
வாழும் சூழலுக்கு தீங்கு விளைவிக்கிறது பிளாஸ்டிக் பை. இதற்கு மாற்றாக, சூழலுக்கு உகந்த காகிதப்பை, துணி பை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதை வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 12ம் தேதி காகிதப்பை தினமாக உலகம் முழுதும் கடைப்பிடிக்கப்படுகிறது.
காகிதப்பை, 100 சதவீதம் மறுசுழற்சிக்கு உகந்தது. உற்பத்தி செலவும் குறைவு. தயாரிக்க குறைந்த ஆற்றலே தேவைப்படுகிறது. உறுதி மிக்க காகித பை பயன்பாட்டால் உலகில் உயிரினங்களுக்கு நன்மை கிடைக்கிறது.
காகிதப் பை உற்பத்தி செய்யும் முதல் இயந்திரம், 1852ல் தயாரிக்கப்பட்டது. அமெரிக்கா, பென்சில்வேனியாவில் பள்ளி ஆசிரியராக பணியாற்றிய பிரான்சிஸ் வோல் உருவாக்கினார். அந்த இயந்திரத்திற்கு காப்புரிமையும் பெற்றார். யூனியன் பேப்பர் பேக் என்ற நிறுவனத்தை சகோதரருடன் இணைந்து நிறுவினார்.
பின், மார்கரெட் இ நைட் என்பவர் அடிப்புறம் தட்டையான காகிதப் பை தயாரிக்கும் இயந்திரத்தை, 1871ல் உருவாக்கினார். இது பரவலாக பயன்படுத்தப்பட்டது. பல நாடுகளிலும் விரும்பப்பட்டது. இந்த பையை உருவாக்கியவரை சிறப்பிக்கும் வகையில், 'மளிகை பையின் தாய்' என கவுரவம் வழங்கப்பட்டது.
முதல் ஷாப்பிங் காகித பையை, வால்டர், லிடியா டியூபெனார் ஆகியோர், 1912ல் உருவாக்கினர். இந்த கண்டுபிடிப்புக்கு காப்புரிமையும் பெற்றனர்.
காகித பை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஊட்ட உலகின் மிகப்பெரிய காகித ஷாப்பிங் பை, 2015ல் ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டது. இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. காகித பை பயன்படுத்துவதால் பூமியில் மக்காத குப்பை குவிவதை தடுக்க முடியும்.
- வி.திருமுகில்