
சர்வதேச வர்த்தகத்தில் முக்கிய பங்காற்றுகிறது, துறைமுகம். கடல் வழியாக நாடுகளை இணைப்பதோடு, சரக்கு மற்றும் பயணியர் போக்குவரத்தை எளிதாக்குகிறது. இது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தீர்மானிக்கிறது. சர்வதேச அளவில் நாடுகளுக்கு இடையே வர்த்தகம் செழிக்கும் போது, உறவுகள் வளர்கின்றன.
உலக அளவில் நன்கு அறியப்பட்ட துறை முகங்கள் பல உள்ளன. அவற்றில் முதன்மையானவற்றை பார்ப்போம்...
ஷாங்காய்: ஆசிய நாடான சீனாவின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ளது. சர்வதேச வர்த்தகத்தில் முக்கிய மையமாக திகழ்கிறது. இந்த வளாகத்தில், பல சரக்கு வகைகளை கையாளும், 'யாங்ஷன் டீப் வாட்டர் போர்ட்' உள்ளிட்ட முனையங்கள் உள்ளன. இது, யாங்ஷே ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
சிங்கப்பூர்: ஆசியாவில் கடல் சார்ந்த வர்த்தகங்களை கையாள ஒருங்கிணைந்த வசதிகள் உடையது. கையாளும் சரக்கு எடை அடிப்படையில் உலகில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. சரக்கு கப்பல் போக்குவரத்தில், உலகில், ஐந்தாம் இடத்தில் உள்ளது.உலகின் கச்சா எண்ணெய் பரிமாற்றத்தில் பாதியளவு இந்த துறைமுகம் வழியாக நடக்கிறது. இங்கு நங்கூரம் இட்டுள்ள ஆயிரக்கணக்கான கப்பல்கள், 123 நாடுகளையும், 600 துறைமுகங்களையும் இணைக்கும்.
பூசன்: கிழக்காசிய நாடான தென் கொரியாவில் உள்ளது. கிழக்கு ஆசியா மற்றும் உலகின் பல பகுதிகளுக்கு முக்கிய இணைப்பாக விளங்குகிறது. அதிநவீன தொழில்நுட்பத்தால் புகழ் பெற்றது. முன்மாதிரி செயல்பாடுகளையும், கொள்கலன் கையாளும் திறனையும் உடையது. உலகின் தலைசிறந்த துறைமுகங்களில் ஒன்றாக கவுரவம் பெற்றுள்ளது.
ராட்டர்டேம்: ஐரோப்பாவில் மிகப் பெரிய துறைமுகம். ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின் மேற்கு பகுதியில் உள்ளது. ஆம்ஸ்டர்டாமுக்கு அடுத்து அதிக மக்கள் தொகை உடையது.
ஆண்ட்வெர்ப்: ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் அமைந்துள்ளது. ஐரோப்பாவில் மிக முக்கிய துறைமுகங்களில் ஒன்று. விரிவான ரயில் மற்றும் உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து உள்ளது. ஐரோப்பிய சந்தைகளை இணைக்கிறது.
- வ.முருகன்