
சென்னை, சி.எஸ்.ஐ., எவர்ட் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியில், 2010ல், 9ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...
என் உடல் பருமனாக இருக்கும். இதனால் படிப்பில் ஆர்வம் குறைந்திருந்தது. பிறரின் கேலி, கிண்டலுக்கு உள்ளானேன். புவியியல் ஆசிரியை வசந்தி, அன்று வகுப்பில் நிற்க வைத்து, கேள்வி ஒன்றை எழுப்பினார். பதில் அளிக்காததால், 'கொழுத்த பன்றி' என்று திட்டினார். மனம் உடைந்து, செய்வதறியாது திகைத்தேன்.
அந்த காலக்கட்டத்தில், உடல் நல குறைவால் காலமானார் என் தந்தை. சோகத்தில் தத்தளித்ததால் பள்ளிக்கு வர இயலவில்லை. இதனால், புவியியல் தேர்வு எழுதவில்லை. மிகுந்த கனிவுடன் தேடி வந்து தேற்றிய ஆசிரியை படிப்பு தொடர்பாக அக்கறையுடன் விசாரித்தார்.
பின், பிரத்யேகமாக அந்த தேர்வை நடத்தினார். கடுமையாக முயன்று, 25க்கு, 24 மதிப்பெண்கள் எடுத்தேன். மனம் உவந்து பாராட்டி, ஆண்டு இறுதித் தேர்வுக்கு, தக்க பயிற்சி தந்து வழிகாட்டினார்.
எனக்கு, 27 வயதாகிறது; பல் மருத்துவராக தொழில் செய்கிறேன். பள்ளியில் படித்த நாட்களில் நடந்த அந்த நிகழ்வு, இன்றும் மனதில் ஊஞ்சலாடுகிறது. கருணை பொங்க உதவிய அந்த ஆசிரியையை போற்றுகிறேன்.
- ப்ரீத்தி பாலசுப்பிரமணியம்,
திருவள்ளூர்.