/
இணைப்பு மலர்
/
சிறுவர் மலர்
/
அதிமேதாவி அங்குராசு - வளம் குன்றா மலை!
/
அதிமேதாவி அங்குராசு - வளம் குன்றா மலை!
PUBLISHED ON : பிப் 03, 2024

வளம் குன்றா மலை!
கன்னியாகுமரியில் துவங்கி, கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத் மாநிலம் வரை, 1,600 கி.மீ., தொலைவு பரவி உள்ளது மேற்கு தொடர்ச்சி மலை. தமிழகத்தில், தொட்டபெட்டா, ஆனைமுடி போன்ற உயரமான சிகரங்கள் உள்ளன. மேற்கு, கிழக்கு மலைத்தொடர்கள் நீலகிரி மாவட்டத்தில் சேர்கின்றன.
மேற்கு தொடர்ச்சி மலை, அரபிக்கடலில் இருந்து வீசும் குளிர் காற்றைத் தடுத்து, தென்மாநிலங்களுக்கு நல்ல மழை பொழிவை தருகிறது. இது, தென்மேற்கு பருவ மழை எனப்படுகிறது. கோடையில், வெப்பத்தை தணிக்கிறது; குளிர்காலத்தில் விரும்பும் பருவ நிலையை உருவாக்குகிறது.
கொடைக்கானல், ஊட்டி, மூணாறு உள்ளிட்ட, கோடை வாழிடங்கள் இதில் உள்ளன. பழநி முருகன், சபரிமலை ஐயப்பன் கோவில்கள் புகழ்பெற்ற ஆன்மிக தலங்களும் பாலக்காடு, செங்கோட்டை கணவாய்களும் உள்ளன.
முட்புதர், புல்வெளிப் பிரதேசங்கள், பசுமை மாறா காடுகள் என, இயற்கையின் அதிசயங்கள் இங்கு உள்ளன. உலகின் பாரம்பரியம் மிக்க சின்னங்களில் ஒன்றாக தகுதி பெற்றுள்ளது. இதை யுனெஸ்கோ நிறுவனம், 2012ல் அறிவித்தது.
மேற்கு தொடர்ச்சி மலையில் சிறப்பிடங்களை பார்ப்போம்...
கோவை குற்றாலம்: கோவை அருகே புகழ் பெற்ற சுற்றுலாத் தலம். பல அடுக்குகள் உடைய நீர்வீழ்ச்சி ரம்மியமான தோற்றத்தில் காணப்படுகிறது. சிறுவாணி ஆற்றில் உள்ளது.
தேனி சுருளி நீர்வீழ்ச்சி: மேகமலையில் ஊற்றெடுக்கும் நீர்வீழ்ச்சி, முதலில் ஒரு குட்டையில் தேங்கி நிரம்பி பாய்கிறது. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் இதன் சிறப்பு, வனப்பை பாடியுள்ளார் இளங்கோவடிகள்.
போடி மெட்டு: கடல் மட்டத்திலிருந்து, 4,500 அடி உயரத்தில் தனித்தன்மை வாய்ந்த சுற்றுலா இடமாக உள்ளது.
சோத்துப்பாறை அணை: வராக நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. கொடைக்கானல் மலையின் பின்பகுதியில் உள்ளது.
குற்றாலம்: இங்குள்ள பேரருவியை, 'மெயின் அருவி' என்பர். அருவியில், 60 மீட்டர் உயரத்தில் இருந்து தண்ணீர் விழுகிறது. இடையே உள்ள பொங்குமாக்கடல் என்ற அமைப்பில் முதலில் தண்ணீர் விழுந்து, குளிக்கும் பகுதிக்கு வருகிறது.
இந்த அமைப்பு இல்லையென்றால், பேரருவி மக்கள் குளிக்க ஏற்றதாக இருக்காது. அதிக உயரத்திலிருந்து விழும் தண்ணீரின் அழுத்தத்தை பொங்குமாக்கடல் தணிக்கிறது.
மூலிகை வளம் மிக்கது. இந்த பகுதி சுற்றுலா பயணியரை பெருமளவில் கவர்கிறது. இதன் அருகில் தேவாரப் பாடல் பெற்ற திருக்குற்றாலநாதர் கோவில் அமைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை காலத்தில், மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
பாபநாசம் அணை: பொதிகை மலையில் கட்டப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றங்கரையில், பாபநாசம் அருவிக்கு அருகே உள்ளது. புண்ணிய தலமாக திகழ்கிறது. அழகிய இயற்கை ஓவியம் போல இருக்கும்.
மாஞ்சோலை: தேயிலை உற்பத்தியால் புகழ் பெற்றது. இயற்கை எழில் நிரம்பியுள்ளதால் சுற்றுலா பயணியரை ஈர்க்கும் வகையில் விளங்குகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில்...
* பூக்கும் தாவரங்களில், 5,860 இனங்கள் வளர்கின்றன
* இங்கு மட்டுமே வளரும், 1,600 தாவர இனங்கள் உள்ளன
* அரிய வகை ஆரோக்கியபச்சை, காட்டுத் திப்பிலி, காட்டுநாவல், செம்மரம், ஜாதிக்காய், அசோகமரம், சூடமரம், குரங்குநாவல் போன்ற தாவரங்களை காணலாம்
* உறை பனி இன்றி, ஜீவ நதிகளை உருவாக்கும் சோலைக்காடுகள் உள்ளன
* உலகில் அடர் காடுகள் வரிசையில் இங்குள்ள, 'சைலண்ட் வேலி' இடம் பெற்றுள்ளது
* வரையாடு என்ற அரிய உயிரினம் வாழ்கிறது
* விலங்குகளில், 120 இனங்கள், பறவைகளில், 550 இனங்கள், பூச்சியினங்கள், மெல்லுடலிகள் மற்றும் ஊர்வன வகை உயிரினங்கள் வாழ்கின்றன.
கோவையை அடுத்த ஆனைகட்டி பகுதியில், சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. களக்காடு, முண்டந்துறை புலிகள் சரணாலயங்களை உடையது.
காவிரி நதியின் உற்பத்தி இடமான குடகும், தலைக்காவிரியும் இந்த மலைத் தொடரில் தான் உள்ளன.
மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை வளத்தை பாதுகாக்க ஒவ்வொருவரும் உறுதி ஏற்க வேண்டும்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.