
தர்மபுரி, அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 1986ல், பிளஸ் 2 படித்த போது, வரலாறு ஆசிரியையாக இருந்தார் காஞ்சனா மாலா. மெலிந்த தேகம், பருத்தியில் நெய்த புடவை, வட்ட வடிவ மூக்கு கண்ணாடி அணிந்து மிக அமைதியாக காட்சி தருவார்.
பாடம் நடத்தும் போது, வீரமங்கையாக மாறி விடுவார். ஒவ்வொரு வரலாற்று நிகழ்வுகளையும், கண் முன்னே காட்சியாக வர்ணித்து விளக்குவார். பாடத்தை நினைவில் வைத்துக் கொள்ளும் விதமாக, குட்டி குட்டி கதைகளை அழகாக சொல்வார். மனதில் அது ஒட்டிக் கொள்ளும்.
ஒருநாள், 'சரியாக எழுதினாலும், முழு மதிப்பெண் பெற முடியவில்லை... வரலாற்று நிகழ்வின் ஆண்டுகளை நினைவில் வைப்பது சிரமமாக இருக்கிறது. இதற்கு ஏதாவது வழி சொல்லுங்கள்...' என்று புலம்பினேன்.
புன்னகையுடன், 'வரலாற்றில் நிகழ்வு நடந்த ஆண்டு மற்றும் நாட்களை, உன் வாழ்வோடு சம்பந்தப்படுத்தினால் எப்பவும் மறக்காது...' என உத்தியை சொன்னார். அது பசுமரத்தாணிப் போல் பதிந்து விட்டது. அதுபோல் முயன்று வெற்றி பெற்றேன்.
என் வயது, 53; கதை, கவிதை, கட்டுரை எழுத்தாளராக உள்ளேன். வங்கி லாக்கர் எண், முக்கிய தொலைபேசி எண், பாஸ்வேர்டுகளை நினைவில் வைத்துக் கொள்ள, அந்த ஆசிரியை கற்றுத்தந்த நுட்பத்தை பயன்படுத்தி வருகிறேன். நினைவாற்றல் மேம்படும் விதமாக கற்பனை திறனுடன் கற்பித்தவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
- ஆதிரை வேணுகோபால், சென்னை.