
சென்னை, புனித மேரி அன்னை தொடக்க பள்ளியில், 1978ல், 5ம் வகுப்பில் படித்தேன். என் தம்பி, 3ம் வகுப்பில் சேர்ந்திருந்தான். இருவருக்கும் ஆங்கிலம் பாடம் நடத்தும் ஆசிரியை கால் பாதிப்பு உடைய மாற்றுத்திறனாளி. மிகுந்த சிரமத்துடன் நடந்து வருவார்.
அன்று வகுப்புகள் முடிந்து வீடு திரும்பியதும், அந்த ஆசிரியை போல் நடந்து காண்பித்து நடித்தோம். அம்மாவிடம் கேலி பேசி சிரித்தோம். எதிர் வீட்டில் இருந்தவர் ஆசிரியையின் தோழி. இதை பார்த்து போட்டுக் கொடுத்து விட்டார்.
மறுநாள் பள்ளி சென்றதும், தலைமை ஆசிரியை அருட்சகோதரி மெட்டில்டா எங்களை அழைத்தார். கடும் கோபத்தில் நடைபாதையில் முட்டி போட வைத்து தண்டித்தார். பின், மாற்றுத்திறனாளிகள் படும் சிரமங்களை எடுத்து கூறி, நற்சிந்தனையை விதைத்தார். தவறை உணர்ந்து வருத்தம் தெரிவித்து திருந்தினோம்.
எனக்கு, 53 வயதாகிறது; அரசு பள்ளியில் ஆசிரியையாக பணி செய்கிறேன். என் வகுப்பில் மாணவ, மாணவியருக்கு அந்நிகழ்வை முன்னுதாரணமாக கூறி, மாற்றுத்திறனாளிகளை மதித்து ஒழுக வேண்டியதன் அவசியத்தை அறிவுரைத்து வருகிறேன்.
பள்ளிப் பருவத்தில் அறியாமையால் செய்த தவறை திருத்தி, மனிதர்களை மாண்புடன் மதிக்க கற்றுத்தந்த தலைமை ஆசிரியையும், அதற்கு ஆதாரமாக திகழ்ந்த ஆங்கில ஆசிரியையும் போற்றி வணங்குகிறேன்.
- ஏ.உமா மகேஷ்வரி, மதுரை.
தொடர்புக்கு: 87783 27257