
இயற்கை எழில் மிக்க தேனியில் வசித்தார் தமிழாசிரியர் செழியன்.
பள்ளி விடுமுறை நாட்களில் உலா செல்வது வழக்கம்.
அன்று மாலை வாழைத் தோட்டம், வயல் வரப்புகள் வழியாக நடந்தார்.
தவளையின் பின்னங்கால்களை இறுகப் பிடித்திருந்தன நீர் பாம்புகள். தலைப்பக்கம் வெளியே தெரிய உயிருக்கு போராடி, 'கொர்... கொர்...' என அலறின தவளைகள்.
பல் துலக்கும் குச்சி சேகரித்த போது ஒரு குரல் கேட்டு நிமிர்ந்தார். அருகில், 25 வயது மதிக்கத்தக்க ஒருவன் வந்தான். பறவைகளை குறி வைத்து அடிக்கும், கவட்டை வில் வைத்திருந்தான்.
''ஐயா... சற்று ஓரமாக நில்லுங்கள். கருவேல மரத்தடியில் கொக்கு வேட்டையாடப் போகிறேன்...'' என ஓடினான்.
மரத்தில், வெண்ணிறக் கொக்குகள் கூட்டமாக அமர்ந்திருந்தன; குஞ்சுகளுக்கு இரையூட்டி மகிழ்ந்தன.
கொக்கிற்கு குறி வைத்தான் வேட்டைக்காரன். கவட்டை வில்லில் உருட்டுக்கல்லை வைத்து அடித்தான்.
மறுகணமே பறவைக் கூட்டம் சிதறியது.
ஒன்று, கிளைகளுக்கு இடையே துடி துடித்து, ரத்தம் சிந்தியபடி விழுந்தது.
ஓடிப் பிடித்து, மகிழ்ச்சியுடன் தோள் பையில் போட்டவன், ''ஐயா... தினமும், இரண்டு கொக்குகள் பிடித்து செல்வேன்...'' என்றான்.
''தம்பி... நீங்க என்ன பணி செய்றீங்க...'' என்றார் செழியன்.
''தனியார் நடுநிலைப் பள்ளியில் கைத்தொழில் ஆசிரியராக இருக்கிறேன். மாதம், 5,000 சம்பளம் கிடைக்கிறது...''
''மாணவர்களுக்கு அறிவுரை கூறுபவர், இப்படி வேட்டையாடலாமா...''
''மீன், தவளை, நண்டுகளை கொன்று தின்னும் கொக்குகளை வேட்டையாடுவதில் தவறு என்ன இருக்கிறது ஐயா...''
''கொக்கு, அவற்றை தின்று, வாழும்படி இயற்கை படைத்துள்ளது. பகுத்தறிவுள்ள நாம், பிற உயிரினங்களை துன்புறுத்தாமலே வாழலாம்...''
''ஏதோ பழகிடுச்சு. வேட்டையாடுகிறேன்; நீங்கள் சொல்வது நியாயம் தான்; வேட்டையை மறக்க முயற்சிக்கிறேன். என்னை எல்லாரும் கொக்கு வாத்தியார் என்று தான் அழைக்கின்றனர்...'' என கூறி, சென்றான்.
முயற்சிப்பதாக அவன் கூறியது, செழியனுக்கு சற்று ஆறுதல் அளித்தது.
அன்று வார விடுமுறை -
கொக்கு வேட்டையாட வருபவரை கொக்கி போட்டு பிடிக்க ஆர்வத்துடன், கண்மாய்க்கு வந்தார் செழியன்.
மிதிவண்டியில், கவட்டை வில்லுடன் வந்தவன், ''ஐயா... இன்றைய வேட்டைக்கு பின், தொழிலை விடுத்து, திருந்தி வாழ முடிவெடுத்துள்ளேன்...'' என கூறி, கருவேல மரத்தடிக்கு ஓடினான்.
கவட்டை வில்லில், கல்லை வைத்து இழுத்து விட்டான்.
மரத்தின் உச்சியில் மகிழ்ந்திருந்த நாரைக் கூட்டமும், கொக்குகளும், குஞ்சுகளுடன் கத்தியவாறு பதறி சிதறி பறந்தன.
அடிபட்ட பெரிய கொக்கு ஒன்று, கிளைகளுக்கிடையே சரிந்து வந்தது. ஆவலுடன் கையை மேலே துாக்கி அதை பார்த்தான் வேட்டைகாரன்.
கொக்கின் கண்ணிலிருந்து வழிந்த ரத்தம் முகத்தில் விழுந்தது; தலைகீழாக விழுந்த கொக்கின் கூரிய அலகு அவனது வலது கண்ணில் தைத்தது.
'ஐயோ...' என அலறியபடி கொக்கை இழுத்தான். கண் விழியில் குத்திய அலகுடன், கொக்கு துடித்தது. அவனை ஒரு வண்டியில் ஏற்றிய செழியன், மருத்துவமனைக்கு விரைந்தார். பறவைகளை வேட்டையாடியவன் ஒரு கண்ணை இழந்து மீண்டான்.
பட்டூஸ்... எந்த உயிரினங்களையும் வதைக்க கூடாது!
கி.கண்ணபிரான்