
அரவநாட்டில் வழிப்போக்கர் சத்திரத்தில் வேலை செய்து வந்தான் வீம்பன். வந்தவர்களுக்கு கம்புச் சோறு, கீரைக்குழம்பு எல்லாம் பரிமாறி முடித்ததும், அவர்களுடன் சொக்கட்டான் விளையாட துவங்குவான்.
அது வெறும் பொழுதுபோக்குக்காக அல்ல; வெல்பவர்களுக்கு, பொற் காசுகள் தருவதாக கூறி அழைப்பான்.
ஒருவேளை ஆடவருபவர் தோல்வியை தழுவினால் கிணற்றிலிருந்து, 100 வாளி நீர் இறைக்க வேண்டும் என்ற நிபந்தனை வைப்பான்.
ஆட்டத்தில் அவனை வென்றவர் கிடையாது; அடைக்கலம் புகுந்தவர்களை சூதுக்கு அழைத்து தோல்வி அடைந்ததும், கிணற்று நீர் இறைக்க செய்வதை பெரியோர் பலமுறை கண்டித்துள்ளனர்.
யார் பேச்சையும் மதிக்காமல், ஆணவத்துடன் தொடர்ந்து செய்து வந்தான் வீம்பன்.
'சிரமம் இல்லாமல் சமையல் பாத்திரங்களை துலக்க போதுமான தண்ணீர் கிடைக்கிறது இல்லையா...' என்று சமாதானம் சொல்வான் வீம்பன்.
ஒரு நாள் -
நள்ளிரவில் சத்திரத்துக்கு இருவர் வந்தனர்; இருவரும் உடன்பிறந்த சகோதரர்கள்; இரவு சாப்பாட்டை முடித்த பின் உறங்க சென்றனர்; அவர்களை சொக்கட்டான் ஆட அழைத்தான் வீம்பன்.
இளையவன் ராசு களைத்து போயிருந்ததால் துாங்க சென்றான்; மூத்தவன் வருணனுக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தது. ஆனால், பணயம் வைக்கப்பட்டிருந்த பொற் காசுகளை நினைத்து விளையாட சம்மதம் தெரிவித்தான்.
ஆட்டம் விடியும் வரை தொடர்ந்தது; இறுதியில் எப்போதும் போல் வெற்றி பெற்றான் வீம்பன்; மூத்தவனுக்கு வருத்தம் தாங்க முடியவில்லை; இருந்தும் நிபந்தனையின் பொருட்டு கிணற்றில் நீர் இறைத்தான்.
மறுநாள் -
காலையில் எழுந்ததும், வருணன் காய்ச்சலில் உளறி கொண்டிருப்பதை பார்த்தான் ராசு. விசாரித்து நடந்தவற்றை அறிந்து கொண்டான்.
சகோதரனை இந்நிலைக்கு தள்ளிய வீம்பனிடம், 'என் சகோதரனிடம் வேலையை காட்டினாய் அல்லவா; வா... வந்து என்னுடன் விளையாடு; தோற்றால், 10 ஆயிரம் வாளி கிணற்று நீர் இறைக்கிறேன்...' என்று சவால் விடுத்தான்.
'சினம் கொண்ட சிங்கத்தை அடக்க இயலுமா... உன் அகங்காரம் இன்றோடு அழியும் என்பதை உணர்த்துகிறேன்; மோதி பார்ப்போம் வா... தோற்றால், காலத்திற்கும் உன் அடிமையாக இருக்கிறேன்...'
ஆவேசத்துடன் கூறினான் வீம்பன்.
போட்டி துவங்கியது; சத்திரத்தில் தங்கியிருந்தோருக்கு ஆர்வம் மேலிட்டது.
'போட்டியின் முடிவை எப்படியும் பார்த்துவிட வேண்டும்' என்ற எண்ணத்தில் பயணத்தை மறந்தனர்; சுற்றி அமர்ந்தனர்.
கடுமையான போட்டி நிலவியது. காய்களை வெட்டுவதில், இருவரும் திறமைசாலிகளாக இருந்தனர்; முடிவில் வெற்றிப் பெற்றான் இளையவன் ராசு.
அவன் முகம் வெற்றிக்களிப்பில் ஆழ்ந்திருந்தது. இதுவரை தோல்வியை சந்திக்காத வீம்பன், வாடி அழ துவங்கினான்.
'அழாதே சகோதரா... உண்மையில் உன்னை அடிமையாக்க நான் விரும்பவில்லை; உடல்நிலை சரியில்லாத என் சகோதரனை, கிணற்று நீர் இறைக்க வைத்துவிட்டாயே என்ற கோபத்தில் தான் அப்படி செய்தேன்... இச்சத்திரத்தில் பணி புரியலாம்... நண்பர்களாக இருப்போம்...' என்று அன்பாக கூறினான் ராசு.
ஆணவத்தை விட்டொழித்து இனி பொழுது போக்குக்காக மட்டும் விளையாடுவதாக உறுதியளித்தான் வீம்பன்.
பின், சகோதரர் இருவரையும் வழியனுப்பி வைத்தான்.
குழந்தைகளே... செயல் எதுவாக இருந்தாலும், வல்லவனுக்கு வல்லவன் நிச்சயம் இருப்பான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்!
- க.சங்கர்