தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வெறுப்பும், மன்னிப்பும்!

வெறுப்பும், மன்னிப்பும்!

வெறுப்பும், மன்னிப்பும்!


PUBLISHED ON : பிப் 28, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 28, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆசிரியை மலர்விழி, ஒவ்வொரு நாள் வகுப்பு முடிவடையும் போதும், பள்ளி மாணவர்களுக்கு ஒரு நல்லொழுக்க போதனையை கூறி முடிப்பது, வழக்கம்.

அன்று, வகுப்பு நேரம் முடிவுக்கு வந்தது.

''நாளை வரும்போது ஒவ்வொருவரும் பழுத்த தக்காளிகளை ஒரு பையில் கொண்டு வர வேண்டும்...'' என்று நிபந்தனை விதித்தார், ஆசிரியை.

மாணவர்கள், புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

''நீங்கள் ஒவ்வொருவரும் எத்தனை தக்காளிகளை கொண்டு வர வேண்டும் என்பதற்கு, நிபந்தனையும் உள்ளது...'' என்றார், ஆசிரியை மலர்விழி.

'அது என்ன நிபந்தனை...'

மாணவர்கள் கோரசாக கேட்டனர்.

''ஒவ்வொரு தக்காளிக்கும், நீங்கள் வெறுக்கும் நபரின் பெயரைக் சூட்ட வேண்டும். வெறுக்கும் நபர்களின் எண்ணிக்கைக்கு சமமாக, தக்காளிகளை கொண்டு வர வேண்டும். உதாரணமாக, இரண்டு நபர்களை வெறுப்பவர்கள், இரண்டு தக்காளிகளையும்; ஐந்து நபர்களை வெறுப்பவர்கள் ஐந்து தக்காளிகளையும் கொண்டு வர வேண்டும்...'' என்றார், ஆசிரியை.

அ டுத்த நாள் -

அனைத்து மாணவர்களும், பள்ளி புத்தகப் பையுடன், தக்காளிகள் அடங்கிய பையையும் கொண்டு வந்தனர். சிலர் இரண்டு தக்காளிகள், சிலர் மூன்று தக்காளிகளை ஒரு பையில் எடுத்து வந்திருந்தனர். ஒரு சிலர், 20 தக்காளிகள் வரை கூட கொண்டு வந்திருந்தனர்.

வகுப்பறைக்கு ஆசிரியை மலர்விழி வந்ததும், தக்காளிகளை காட்டினர், மாணவர்கள்.

''இந்த தக்காளி பைகளை, இந்த வாரம் முழுவதும் அவரவர் வைத்திருக்க வேண்டும். பள்ளியிலும், வெளியிலும், எப்போதும் அதை உடன் எடுத்து செல்ல வேண்டும். இதுதான், இந்த வார டாஸ்க்...'' என்றார், ஆசிரியை மலர்விழி.

அடுத்தடுத்த நாட்களில், தக்காளிகள் அழுகி, துர்நாற்றமெடுத்தது.

அந்த வார இறுதியில், ''இந்த தக்காளி டாஸ்க்கை எப்படி உணர்ந்தீர்கள்...'' என்று கேட்டார், ஆசிரியை.

'டீச்சர்... தக்காளி பையிலிருந்து வரும் துர்நாற்றத்தை சகிக்க முடியவில்லை...' என்றனர், மாணவர்கள்.

அதிக தக்காளிகளை வைத்திருந்த மாணவர்கள், 'தக்காளிகள் அழுகியதால், துர்நாற்றம் வீசுவதோடு, எடையும் கூடிவிட்டது. யாரும் எங்களை நெருங்குவதில்லை. வீட்டில் பெற்றோரும் திட்டுகின்றனர்...' என்று, புகார் கூறினர்.

இதை கேட்ட ஆசிரியை புன்னகைத்தார்.

''கெட்டுப்போன தக்காளியை தொடர்ந்து நம்மிடம் வைத்திருப்பது எத்தனை சிரமமோ, அதே போல் தான் மனதில் தேக்கி வைத்துள்ள வெறுப்பு, வன்மம், துவேஷம் போன்றவையும்... உங்களை தனிமைப்படுத்திவிடும்....

''உங்களின் இளம் மனது, ஒரு அழகான பூந்தோட்டம் போன்றது. தேவையற்ற களைகளை அகற்றி சுத்தம் செய்யுங்கள். உங்களை காயப்படுத்தியோரை, மன்னியுங்கள். எப்போதும் நல்ல சிந்தனைகளை மட்டுமே மனதில் கொண்டிருக்க வேண்டும்...'' என்றார், ஆசிரியை மலர்விழி.

மாணவர்களும் அதன்படியே நடப்பதாக உறுதி அளித்து, தக்காளி பைகளை வீசி எறிந்தனர்.

குழந்தைகளே... யார் மீதும் வெறுப்பை தேக்கி வைக்கக் கூடாது.

- ஆர்.ஹரிகோபி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us