
மதுரை, குட்ஷெட் தெரு, ஸ்ரீ மீனாட்சி வித்யாசாலா நடுநிலைப் பள்ளியில், 1965ல், 6ம் வகுப்பு படித்தேன். வகுப்பாசிரியை தைலாம்பாள் சிறப்பாக பாடம் நடத்துவார். பொது அறிவை பெருக்க வினாக்கள் எழுப்பி, சந்தேகங்களை தீர்த்து ஊக்குவிப்பார்.
அன்று, விஞ்ஞான பாடத்தில், 'காற்று வீசுவது எதனால்...' என்ற கேள்வியை முன் வைத்தார். அவசரமாக எழுந்த ஒருவன், 'மரங்கள் அசைவதால் காற்று வீசுகிறது...' என்றான். நகைத்தபடி, 'யாருக்காவது சரியான விடை தெரியுமா...' என்று கனிவுடன் கேட்டார்.
சிந்தனையுடன் எழுந்து, 'பூமியில், வெப்பம் எல்லா இடங்களிலும், ஒரே மாதிரி சீராக விழுவதில்லை; அதிகமாக விழும் பகுதிகளில் வெப்ப மிகுதியால் வாயுக்கள் அடர்த்தி இழந்து, மேல் நோக்கி நகரும். அங்கு, குறைந்த காற்றழுத்தம் ஏற்படும்...
'அதேநேரம் வெப்பம் குறைந்த பகுதிகளில், வாயுக்களின் அடர்த்தி அதிகரித்திருக்கும். அது கீழ் நோக்கி நகரும். இந்த செயல்களைத்தான் காற்று வீசுவதாக கருதுகிறோம்...' என்றேன்.
மகிழ்ச்சி பொங்க பாராட்டினார்.
தற்போது எனக்கு, 70 வயதாகிறது; தமிழக அரசில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றேன். இதமாக குளிர்காற்று வீசும் தருணங்களில் எல்லாம், அந்த அறிவார்ந்த ஆசிரியை, என் மனத்திரையில் தோன்றி, ஆசி தருவதாக உணர்கிறேன்.
- கு.கணேசன், மதுரை.
தொடர்புக்கு: 99526 82637