
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருவைகாவூர் துவக்கப் பள்ளியில், 1978ல், 5ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்...
அன்று காலை பள்ளி நுழைவு வாசலில் கண்காணிப்பு பணியில் இருந்தார் தலைமை ஆசிரியர் ந.கணேசன். தாமதமாக வந்த நான் நடுக்கத்துடன் அவருக்கு வணக்கம் வைத்தபடி கடந்து சென்றேன்.
என் பெயரை சுருக்கி, 'மாமு இங்கே வா...' என்று அழைத்தார்.
பதற்றத்துடன் சென்ற என்னை, 'புத்தக பையை வகுப்பில் வைத்து, வெளியில் மண்டியிட்டு அரை மணி நேரம் நில்...' என்றார்.
கட்டாந்தரை வெயிலில் கலங்கி அழுதபடி நின்றேன்.
தண்டனை நேரம் முடிந்ததும், 'வகுப்புக்கு இனி, தாமதமாக வந்தால், டி.சி., கொடுத்து அனுப்பி விடுவேன். எந்த நிகழ்வுக்கும் அரை மணி நேரம் முன்னதாக செல்ல கற்றுக் கொள்...' என அறிவுரைத்தார்.
படிப்பை முடித்ததும், அரசு பணி கிடைத்தது. பணி செய்யும் இடத்தில் நேர நிர்வாகத்தை முறையாக கடைபிடிக்க துவங்கினேன். இடமாறுதல்களில், பணிபுரியும் அலுவலக பகுதியிலே குடும்பத்தை குடிவைத்து விடுகிறேன். இதனால், தாமத பிரச்னையை தவிர்க்க முடிகிறது.
தற்போது, என் வயது, 55; நேர நிர்வாகத்தை உணர்த்தி, அமைதியாக வாழும் வழிமுறையை கற்பித்த அந்த தலைமை ஆசிரியரை நினைவில் ஏந்தி வாழ்கிறேன்.
- மா.முருகானந்தம், தஞ்சாவூர்.
தொடர்புக்கு: 78688 08688