
முன்கதை: வேழமலை நாட்டில் முடிசூட்டு விழா நடக்க இருந்த நிலையில் இளவரசர் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது நாட்டின் எல்லையில் காட்டில் எதிரி நடமாட்டம் அதிகமாகியது. போர் எச்சரிக்கை கூட்டத்தில் பங்கேற்க போவதாக கூறிய மன்னரை தடுக்கும் வகையில் பேசினார் அரண்மனை வைத்தியர். இனி -
நோய்வாய்ப்பட்டிருப்பதால் தர்பார் சிம்மாசனத்தில், அதிக நேரம் அமர்வதே சிரமம் என, தெரிவித்த வைத்தியரை உற்றுப் பார்த்தபடி, 'அதையெல்லாம் பார்த்தால் முடியுமா... நாட்டின் பாதுகாப்பு என வரும் போது சிரமம், வேதனைகளை தாங்க வேண்டும்; நானும், கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யுங்கள்...' என உறுதிப்பட தெரிவித்தார் மன்னர்.
கூட்டத்திற்கு தயாராகியது தர்பார்.
ராஜகுருவின் தலைமையில், நால்வர் குழு, தனி ஆலோசனையில் ஈடுபட்டது.
'போர் எச்சரிக்கை பிரகடனத்தில் பங்கேற்க மன்னரும் வருகிறேன் என்கிறாரே...'
ஆரம்பித்தார் அமைச்சர்.
'வரட்டும்; அதுவும் ஒரு வகையில் நல்லது தான்...' என்றார் ராஜகுரு.
'கூட்டத்திற்கு வரட்டும்; ஆனால், பொறுப்புகளை அவர் கையில் எடுத்தால் என்ன செய்வது...'
'அதை நான் பார்த்து கொள்கிறேன்...'
'மன்னர் வருவதில் நமக்கு சிக்கல் ஒன்றுமில்லையே...'
'நிச்சயம் இல்லை. ஏனென்றால், படை தலைவர்கள், நாட்டின் முக்கிய நிர்வாகிகளை அவரே நேரில் பார்த்து பேசி விடுவார். அவர் உடல்நிலை தான்...'
தயங்கினார் ராஜகுரு.
'தர்பார் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளும் வகையில், மன்னரை தயார்படுத்துவதில், ஒன்றும் சிரமம் இருக்காது...' என்றார் வைத்தியர்.
'எப்படி...'
'உடலை முறுக்கேற்றும் வீரிய மூலிகைகள் சில இருக்கின்றன. அவற்றை மன்னருக்கு கொடுத்தால், தற்காலிகமாக செயல்பட முடியும். ஒருவேளை இளவரசர் இருந்து, முடிசூட்டு விழா நடந்திருந்தால், இந்த மூலிகைகளை தான் அவருக்கு கொடுத்திருப்பேன்; அதை, இப்போது பயன்படுத்தலாம்...'
தர்பாரில் அமைச்சர்கள், அரசவை புலவர், துணைத் தளபதிகள், படை அணித்தலைவர்கள் மற்றும் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், நிர்வாகத்தை கவனிக்கும் காரிய கர்த்தாக்கள் குழுமியிருந்தனர்.
முன் இருக்கையில் அமர்ந்திருந்தனர் ராஜகுரு, தலைமை அமைச்சர், தளபதி மற்றும் வைத்தியர்.
நாட்டுப்பற்றை பற்றி பேசிய மன்னர், கோட்டையின் தென்பகுதியில் காட்டுக்குள், ஏதோ ஒரு நாட்டின் படை வீரர்கள் களம் இறங்கி இருக்கும் விஷயத்தையும் அறிவித்தார்.
'வேழமலைக்கோட்டை பலமானது. நம் வீரர்கள் அஞ்சா நெஞ்சம் உடைய வீரமிக்கவர்கள்; எதிரிகளை எக்காரணம் கொண்டும் கோட்டையை நெருங்க விட மாட்டோம்; எல்லாரும், நாட்டுப்பற்றுடன் செயல்பட வேண்டும்; அனைத்து தியாகத்திற்கும் தயாராக இருக்க வேண்டும்...'
