
முன்கதை: வேழமலை நாட்டில் முடிசூட்டு விழா நடக்க இருந்த நிலையில் இளவரசர் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது நாட்டின் எல்லையில் உள்ள காட்டில் எதிரி நடமாட்டம் அதிகமானதால் மன்னருடன் ஆலோசனை நடந்தது. போர் நடத்த அரண்மனை முக்கியஸ்தர்களுக்கு அதிகாரங்களை வழங்கினார் மன்னர். காட்டில் நடப்பது குறித்து விசாரணை நடந்து கொண்டிருந்தது. இனி -
'அங்கே ஏதாவது கொடி பறந்ததா...'
'எந்த கொடியும் பறக்கவில்லை...'
'எதிரிகள் கவச உடை அணிந்திருந்தனரா...'
'அப்படி ஏதும் அணிந்திருக்கவில்லை...'
இன்னும் சில தகவல்கள் குறித்து விசாரித்த பின், அவர்களை அனுப்பினார் ராஜகுரு.
'பிடிப்பட்ட நம் வீரர்களை அந்த கூடாரங்களில் தான், காவல் வைத்திருப்பர். அவர்களிடம் இருந்து, கோட்டையின் அமைப்பையும், நாட்டு நிலவரம் பற்றிய தகவல்களையும் தெரிந்து கொள்ள முயல்வர்...' என்றார் அமைச்சர்.
'நம் வீரர்கள், நாட்டுப்பற்று மிக்கவர்கள். எந்த சித்ரவதைக்கும் அஞ்சாதவர்கள்; அவர்கள், உயிரை இழந்தாலும் இழப்பர்; கோட்டையின் உட்புறம் பற்றி, எந்த தகவலையும் கூற மாட்டர்...' என்றார் தளபதி.
'வீரர்களை நேரடியாக எதிரிகளை எதிர்கொள்ள அனுப்புவது புத்திசாலித்தனம் இல்லை. மறைந்திருந்து தாக்கும் பயிற்சி பெற்றவர்களை தான் அனுப்ப வேண்டும்; படையில், நமக்கு விசுவாசமான வீரர்கள் உடைய குழு ஒன்றை உருவாக்கினோமே...'
கேட்டார் ராஜகுரு.
'ஆம்... அவர்களுக்கு, மறைந்திருந்து தாக்கும் சிறப்பு பயிற்சியும் கொடுக்கப்பட்டுள்ளது...' என மெல்ல கூறினார் தளபதி.
'அவர்களை தான், பயன்படுத்த வேண்டும்...'
'அப்படியே ஆகட்டும்...'
தலை அசைத்தார் தளபதி.
'காட்டில் தேன் எடுக்க, மூலிகை சேகரிக்க செல்வது போல, இந்த வீரர்களை அனுப்ப வேண்டும்; இடத்தை அடையாளம் காட்ட, தற்போது, காட்டு பகுதிக்குள் சென்று வந்த பெண்கள் சிலரையும் உடன் அனுப்பலாம்...'
'நல்ல திட்டம்; உடனே, ஏற்பாடு செய்கிறேன்...' என்றார் தளபதி.
விசுவாசப் படை வீரர்களாக அறியப்பட்ட ஐந்து பேரும், மறுநாள் அதிகாலை காட்டுக்குள் புகுந்தனர்.
தேன் சேகரிக்கும் குடுவைக்குள், குறுவாள்களை ஒளித்து வைத்திருந்தனர். கூர்தீட்டிய கத்திகளை இடுப்பில் மறைத்து வைத்திருந்தனர். அவர்களுக்கு வழிகாட்ட, தேன் சேகரிக்கும் பெண்கள் இருவர் உடன் வந்தனர்.
'எந்த திசையில் செல்ல வேண்டும்...'
'இந்த பாதையில் தான்; வாருங்கள்... வழி காட்டுகிறோம்...'
அழைத்து சென்றனர் தேன் சேகரிக்கும் பெண்கள்.
குறிப்பிட்ட துாரத்தை அடைந்த சமயம் -
'இங்கிருந்து வலது புறம், மரங்களுக்கு நடுவே அமைந்துள்ள ஒத்தையடி பாதையில் செல்ல வேண்டும்...'
அந்த பெண் காட்டிய பாதையில் நடக்க ஆரம்பித்தனர். யாராவது மறைந்து இருந்தால் கூட தெரியாத அளவுக்கு மரங்கள் அடர்த்தியுடன், உயரமாக வளர்ந்திருந்தன.
'மரத்தில் தேன் கூடுகள் எதுவும் தென்படுகிறதா' என பார்ப்பது போல் பாவனை செய்தபடி, ஒத்தையடி பாதையில் நடந்தனர்.
'இன்னும் எவ்வளவு துாரம் நடக்கணும்...'
'ஒரு காத துாரம்...'
