
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்று ஓமன். அரேபிய வளைகுடாவின் தென்கிழக்கு முனையில் அரபிக்கடலை ஒட்டி இருக்கிறது. நீண்ட பாரம்பரியம் உடையது. இங்கு, 250க்கும் மேற்பட்ட பேரீச்சம் மர வகை உள்ளன. குடும்பத்தில் ஆண் குழந்தை பிறந்தால், ஒரு பேரீச்சம் மரத்தை நடும் வழக்கம் உள்ளது!
இங்குள்ள, பக்லா கோட்டை பிரபலமானது. இது, 12 கி.மீ., நீள சுற்றுச்சுவரை உடையது. யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக பராமரித்து வருகிறது.
நாட்டின் கிழக்கு மூலையில் உள்ளது டோபர் பாலைவனம். வெயில் கொளுத்தும். இதை விண்வெளியில் இருந்து பார்த்தால் பழுப்பு நிறத்தில் தெரியும். இங்கே சில வகை தாவரம் மற்றும் விலங்குகள் வாழ்கின்றன.
செவ்வாய் கிரகத்தின் பல்வேறு தகவமைப்புகள் இந்த சூழல் போல் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஓமன் நாட்டில், காபியில் சர்க்கரை சேர்ப்பதில்லை. பிளைன் காபியை உறிஞ்சியபடி பேரீச்சம் பழத்தை கடிப்பர். இது தான் அங்கு வழக்கமாக உள்ளது. விருந்தினருக்கு கண்டிப்பாக காபி கொடுக்கும் மரபு பின்பற்றப்படுகிறது.
கார் போன்ற வாகனங்களை அழுக்காக வைத்திருந்தால், தண்டனை உண்டு. தவிர்க்க முடியாத சூழலில் மட்டுமே சாலையில் ஹாரன் ஒலிக்க வேண்டும். அமைதியை குலைக்கும் என்பதால், இது கடுமையான சட்டமாக பின்பற்றப்படுகிறது.
ஆன்மிக வழிபாடுகளில் பயன்படும் சாம்பிராணி என்ற வாசனை பொருள் ஓமனில் தான் அதிகம் தயாராகிறது. அதை பாரம்பரிய தொழிலாக செய்து வருகின்றனர். இங்கு கிடைக்கும் சாம்பிராணிக்கு உலக சந்தையில் தனி மதிப்பு இருக்கிறது.
பூமிக்கடியில் சமைக்கப்படும், 'ஷீவா' என்ற வகை உணவு, ஓமன் நாட்டை பூர்வீகமாக உடையது. இதை அடுப்பில் சமைப்பதில்லை. பூமியில் தோண்டிய குழியில் மாமிசத்தை மசாலாவுடன் புதைத்து, இரண்டு நாட்கள் வைத்திருந்து குச்சிகளை எரித்து சமைப்பர்.
இங்குள்ள வீடுகள், கட்டடங்கள் எல்லாம் வெள்ளை நிறத்தில் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். வேறு வண்ணம் பூச விரும்பினால், அரசிடம் முறையாக விண்ணப்பித்து, சரியான காரணம் கூறி அனுமதி பெற வேண்டும்.
ஓமன் நாட்டில்...
* வருமானத்துக்கு வரி விதிப்பு கிடையாது
* பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறுக்கு, சம்பளத்துடன், 98 நாட்கள் விடுப்பு உண்டு
* குழந்தையை வளர்க்க, 1 ஆண்டு சம்பளம் இல்லாத விடுப்பு தரப்படுகிறது
* பிரசவ காலத்தில், மனைவிக்கு உதவ கணவருக்கு ஒரு வாரம் விடுப்பு உண்டு.
- கோவீ.ராஜேந்திரன்