
திருப்பூர் மாவட்டம், உடுமலை, சிவசக்தி காலனி அரசு உயர்நிலைப் பள்ளியில், 2015ல், 10ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்...
கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்தவன் நான். படிப்பில் தீவிர ஆர்வம் காட்டிய போதும் வகுப்பில் பின்தங்கி சிரமப்பட்டேன். ஆண்டு இறுதி பொதுத்தேர்வுக்கு யாரை எல்லாம் அனுமதிக்கலாம் என திறனாய்வு செய்தது ஆசிரியர் குழு.
என்னை அனுமதித்தால், 'வெற்றி சதவீதம் பள்ளிக்கு குறையும்; ஆசிரியர்களுக்கு கெட்ட பெயர் ஏற்படும்' என காரணங்கள் முன்வைக்கப்பட்டன. எனக்கு சாதகமாக யாரும் பேசவில்லை. துவண்ட நிலையில் நின்றிருந்தேன்.
விபரமறிந்து அங்கு வந்த ஆங்கில ஆசிரியர் நித்தியானந்தம், 'இவன் தேர்வு எழுதுவதை தடுப்பது பெரும் தவறு... முயற்சியால் வெற்றி பெறுவான்...' என்று எனக்கு சாதகமாக வாதிட்டு நிர்பந்தித்தார். தேர்வு எழுத அனுமதி கிடைத்தது.
நம்பிக்கையுடன் அயராது படித்தேன். முடிவு வெளியானதும் அளவில்லா மகிழ்ச்சி அடைந்து ஆங்கில ஆசிரியரை சந்தித்தேன். என் வெற்றியை அவருக்கு சமர்ப்பித்து பெருமைப்படுத்தினேன். கற்பித்த எல்லாரையும் பணிந்தேன்.
இரண்டாண்டுக்கு பின், வகுப்பறையில் பாடம் நடத்திய நிலையில் ஆங்கில ஆசிரியர் உயிர் பிரிந்ததை அறிந்து அதிர்ந்து அஞ்சலி செலுத்தினேன்.
எனக்கு, 26 வயதாகிறது. கட்டுமான பொறியாளராக பணியாற்றுகிறேன். இந்த உயர்வுக்கு ஆங்கில ஆசிரியர் நித்தியானந்தம் ஊட்டிய நம்பிக்கையே அடிப்படையாக அமைந்துள்ளது. அவரது நினைவை போற்றி வாழ்கிறேன்.
- நந்தகுமார் ஜெயன், திருப்பூர்.
தொடர்புக்கு: 73736 93189