
காரைக்கால், சேத்துார் ஸ்ரீ விக்னேஸ்வரா உயர்நிலைப் பள்ளியில், 2006ல், 10ம் வகுப்பு படித்த போது, தலைமை ஆசிரியராக பணிபுரிந்தார் கே.பி., என்ற கே.பக்கிரிசாமி.
தட்டி கொடுக்க வேண்டிய நேரத்தில் தட்டிக் கொடுப்பார்; தட்டி கேட்க வேண்டிய இடத்தில் கண்டிப்பு காட்டுவார். அன்பு கனிய சுவையாக பேசுவார்.
தமிழ் இலக்கிய பாடத்தை அவர் நடத்தும் போது, நவரசம் கலந்த நாடகம் போல் இருக்கும். சமூக அறிவியல் பாடத்தில் சரித்திர நாயகர்களை கண்முன் நிறுத்துவார்.
கிராமப்புறத்தை சேர்ந்தவர்களே அதிகம் படித்து வந்தோம். பெரும்பாலானோர் வறுமையான குடும்பச் சூழலில் இருந்தோம். இதை கருத்தில் கொண்டு பாடம் நடத்தினார். எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண்களுடன், சிறந்த தேர்ச்சி விகிதத்துக்காக அரும்பாடுபட்டார்.
மதிய உணவு வேளையில், மாணவர்களோடு, ஆசிரியர்களும் அமர்ந்து உண்ணும்படி செய்தார். அதை கண்காணிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். சாப்பாடு எடுத்து வராதோருக்கு சொந்த பணத்தில் வாங்கி கொடுப்பார். இதுபோல் நானும் பலமுறை பலன் பெற்றுள்ளேன்.
என் வயது, 32; தனியார் வங்கியில் பணிபுரிகிறேன். கல்லாமையை அகற்றுவதில் அந்த தலைமை ஆசிரியர் முன்னுதாரணமாக திகழ்ந்தார். மதிய உணவு சாப்பிடும் போதெல்லாம், அவரது கருணை முகம் நினைவில் மலர்கிறது.
- கெ.ஜெயலட்சுமி, காரைக்கால்.