
தொழிலுக்கு தேவையான பொருட்களுடன் இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டார் தச்சர் ஆறுமுகம். வழியில் வாகனம் பழுதடைந்தது. அதை தள்ளிச் சென்று பழுது நீக்கி பயணித்தார். இதனால் தாமதம் ஏற்பட்டது.
வேலைக்கு தாமதமாக சென்றதால் கடுமையாக வசைப் பாடினார் முதலாளி. இதில் தடுமாற்றம் ஏற்பட்டது. வேலையை துவங்கிய போது, சுத்தியல் கைதவறி விரலில் காயம் ஏற்பட்டது.
கவலையுடன், 'நேரம் சரியில்லை' என முணுமுணுத்தார்.
பின், சற்று நிதானித்து, வேலையில் கவனம் செலுத்தி சிறப்பாக முடித்தார்.
மாலை பணி முடிந்தது. வீட்டுக்கு செல்ல புறப்பட்டார். இரு சக்கர வாகனத்தை கிளப்ப முயன்றார். அது பழுதாகியிருந்தது. நிலைகுலைந்து நின்றார் ஆறுமுகம்.
இதை கவனித்து, ''பாவம்யா நீ... இன்று எல்லாமே சோதனையா இருக்கு. உன் வண்டியை பழுது நீக்கி வீடு செல்ல நேரமாகும்; என்னுடன் வா; வீட்டில் விடுகிறேன்...'' என பரிவுடன் அழைத்தார் முதலாளி.
ஆறுதலாக பேசியபடி காரை ஓட்டினார். வீட்டு வாசலில் இறக்கி விட்டார்.
ஆறுமுகத்தின் வீட்டு வாசல் -
காரில் அழைத்து வந்த முதலாளிக்கு நன்றி தெரிவித்தார் ஆறுமுகம். பின், வீட்டுக்கு வந்து செல்ல அன்பாக அழைத்தார். அதை ஏற்று, சென்றார் முதலாளி.
அப்போது, வீட்டின் வாசலில் நின்ற மரத்தில், சிறிது நேரம் கையை ஊன்றி நின்றார் ஆறுமுகம். ஒன்றும் புரியவில்லை. வியப்புடன் அந்த செயலை பார்த்துக் கொண்டிருந்தார் முதலாளி.
வீட்டில் -
ஆறுமுகத்தை கண்டதும், ஓடி வந்து கட்டிக்கொண்டது குழந்தை. அதை துாக்கி அணைத்து முத்தம் கொடுத்தார். புன்முறுவலுடன் முதலாளியை குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்தார்.
கவலையின்றி குழந்தையுடன் விளையாடினார் ஆறுமுகம்.
இதை கண்டதும், 'நாள் முழுதும் ஏற்பட்ட இடையூறுகளையே எண்ணிக் கொண்டிருக்காமல், இயல்பாக இருக்கிறாரே' என வியந்தார் முதலாளி.
உபசரிப்புக்கு பின், புறப்பட்டார் முதலாளி.
அவரை வழியனுப்ப வாசலுக்கு வந்தார் ஆறுமுகம்.
அவரிடம், ''பணித்தளத்தில் நடந்ததை பற்றி, துளியும் கவலையின்றி உன்னால் எப்படி இருக்க முடிகிறது...'' என விசாரித்தார் முதலாளி.
''ஐயா... வீட்டு வாசலில், ஒரு மரத்தில் கையூன்றி சென்றதை பார்த்தீர்களா... என் சுமைகளை தாங்க கூடியது அந்த மரம். ஒவ்வொரு நாளும் வேலை முடித்து வரும் போது, கவலை, களைப்பை இந்த மரத்தில் இறக்கி வைப்பேன்...
''வேலையில் பிரச்னைகள் இருக்கும்; அதையெல்லாம், வீட்டிற்குள் எடுத்து செல்ல கூடாது. காலையில் வாகனம் பழுதானதால் தாமதமாக வந்தேன். பதற்றத்தால் விரலில் காயம் ஏற்பட்டது. இதற்கெல்லாம், என் குடும்பத்தார் எப்படி பொறுப்பேற்க முடியும்... அவர்கள் மீது கோபத்தையோ, வருத்தத்தையோ காட்டுவது எவ்விதத்திலும் நியாயம் இல்லை...'' என்றார் ஆறுமுகம்.
வியந்தபடி அந்த நல்ல பழக்கத்தை கடைபிடிக்க முடிவு செய்தார் முதலாளி.
பட்டூஸ்... பிரச்னைகளை பெரிதாக எண்ணாமல், அடுத்த பணிகளில், கவனம் செலுத்தினால் முன்னேறலாம்!
கா.மு.பாரூக்