
சிவகங்கை, சிங்கம்புணரி அரசு உயர்நிலைப் பள்ளியில், 1959ல், 6ம் வகுப்பு படித்த போது, வகுப்பாசிரியர் சீத்தாராம ஐயர் மிகவும் கண்டிப்பானவர். ஆங்கிலப் பாடம் நடத்துவதில் வல்லவர். ஒருநாள் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, மதிய உணவு இடைவேளைக்காக மணி ஒலித்தது.
அந்த சத்தத்தை கேட்டதும் வகுப்பறையை விட்டு பாய்ந்து ஓடினேன். போட்டி போட்டு ஓடுவோரை காணாததால் சற்று தயங்கி திரும்பி பார்த்தேன். யாரும் வெளியேறாமல் என்னை வேடிக்கை பார்த்ததை கண்டேன். தடுமாறிய என்னை, ஒருவன் திரும்ப அழைத்து சென்றான்.
வகுப்பறையை அடைந்ததும், கோபமாக திட்டி, கன்னத்தில் அடித்து தண்டித்தார் ஆசிரியர். மாணவர்கள் முன்னிலையில், இது நடந்ததால் மிகவும் அவமரியாதையாக எண்ணி வருந்தினேன். ஆசிரியர் சென்ற பின் தான் வெளியேற வேண்டும் என்ற பாடத்தை கற்றேன்.
என் வயது, 76; மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில், துணை நுாலகராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். எல்லா தருணங்களிலும், அந்த ஒழுங்கை கடைப்பிடிக்கிறேன். என்னை நல்வழிப்படுத்திய ஆசிரியரை நினைவில் தாங்கியுள்ளேன்.
- ஜி.தனசேகரன், மதுரை.
தொடர்புக்கு: 99442 57364