
திருவாரூர், பாபா கோபால்சாமி நகராட்சி தொடக்கப் பள்ளியில், 2009ல், 1ம் வகுப்பில் சேர்த்தார், என் அம்மா ஆர்.செல்வி. அவரது கல்வி அறிவு பின்தங்கியிருந்ததால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அப்பாவை பிரியும் நிலை ஏற்பட்டது.
இதனால், என் மீது கவனம் செலுத்தி, ஒவ்வொரு நிமிடமும் அர்ப்பணிப்புடன் பயிற்சி தந்தார். இசை, நடனம், ஓவியத்தில், தனித்திறனை வளர்த்தார். பள்ளி அளவில் போட்டிகளில் பங்கேற்று ஊக்கம் பெற்றேன்.
தொடர்ந்து, திருவாரூர் ஜி.ஆர்.எம்.பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், என் திறன்கள் மேலும் மேருகேறின. தமிழ் இலக்கியம் மீதுள்ள தீராத காதலால், 50க்கும் மேற்பட்ட கேடயங்கள் என் இல்லத்தை அலங்கரிக்கின்றன. சென்னை பாரதி உலா 2022 நிகழ்வில், இளம் பாடகி விருது பெற்றேன்.
என் வயது, 20; கல்லுாரியில், பி.ஏ., ஆங்கிலம், 3ம் ஆண்டு படித்து வருகிறேன். பேச்சு, கட்டுரை, ஓவியம், பாடல், பொது அறிவுத்திறன் போட்டிகளில் ஏராளமான கேடயங்களை வென்றுள்ளேன். தமிழ் இதழ்களில் கவிதை எழுதி வருகிறேன். இவற்றுக்கு, அடிப்படையாக அமைந்தது என் அம்மாவின் அயராத உழைப்பு. முதல் ஆசிரியராக திகழ்ந்த அவரது நினைவை மனதில் ஏந்தி போற்றுகிறேன்.
- ஆர்.காவ்யா, தஞ்சாவூர்.