
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி, திலகர் வித்தியாசாலா பள்ளியில், 1957ல், எஸ்.எஸ்.எல்.சி., சேர்ந்திருந்தேன். அப்பாவின் பணி காரணமாக, அதற்கு முன் ஆந்திர மாநிலத்தில் தங்கியிருந்தோம். அங்கு தெலுங்கு மொழியில் படித்து வந்தேன். தமிழ் பேச மட்டுமே வரும்; எழுத தெரியாது. முக்கிய பாடங்களை அம்மா உதவியுடன் தமிழில் எழுத முயற்சி செய்திருந்தேன்.
இந்த நிலையில் வகுப்பு தேர்வு நடத்திய தமிழாசிரியர், மதிப்பெண்களை உரக்க வாசித்தார். எனக்கு, 'ஜீரோ...' என கேலியாக அறிவித்தார். மனம் உடைந்து விட்டது. வீட்டுக்கு வந்ததும், 'இனி பள்ளிக்கு செல்ல மாட்டேன்...' என்று அப்பாவிடம் அழுதேன்.
சமாதானப்படுத்தி, தலைமையாசிரியர் ரங்கராஜனிடம் அழைத்து சென்று நிலைமையை எடுத்துக் கூறினார் அப்பா. பிரச்னையை புரிந்து, சிறப்பு கவனம் செலுத்தி கற்பிக்க ஏற்பாடு செய்தார் தலைமையாசிரியர். மனம் ஊன்றி கற்று தமிழில் சிறப்பு தேர்ச்சி பெற்றேன்.
என் வயது, 82; தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். கதை, கவிதைகள் எழுதி வருகிறேன். மத்தியமார் என்ற முகநுால் குழுவில் சுவாரசியமிக்க பதிவுகளை எழுதி பாராட்டு பெற்றுள்ளேன். இந்த உயர்வுகளுக்கு அடித்தளம் அமைத்த அந்த தலைமையாசிரியரை போற்றி வணங்குகிறேன்.
- ராஜலட்சுமி கவுரிசங்கர், திருநெல்வேலி.
தொடர்புக்கு: 9677004441