறது. மிகப்பெரிய வாழை இலைகளில் பரிமாறப்படும். விருந்தில், ஒன்பது சுவை உடைய, 64 வகை உணவுகள் வரை இடம் பெறும். இதில் அடை, அவியல், இஞ்சிப்புளி, பரங்கிக்காய் குழம்பு, அடை பிரதமன் நிச்சயம் இருக்கும்.
ஓணத்தையொட்டி, கேரளாவில் வல்லம்காளி என்ற நிகழ்வு நடைபெறும். அதாவது, பாம்பு படகுப் போட்டி. இதைக் காண சுற்றுலா பயணியர் பெருமளவில் குவிவர். நீண்ட படகுகளில் பலர் அமர்ந்து துடுப்பு போட்டு ஓட்டுவது பிரமாண்டமாக இருக்கும்.
ஓணம் பண்டிகையை ஒட்டி, ஒன்பதாம் நாள் ஒரு நிகழ்வு நடத்தப்படும். அதில், குடும்பத்தில் மூத்த உறுப்பினருக்கு, காய்கறி, தேங்காய் எண்ணெய் பரிசாக தரப்படும். இதை, 'ஓணக்கழச்சா' என்பர். கோவில்களில் யானைகளை அலங்கரித்து ஊர்வலமாக அழைத்து வருவர்.
ஓணம் தொடர்பான புராணக்கதை ஒன்றும் வழங்கப்படுகிறது. அது, விஷ்ணு கடவுளின், திருமால் அவதாரம் பற்றியது. அந்த கதையை பார்ப்போம்...
வாமன அவதாரம் எடுத்த திருமால், மன்னன் மகாபலியிடம் மூன்று பிடி மண் தானமாகக் கேட்பார். மன்னனும் தருவதாக உறுதி கூறுவான். உடனே, விஸ்வரூபம் எடுத்து திருமால் முதல் அடி எடுத்து வைப்பார். அதில், முழு பூமியையும் தனதாக்கி கொள்வார். இரண்டாம் அடி வைத்ததும், சொர்க்கலோகத்தை அளந்து விடுவார். மூன்றாம் அடியை எங்கே வைப்பது என்ற கேள்வி எழும். மன்னன் மகாபலி தலையில் வைத்து, அவரை பாதாள உலகுக்கு அனுப்பி விடுவார் திருமால்.
ஒவ்வொரு ஆண்டும், ஓணம் பண்டிகையன்று, மன்னன் மகாபலி, பூமிக்கு திரும்பி மக்களை சந்திப்பதாக நம்பிக்கை நிலவுகிறது. மன்னன் மகாபலியை, மலர்க்கோலம் போட்டு, விளக்கு ஏற்றி, பாடல்களைப் பாடி வரவேற்பதையே ஓணம் பண்டிகையாக கொண்டாடுவதாக நம்புகின்றனர் மக்கள்.
இப்படி ஓணம் பண்டிகை, 10 நாட்கள் மகிழ்வுடன் கொண்டாடப்படுகிறது.
இனிய ஓணம் வாழ்த்துகள்!
- ஜி.எஸ்.எஸ்.,