
சிவகங்கை மாவட்டம், பழையனுார், அரசு மேல்நிலைப் பள்ளியில், 2007ல், 7ம் வகுப்பு படித்த போது, வகுப்பு ஆசிரியையாக இருந்தார் இளமதி. மாணவர்களிடம், அன்போடு பழகுவார். பாடங்களை எளிதாக புரிய வைக்கும் தனித்திறன் உடையவர்.
சினிமா பாட்டு போல, குறட்பாக்களை பாடி பதிய வைப்பார். கதை போல, பாடங்களை கற்றுத் தருவார். படிப்பில், எந்த குறையும் ஏற்படாமல் கவனித்துக் கொள்வார்.
ஆண்டு இறுதியில், வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடிப்போருக்கு ஊக்கப் பரிசு வழங்குவார். படிப்பு மட்டுமின்றி, மரம் வளர்க்கும் ஆர்வத்தையும் ஊட்டினார்.
கல்வி ஆண்டு துவக்க நாளின் போதே, ஒரு மரக்கன்று நடச்சொல்வார். அதை, அந்தந்த வகுப்பு மாணவ, மாணவியர் தான், வேலி அமைத்து, தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும். நன்றாக வளர்க்கும் குழுவுக்கு, ஆண்டு இறுதியில் பரிசு வழங்கி பாராட்டுவார். அவரது செயல்முறையால், மரங்கள் நட்டு பராமரிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது.
என் வயது, 28; இல்லத்தரசியாக இருக்கிறேன். அன்பும், பண்பும் நிறைந்த அந்த ஆசிரியையிடம் படித்த நாட்களை, பொற்காலமாக கருதுகிறேன். அவர் சொல்லி தந்த பாடங்களும், பழக்கமும் வாழ்வின் உயர்வுக்கு உதவுகின்றன.
- ப.லாவண்யா, விருதுநகர்.