
பள்ளியில், 4ம் வகுப்பு படிக்கும் கணேசனும், சேகவனும் நண்பர்கள்.
எப்போதும் போல் சேர்ந்து சாப்பிட்டனர். திடீரென மயங்கி விழுந்தான் கணேசன். இதைக் கண்டு அதிர்ந்த சேகவன் தாமதிக்காமல், தலைமை ஆசிரியரிடம் தகவல் தெரிவித்தான். உடனே, மருத்துவமனையில் சேர்த்து, பெற்றோருக்கு விபரம் தெரிவித்தார்.
மருத்துவமனைக்கு வந்தார் கணேசனின் தந்தை கதிரேசன். தொழிலதிபரான அவர், ''மகனுக்கு, ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால், பள்ளி நிர்வாகத்தை நீதிமன்றதுக்கு இழுக்காமல் விட மாட்டேன்...'' என கோபத்தில் கூறினார்.
நிர்வாகம் சமாதானம் செய்ய முயற்சித்தது. தீவிர சிகிச்சை பிரிவில் சிறுவன் இருந்தான். சாப்பிட்ட உணவு குறித்து கேசவனை விசாரித்தனர். அன்று சாப்பிட்டிருந்த வண்ணமயமான ரொட்டியை காண்பித்தான்.
அதிர்ந்தார் கணேசனின் தந்தை. அந்த ரொட்டி, அவர் கம்பெனியே தயாரிக்கும் துரித உணவு வகைகளில் ஒன்று. குழந்தைகளை கவர, ரசாயன வண்ணம் மற்றும் ரசாயன சுவையூட்டி கலந்திருந்தது.
சரியான காக்கும் மருந்து கொடுக்கப்பட்டதால், உயிர் பிழைத்தான் கணேசன்.
குறிப்பிட்ட உணவு பொருளை தயாரித்த தொழிலதிபர் மீது புகார் கொடுத்தது பள்ளி நிர்வாகம். விசாரணைக்கு பின், நீதிமன்றம் பெரிய தொகையை அபராதமாக விதித்து, சிறை தண்டனை வழங்கியது. சிறையில் அடைக்கப்பட்டார் தொழிலதிபர்.
'வீட்டில் சமைத்த உணவுகளையே குழந்தைகளுக்கு கொடுத்து அனுப்புங்கள்...'
கண்டிப்புடன் பெற்றோரை அறிவுறுத்தியது பள்ளி நிர்வாகம்.
குழந்தைகளே... தீமை தரும் கவர்ச்சியான உணவு பண்டங்களை உண்ணக் கூடாது!