
திண்டுக்கல் மாவட்டம், பழனி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 2019ல், 11ம் வகுப்பு படித்த போது, இயற்பியல் ஆசிரியையாக இருந்தார் சசிகலா. அன்பாக பழகும், தாயுள்ளம் உடையவர்; அதேசமயம், தவறு செய்தால் தண்டித்து அறிவுறுத்தாமல் விட மாட்டார். கடினமான பாடங்களை எளிமையாக கற்பித்து மனதில் பதிய வைப்பார்.
அன்று, விவேகானந்தர் பிறந்த நாள், இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது. கட்டுரை, பேச்சு போட்டிகளில் பங்கேற்றதால் மதிய உணவுவேளை கடந்து வகுப்பிற்கு திரும்பினேன்.
அவசரமாக உணவை முடித்து கையை சுத்தம் செய்ய சென்றபோது எதிரே வந்தார், உடற்கல்வி ஆசிரியை. கண்டிப்பால் புகழ் பெற்றிருந்த அவருக்கு பயந்து வகுப்புக்குள் செல்ல முயன்றேன். வழி மறித்து விசாரித்தவரிடம், போட்டியில் பங்கேற்க சென்ற விபரம் கூறியும் விடவில்லை. அப்போது, அந்த வழியாக வந்த இயற்பியல் ஆசிரியை, 'இங்கே என்ன செய்கிறாய்...' என விசாரித்து, விளக்கம் கூறி அழைத்துச் சென்றார். பின், 'தவறு செய்யாவிட்டால், பயமின்றி நடந்ததை தைரியமாக பேச வேண்டும். பிரச்னை வந்தாலும் எதிர் கொள்ள வேண்டும்...' என்று அறிவுரைத்து நம்பிக்கை ஊட்டினார்.
தற்போது, என் வயது, 20; இளங்கலை பட்டம் பெற்று, டேட்டா சயின்ஸ் தொடர்பாக பயிற்சி எடுத்து வருகிறேன். அந்த ஆசிரியையின் அறிவுரையை மனதில் பதித்து அஞ்சாமல் நிமிர்ந்து நிற்க பழகியிருக்கிறேன்.
- பரணி செல்வராஜ், திண்டுக்கல்.