PUBLISHED ON : மே 04, 2024

மே 7, உலக தடகள நாள்!
தடகளம் என்பது இரண்டு வகை விளையாட்டு தொகுப்புகளை உடையது. இதில் தடம் என்ற சொல், ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், தடை ஓட்டத்தை குறிக்கும். களம் என்பது, குண்டு வீசுதல், வட்டெறிதல், ஈட்டி எறிதல் போட்டியை காட்டும்.
மிக நீண்ட துாரம் ஓடுவதை, 'மாரத்தான்' என்பர். பழங்காலத்தில் பாரசீகத்தை, கிரேக்கம் வென்றதை அறிவிக்க, வீரர்கள் கிரீஸ் பகுதி மாரத்தான் நகரில் இருந்து நீண்ட துாரம் ஓடினர். ஓட்டம் துவங்கிய நகரின் பெயரே, பின், நீண்ட ஓட்ட போட்டிக்கு குறியீடாக சூட்டப்பட்டுள்ளது.
கனமான உலோகப் பந்தை வெகுதுாரத்தில் எறியும் போட்டி, 'ஷாட்புட்' எனப்படுகிறது. கடும் உடல் வலிமை இதற்கு தேவை. ஓட்டம் மற்றும் நடை போட்டி இடையே சிறு வேறுபாடு தான். வேகமாக பாய்ந்தால் ஓட்டம்; நடைப் பந்தயத்தில் எப்போதும், ஏதாவது ஒரு கால், நிலத்தை தொட்டபடி இருக்க வேண்டும். இது தான், இரண்டையும் வித்தியாசப்படுத்துகிறது.
'டெகத்லான்' என்பது, 10 விளையாட்டுகளின் தொகுப்பு. அவை, நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், வட்டெறிதல், 100 மீட்டர், 400 மீட்டர், 1,500 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், போல்வால்ட், ஷாட்புட், 110 மீட்டர் தடை ஓட்டம்.
'ட்ரையத்லன்' என்பது, மூன்று வகை விளையாட்டுகளின் இணைப்பு. போட்டியின் முதலில், குறிப்பிட்ட துாரத்துக்கு நீச்சல் அடிக்க வேண்டும். பின், மிதிவண்டி ஓட்ட வேண்டும். இறுதியில், குறிப்பிட்ட அளவு துாரத்தை ஓடிக் கடக்க வேண்டும். இவற்றில் முதலில் வருபவரே வெற்றி பெறுவார்.
தடகள விளையாட்டுகளில் சாதனை புரிந்த சிலரை பார்ப்போம்...
கரீபியன் நாடான ஜமைக்கா தீவை சேர்ந்த வீரர் உசேன் போல்ட். உலகில் அதிவேகமாக ஓடுவதில் வல்லவர். இவர், 100, 200 மீட்டர் துாரத்தை மிக குறைந்த நேரத்தில் ஓடி, உலக சாதனை படைத்துள்ளார்.
மிக நீண்ட, 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் உலக சாதனை படைத்த வீரர் ெஹய்லி கெப்ரெலசி. கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்யோப்பியாவை சேர்ந்தவர். இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளார். இடது கையை, உடலோடு மடித்து வைத்தபடி ஓடுவது இவரது வழக்கம். இது குறித்து கேட்ட போது, 'சிறுவனாக இருந்த போது வீட்டிலிருந்து, 10 கி.மீ., துாரத்தில் பள்ளிக்கு தினமும் ஓடி சென்று வருவேன். அப்போது, இடது கையில் புத்தக பை இருக்கும். அதை உடலுடன் ஒட்டி பிடித்தபடி ஓடுவேன். அதுவே பழக்கமாகி விட்டது...' என்றார்.
உயரம் தாண்டுதலில் புகழ் பெற்றவர் டிக் போஸ்பரி. அமெரிக்காவை சேர்ந்த தடகள வீரர். முதன் முறையாக, தடைக்கம்பிக்கு, முதுகை காட்டியபடி தாண்டினார். இது அதிக உயரத்தை எட்டி வெற்றிக்கு வழிகோலியது. பின், பலரும் இதே நுட்பத்தை பயன்படுத்தினர். அது, 'போஸ்பரி பிளோப்' என புகழ் பெற்றுள்ளது.
- ஜி.எஸ்.எஸ்.