'இனி சுற்றி கண்காணித்தபடி எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்...' என்றான் குழுத்தலைவன்.
மரக்கிளைகளில் தாவி, மர உச்சிக்கு சென்று, கண்காணித்தான் மரம் ஏறுவதில், பயிற்சி பெற்ற வீரன் ஒருவன்.
'தலைவரே... மிக தொலைவில், வித்தியாசமான வடிவத்துடன் புதர்கள் இருப்பது போல் தெரிகிறது...'
'வித்தியாசமான வடிவம் என்றால்...'
'புதர்கள், கூம்பு வடிவில் இருக்கின்றன...'
'அப்படியென்றால் அவை செடி, கொடிகளால் மூடப்பட்ட கூடாரங்களாக தான் இருக்கும். வாருங்கள் அருகில் செல்லலாம். அதற்கு முன், நம்மை மறைத்து கொள்வோம்...' என்றான் குழுத்தலைவன்.
காட்டில், எதிரிகள் கண்களுக்கு, புலப்படாத வகையில், புதரில் இருந்து இலைத்தழைகளை எடுத்து, கொடிகளால் மாலை போல கட்டி, உடல் முழுதும் சுற்றினர்.
'இங்கேயே காத்திருங்கள். இனி, நாங்கள் செல்கிறோம்...'
வழிகாட்டிய பெண்களை, அங்கு விட்டு விட்டு, துாரத்தில் தெரிந்த கூடாரங்களை நோக்கி பயணித்தது ஐவர் குழு.
கூடாரங்கள் அருகில் வந்ததும், அசைவின்றி மறைந்து நின்று, கண்காணித்தனர்.
அங்கு, நான்கு கூடாரங்கள் இருந்தன.
அவற்றில் யாரும் இருப்பதற்கான அறிகுறி தென்படவில்லை.
உடலில் இலைதழைகளை சுற்றி இருந்ததால், தரையில் மெல்ல தவழ்ந்து, முதல் கூடாரத்தை அடைந்தான் வீரன் ஒருவன். ஆள் நடமாட்டம் எதுவும் இல்லாததை உறுதி செய்தான்.
கூடாரம் காலியாக இருந்தது.
அங்கிருந்தபடியே, மற்றதையும் கண்காணித்து, அங்கும் யாரும் இல்லாததை சைகை காட்டி தெரிவித்தான். பின், மற்ற நால்வரும், அவனை போலவே, தரையில் தவழ்ந்து அங்கு வந்தனர்.
'எதிரிகள் எவரும் இல்லை...'
தாழ்ந்த குரலில் பேசினான் குழுத்தலைவன்.
'இடத்தை காலி செய்து சென்றிருப்பரோ...'
'அப்படியென்றால், கூடாரங்களை கழட்டி இருப்பரே... இதை, அப்படியே விட்டு சென்றிருப்பது தான் சந்தேகம்...'
மெல்ல எழுந்து, அந்த இடத்தை சுற்றி பார்த்தனர். ஓரிடத்தில் பெரிய அளவில், நெருப்பு எரிக்கப்பட்டதற்கு அடையாளமாக சாம்பல் கிடந்தது.
'இங்கு, தீ மூட்டி இருந்துள்ளனர்...'
'தேன் சேகரிக்கும் பெண் கூறியது போல், இறைச்சி சமைத்திருக்கலாம். அதனால் தான், அதிகளவில், சாம்பல் கிடக்கிறது...'
'தலைவரே... எதிரிகள் மீண்டும் திரும்ப வர நினைக்கலாம்; அதனால், கூடாரங்கள் அகற்றாமல் இருக்கின்றன...'
'கூடாரம் தவிர, எந்த ஒரு பொருளும் இங்கு இல்லையே...' என்றான் குழுத்தலைவன்.
'நீ, மரத்தில் ஏறி, சுற்றும் முற்றும் ஏதாவது அசைவு தெரிகிறதா பார்...'
மரம் ஏறும் பயிற்சி பெற்றவன், அங்கிருந்த மரத்தில் ஏறி, மேல் கிளையில் நின்று, கண்ணுக்கு தெரிந்தவரை பார்வையால் அலசினான்.
கீழே இறங்கியவன், 'இந்த சுற்று வட்டாரத்தில், எதிரிகள் இருப்பதாக தெரியவில்லை...' என்றான்.
எவரும் இல்லை என்பதை உறுதி செய்த பின், நிதானித்தனர்.
'நான்கு கூடாரங்களையும் சோதனை போடலாம்...' என்றான் குழுத்தலைவன்.
கூடாரத்திற்குள் நுழைந்தனர்.
சிறிது நேரத்திற்கு பின் கேட்ட அலறல் சத்தம் அந்த இடத்தையே அதிர வைத்தது.
- தொடரும்...
ஜே.டி.ஆர்.