
அன்புள்ள அம்மா...
என் வயது, 15; தம்பியுடன் பள்ளி சென்று வரும் மாணவி. எங்கள் அம்மாவுக்கு, மீன் குழம்பு இல்லாமல் வாரத்தில், ஏழு நாட்களும் நகராது. கடல் மீன், ஆற்று மீன், நத்தை, நண்டு எதையும் விட மாட்டார்.
ஒருநாள், மார்க்கெட்டிலிருந்து குட்டி குட்டி சிவப்பு வடிவில் ஒரு வஸ்துவை வாங்கி வந்திருந்தார். அது என்னவென்று கேட்டோம்.
மீன் முட்டையை சமைச்சும் சாப்பிடலாம், பச்சையாகவும் சாப்பிடலாம் என்றார்.
நாங்கள் சாப்பிட மறுத்தோம். அனைத்தையும் சாப்பிட்டார் அம்மா.
மீன் முட்டை உடலுக்கு நல்லதா... கெட்டதா... சொல்லுங்கள் அம்மா...
இப்படிக்கு,
எஸ்.பாலகங்கா.
அன்பு மகளே...
மீன் முட்டை அற்புதமான உணவு. அதன் வித்தியாசமான சுவையை பழகிக் கொள்ள வேண்டும். கர்ப்பிணி மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்கள், மீன் முட்டை சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
இறாலில் ஒரு வகை, அங்கோலி மீன், கடல் முள் எலி, பீலிக்கணவாயிலும் முட்டைகள் கிடைக்கும்.
மீன் முட்டையிலுள்ள சத்துக்கள் பின் வருமாறு...
* அதிக ஒமேகா 3 கொழுப்பு அமிலம்
* ஆற்றல் சக்தி, புரோட்டீன்
* கொழுப்பு, கால்ஷியம்
* விட்டமின் பி - 12, விட்டமின் - ஏ
* பாஸ்பரஸ், இ.பி.ஏ., டி.ஹெச்.ஏ.,
செலினியம், மக்னீஷியம், இரும்பு மற்றும் ப்யூரின் சத்துக்களும் உள்ளன.
மீன் முட்டை சாப்பிட்டால், ரத்த உறைவு அகலும்; வீக்கம் நீங்கும். ரத்தக் குழாய்கள் விரிவடையும். ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.
மூளை ஆரோக்கியம் மேம்படும்; கண் பார்வை துலங்கும்; இதய நலம் மேம்படும். நோய் எதிர்ப்பு சக்தி கூடும். எலும்பு உறுதியாகும்; பல்லுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.
மீன் முட்டை சாப்பிட்டால், எடை கூடாது; கீடோ உணவு முறைக்கு மீன் முட்டை நல்லது.
மீன் முட்டையால் ஏற்படும் கெடுதிகள்:
கொலஸ்டிரால் அதிகம் உள்ளதால் அடிக்கடி மீன் முட்டை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்; சமைக்காமல் சாப்பிடக் கூடாது.
மீன் உணவில் ஒவ்வாமை இருந்தால், மீன் முட்டையிலிருந்து விலகி நிற்க வேண்டும்.
மீன் முட்டையில் இருக்கும் ப்யூரின் சத்து, சிறுநீரக நோயாளிகளுக்கு கெடுதியானது.
கோலா மீன், கேட்டிட் மீன், கில்லி மீன், பார்பல் ஆற்று மீன், கோள மீன் முட்டைகளில், 'இக்தியோ டாக்சின்' என்ற விஷத்தன்மை அதிகம். அதனால், இம்மீன்களின் முட்டைகளை சாப்பிடக் கூடாது; மீன் முட்டை, கோலா உருண்டை சமைத்து சாப்பிடுங்கள். பின், மீன் முட்டை பிரியர்களாக மாறி விடுவீர்!
- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.