வீர உரையாற்றி, சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு, 'எனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது; இளவரசரும் முடிசூட்டிக் கொள்வதற்கு முன், சில பயிற்சிகளை எடுக்க, வேற்று நாட்டுக்கு சென்றுள்ளார். அவருக்கும், தகவல் அனுப்பப்பட்டுள்ளது; அவர், விரைவில் வருவார். அதுவரை, வேழமலை நாட்டை ராஜகுரு வழி நடத்துவார். அமைச்சர் ஆலோசனைகள் தருவார்; தளபதி எதிரிகளை சிதறடிப்பார்; வெற்றி வேல்... வீரவேல்...' என கர்ஜித்தார் மன்னர்.
அமைச்சர், தளபதி மற்றும் வைத்தியரின் முகத்தில் வியப்பு மேலோங்கியது.
ஆலோசனை கூட்டம் நிறைவுற்றது.
'மன்னர், அனைத்து அதிகாரங்களையும், நம்மிடம் கொடுத்த நிகழ்வு வியப்பாக இருக்கிறதே...'
ஒரு மந்தகாசப் புன்னகையுடன் அவர்களை பார்த்தார் ராஜகுரு.
'ஆம்... எப்படி நிகழ்ந்தது, இந்த அதிசயம்...'
ஆச்சரியத்துடன் கேட்டார் அமைச்சர்.
'எல்லாம் என் ராஜதந்திரம் தான். மன்னர் இப்படி பேசவில்லையேல், இளவரசரை எப்போதுமே, உயிருடன் பார்க்க முடியாது என மிரட்டினேன்; இனி ஆட்சி, நாடு எல்லாமே நம்முடையது...'
பெருமிதம் பொங்க கூறினார் ராஜகுரு.
இரண்டு நாட்கள் கடந்த பின், ஒரு தகவல் வந்தது.
'அனுப்பிய, 15 வேவு குழுக்களில், 12 குழுக்கள் திரும்பின...'
தகவலை தெரிவித்தார் அமைச்சர்.
இதை எதிர்பார்த்து ஆலோசனை கூடத்தில் காத்திருந்த ராஜகுருவும், தளபதியும் ஆர்வத்துடன் நிமிர்ந்தனர்.
அமைச்சர் கையசைக்க முதியவர் ஒருவரும், 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தியும் வந்து, தாழப்பணிந்து வணங்கினர்.
'ஐயா... கோட்டையில் இருந்து, 2 கி.மீ., துாரத்தில், தெற்கு திசையில், ஒரு படை இருக்கிறது. அவர்கள் ஈட்டி, வாள், வில் போன்ற ஆயுதங்களுடன் கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர்...'
விவரித்தார் முதியவர்.
'அவர்களிடம் குதிரைகள் உள்ளதா...'
'அங்கு, குதிரைகள் எதுவுமில்லை...'
குறுக்கிட்டு பதிலளித்தாள் அந்தப் பெண்.
'எவ்வளவு பேர் தங்கியுள்ளனர்...'
'நான், மரத்தில் ஏறிப் பார்த்தேன். அந்த இடத்தில் கூடாரங்கள் தெரிந்தன...'
'கூடாரங்களை எண்ணினாயா...'
'முடிந்த வரை எண்ணினேன். ஐந்து இருந்தது; அதன் மீது செடி, கொடிகளை வெட்டிப் போட்டு மறைத்துள்ளனர்...'
'ஒரு கூடாரத்துக்கு, ஐந்து பேர் இருந்தாலும், 25 வீரர்கள் இருப்பர்...'
கணித்து கூறினார் அமைச்சர்.
'நீங்கள் குறிப்பிட்டதை விடவும், அதிக பேர் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. மிருகங்களை வேட்டையாடி, களிமண் பூசி, நெருப்பில் சுட்டு சாப்பிட்டனர்; ஒரு படை அங்கு இருப்பது நிச்சயம்...'
உறுதியாக கூறினாள் அந்த பெண்.
'காட்டுக்குள், இதைப் போல இன்னும் நிறைய இடங்களில், கூடாரங்கள் இருக்கலாம்...' என்றார் தளபதி.
அதை ஒப்புக் கொள்வது போல் தலையசைத்தார் ராஜகுரு.
அவர்கள் மூவர் முகத்திலும், அதிர்ச்சியும், குழப்பமும் படர்ந்திருந்தது.
- தொடரும்...
ஜே.டி.ஆர்