
அன்புள்ள அம்மா...
என் வயது, 18; பிளஸ் 2 படிக்கும் மாணவி. வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்பது, என் தணியாத ஆசை.
இந்தியாவிலிருந்து, வெளிநாடுகளுக்கு செல்ல நம்மிடம் என்னென்ன ஆவணங்கள் இருக்க வேண்டும். இது பற்றி எனக்கு விளக்கமாக பதில் கூறுங்கள். அறிய மிகுந்த ஆவலாக உள்ளேன்.
இப்படிக்கு,
ஒய்.திரிபுரசுந்திரி.
அன்பு மகளுக்கு...
வெளிநாட்டுக்கு, ஒரு இந்தியர் பயணம் செய்ய, இரு முக்கியமான ஆவணங்கள் தேவை. ஒன்று, பாஸ்போர்ட் எனப்படும் கடவுச்சீட்டு. இரண்டு, 'விசா' எனப்படும் நுழைவு இசைவு அல்லது நுழைவாணை! விசா என்ற சொல்லின் விரிவாக்கம், 'விசிட்டர்ஸ் இன்டர்நேஷனல் ஸ்டே அட்மிஷன்' என்பதாகும்.
இந்தியாவில், கடவுச்சீட்டு வழங்குவதற்கு, 37 அலுவலங்களும், 93 கடவுச்சீட்டு சேவை மையங்களும், 424 தபால் அலுவலக மையங்களும் உள்ளன. சாதாரணமாக விண்ணப்பித்தால், ஒரு கடவுச்சீட்டு புத்தகத்தை பெற, 30 - 45 நாட்கள் ஆகும். விண்ணப்ப கட்டணம் 1,500 ரூபாய் செலுத்த வேண்டும்.
விரைவு சேவை என்ற, 'தட்கால்' முறையில் விண்ணப்பித்தால், விண்ணப்பித்த மூன்றாம் நாள் பெறலாம். இதில், 36 பக்க கடவுச்சீட்டு புத்தகத்திற்கு கட்டணமாக, 3,500 ரூபாய் செலுத்த வேண்டும். 60 பக்கம் கடவுச்சீட்டு புத்தகத்திற்கு கட்டணம், 4,000 ரூபாய் செலுத்த வேண்டும்.
ஒருமுறை கடவுச்சீட்டு எடுத்தால், 10 ஆண்டுகள் செல்லும். அதன்பின், தேவைக்கு ஏற்ப புதுபித்துக் கொள்ளலாம்.
ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் 2023 என்ற அமைப்பு, உலக அளவில் இந்திய கடவுச்சீட்டுக்கு, 80ம் ராங்க் கொடுத்திருக்கிறது.
கடவுச்சீட்டுகளில் நான்கு வகைகள் உள்ளன.
அவை...
* நீல நிற சாதாரண கடவுச்சீட்டு
* ராஜ தந்திரி அல்லது அலுவலர் கடவுச்சீட்டு
* படிக்காதோரின் ஆரஞ்சு நிற கடவுச்சீட்டு
* மிகவும் சக்தி வாய்ந்த வெள்ளை நிற கடவுச்சீட்டு
விசா என்பது ஒரு நாட்டின் குறிப்பிட்ட பகுதிக்கு மற்ற நாட்டவர் செல்வதையும், வெளியேறுவதையும் அனுமதிக்கும் ஆவணம் ஆகும்.
இதில், 14 வகை விசாக்கள் உள்ளன.
அவை, சுற்றுலா பயணியர் விசா, வியாபார விசா, மாணவர் விசா, போக்குவரத்து விசா, மாநாட்டு விசா, வேலை வாய்ப்பு விசா, ஐ.ஆர்.2 விசா, மின்னணு விசா, நுழைவு விசா, குடும்ப விசா, பத்திரிகையாளர் விசா, ஏ1 விசா, முதலீடு விசா மற்றும் மத பணியாளர் விசா என்பவையாகும்.
ஆசிய நாடான சிங்கப்பூர் கடவுச்சீட்டு வைத்திருந்தால், உலகில், 192 நாடுகளுக்கு விசா அனுமதி இன்றி சென்று வரலாம். இந்திய கடவுச்சீட்டில், 57 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.
சில நாடுகளின் சுற்றுலா விசாக்கள் வாங்க நம்மிடம் குறைந்தபட்சம், 5 லட்சம் ரூபாய் வங்கியில் இருப்பு வைத்திருக்க வேண்டும்.
வடக்கு ஆப்ரிக்க நாடான எகிப்து பிரமிடுகளில் ஏறி, ஆசிய நாடான சீனப்பெருஞ்சுவரில் நடந்து, மத்திய ஆசிய பகுதியில் உள்ள பாபிலோன் தொங்கும் தோட்டத்தில் தவழ்ந்து, தென் அமெரிக்க நாடான பிரேசில், ரியோ டி ஜெனிரோ நகரில் இயேசுநாதர் சிலை அருகே நின்று, தென் அமெரிக்க நாடான பெருவின் மச்சு பிச்சுவில் காற்று வாங்கி, உலகத்தை ஒரு நாள் ரசி! உன் பயண ஆர்வம் முழுமையாக நிறைவேற வாழ்த்துகள்.
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.